கணினி தொழில்நுட்பம், நிரல் (Programme) உருவாக்குதல் குறித்து சுவையான குட்டிக் கதைகள் உள்ளன. ஜென் கதைகளின் பாணியில் இருக்கும் இவை ஜெஃப்ரி ஜேம்ஸ் எழுதிய "தி தாவோ ஆஃப் புரோகிராமிங்" என்ற தொகுப்பில் இருக்கின்றன.
மானேஜரைக் காப்பாற்றிய புரோகிராமர்
ஒரு கம்பெனியில் ஒரு மானேஜரை வேலை விட்டுத் தூக்குவது என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அவருக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு புரோகிராமர் புதிதாக ஒரு புரோகிராமை எழுதினார். அந்த புரோகிராம் பிரபலமடைந்து நிறைய விற்பனை ஆனது. எனவே இதன் விளைவாக அந்த மானேஜரின் தலை தப்பித்தது.
மானேஜர் அந்த புரோகிராமருக்கு போனஸ் கொடுக்க முயற்சி செய்தார். புரோகிராமர் வாங்க மறுத்துவிட்டார். "சுவாரஸ்யமான கான்செப்ட்டாக இருக்கிறதே என்றுதான் அந்த புரோகிராமை எழுதினேன். எனவே நான் ஒரு சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை" என்றார் புரோகிராமர்.
இதைக் கேட்ட மானேஜர், "இந்த புரோகிராமர் அற்பமான பதவியில் இருந்தாலும் ஒரு ஊழியனின் கடமையை ஒழுங்காகப் புரிந்து வைத்திருக்கிறான். இவனை மானேஜ்மென்ட் கன்சல்டன்ட் என்கிற மகத்தான பதவிக்கு உயர்த்துவோம்" என்றார்.
மானேஜர் புரோகிராமரிடம் இதைச் சொன்னபோது அவர் மீண்டும் மறுத்து இப்படிச் சொன்னார் : "நான் புரோகிராமிங் செய்வதற்காகத்தான் உயிர் வாழ்கிறேன். எனக்குப் பதவி உயர்வு கொடுத்துவிட்டால் நான் மற்றவர்கள் நேரத்தை வீணாக்குவதைத் தவிர உருப்படியாக வேறெதுவும் செய்ய மாட்டேன். சரி, நான் போகலாமா? நான் ஒரு புரோகிராம் எழுதிக் கொண்டிருக்கிறேன்."
வேலை நேரம்
ஒரு மானேஜர் தன் புரோகிராமர்களிடம் சொன்னார் : "உங்கள் வேலை நேரத்தைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கள் காலை ஒன்பது மணிக்கு வந்து மாலை ஐந்து மணிக்குக் கிளம்ப வேண்டும்." எல்லா புரோகிராமர்களும் இதைக் கேட்டு கடுப்பானர்கள். அவர்களில் பலர் உடனே ராஜினாமா செய்தார்கள்.
எனவே அந்த மானேஜர் சொன்னார் : "ஓ.கே., அப்படியென்றால் உங்கள் வேலை நேரத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ப்ராஜெக்ட்களை நேரத்தில் முடித்துவிட வேண்டும்." இந்த ஏற்பாட்டில் திருப்தி அடைந்த புரோகிராமர்கள், பகலில் வந்து அடுத்த நாள் அதிகாலை வரை வேலை செய்யத் தொடங்கினார்கள்.
ஒரு ப்ராஜெக்ட்டை முடிக்க ஆகும் நேரம்
ஒரு மானேஜர் ஒரு டாப் புரோகிராமரிடம் போனார். ஒரு புதிய அப்ளிகேஷனை உருவாக்குவதற்கு என்னென்ன தேவை என்ற விபரங்கள் அடங்கிய டாக்குமென்ட் ஒன்றைக் காட்டினார். "இந்த சிஸ்டத்தை வடிவமைக்க ஐந்து புரோகிராமர்களை நியமித்தால் இந்த வேலை முடிய எவ்வளவு காலம் ஆகும்?" என்று டாப் புரோகிராமரைக் கேட்டார்.
"ஒரு வருடம் ஆகும்" என்று டாப் புரோகிராமர் உடனே பதிலளித்தார்.
"ஆனால் இந்த சிஸ்டத்தை நாம் உடனடியாக முடித்தாக வேண்டுமே! நான் அதற்கு 10 புரோகிராமர்களைப் போட்டால் எத்தனை நாள் ஆகும்?" என்றார் மானேஜர்.
டாப் புரோகிராமர் எரிச்சல் அடைந்தார். "அப்படியென்றால் இரண்டு வருடம் ஆகும்" என்றார்.
"100 புரோகிராமர்களை நியமித்தால்?"
டாப் புரோகிராமர் தோளைக் குலுக்கினார். "பிறகு அந்த டிசைனை செய்து முடிக்கவே முடியாது."
உண்மை எதில் இருக்கிறது?
ஒரு புரோகிராமிங் ஞானி உண்மையின் தன்மையைப் பற்றி தனது இளம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
"உண்மை என்பது எல்லா சாஃப்ட்வேர்களிலும் பொதிந்திருக்கிறது - அவை எவ்வளவு அற்பமானவையாக இருந்தாலும் சரி" என்றார் ஞானி.
"உண்மை கையடக்க கால்குலேட்டரில் இருக்கிறதா?" என்றான் ஒரு சீடன்.
"இருக்கிறது" என்றார் ஞானி.
"உண்மை ஒரு வீடியோ கேமில் இருக்க முடியுமா?" என்றான் அந்த சீடன்.
"அது வீடியோ கேமிலும் இருக்கிறது" என்றார் ஞானி.
"உண்மை கம்ப்யூட்டரில் இருக்கும் chip-ல் இருக்கிறதா?"
இதைக் கேட்ட ஞானி செருமிக்கொண்டார், லேசாக நெளிந்தார். பிறகு சொன்னார் : "இன்றைய பாடம் முடிந்தது."
பெரிய கம்பெனி
ஒரு சீடன் தனது புரோகிராமிங் குருவைக் கேட்டான் : "ஒரு கம்பெனி மற்ற கம்பெனிகளை விட மிகப் பெரிதாக இருக்கிறது. குள்ளர்களுக்கு இடையில் ஒரு ராட்சஸன் போல் அது தனக்குப் போட்டியான நிறுவனங்களை விட மிகவும் உயர்ந்திருக்கிறது. அதன் பிரிவுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டால் கூட அந்த ஒரு பிரிவே தனி கம்பெனியாக இயங்கலாம். இது எப்படி நடக்கிறது?"
குரு பதில் சொன்னார் : "ஏன் இப்படி முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய்? அந்த கம்பெனி ரொம்பப் பெரிதாக இருப்பதால் பெரிதாக இருக்கிறது, அவ்வளவுதான். அது ஹார்டுவேரை மட்டும் தயாரித்தால் யாரும் அதை வாங்க மாட்டார்கள். அது சிஸ்டம் மெயின்டெனன்ஸ் மட்டும் செய்தால் மக்கள் அந்த கம்பெனியை ஒரு வேலைக்காரனைப் போல் நடத்துவார்கள். ஆனால் அது இந்த எல்லா விஷயங்களையும் சேர்த்து செய்வதால் மக்கள் அதைக் கடவுளைப் போல் நினைக்கிறார்கள்! அது போராட முயற்சி செய்யவில்லை. எனவே அது பிரயத்தனம் இல்லாமலே ஜெயிக்கிறது."
No comments:
Post a Comment