பெரிய வியாழனில் தோன்றிய தேவநற்கருணை


நற்கருணை அன்பின் வெளிப்பாடு; அருள் வாழ்வின் ஒற்றுமையின் சின்னம்; வாழ்வின் மையம், ஆன்மீக உறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

உலகின் மீது அன்பு கொண்ட இறைவன் தன் ஒரே மகனை உலகின் மீட்புக்காக உலகிற்கு அனுப்பினார். அன்பே உருவான இயேசு தம் வாழ்வாலும் வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினார். ஏனெனில் இயேசு ஒருவரே சொன்னதை செய்தவரும் செய்ததை சொன்னவராகவும் திகழ்கின்றார்.

உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு கூட இருப்பேன் என்று சொன்னவர், இறுதியில் அன்பின் சின்னமாக தமது இருப்பின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இது பெரிய வியாழன் அன்று நடைபெற்ற புனிதமான நிகழ்ச்சியாகும்.

மனிதம் மலர வேண்டும் மானுடம் வாழ வேண்டும் என்பதே இறை மகன் இயேசுவின் இலட்சியக் கனவு. கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்தார். கிறிஸ்துவின் பிரசன்னமே நற்கருணை பிரசன்னம். உலக இறுதி வரை வாழ்வோம்.

அனைவரும் மீட்புபெற நற்கருணையை உண்டாக்கினார். அநீதியும் அடக்குமுறையும் அதிகார அத்துமீறல்களும் ஒடுக்குவதும் ஓதுக்குவதும் அறவே இல்லாத ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கவே இயேசு தன்னை அர்ப்பணித்தார்.

இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு நண்பர்களோடு கடைசி இராவுணவை உட்கொண்டார். தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று இயேசு அறிந்திருந்தார். இராவுணவு நடைபெறலாயிற்று.

இயேசுவைக் காட்டிக் கொடுக்குமாறு சீமோனின் மகளான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கவே அலகை தூண்டியிருந்தது.

நண்பர் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம். நாம் நம் அண்ணன் - தம்பியோடு பேச்சுவார்த்தை இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களை அழைக்கும் போது அண்ணன் அல்லது தம்பி என்றுதான் அழைக்கின்றோம்.

ஆனால் நாம் பிறரோடு பேசாமல் இருந்தால் அவர்களை நண்பர்கள் என்று அழைப்பதில்லை அழைக்கவும் முடியாது. நாம் இயேசுவை மறுதலித்தாலும் அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை நண்பர்கள் என்றே அழைக்கிறார். இந்த வார்த்தைக்கு ஏற்ற வாழ்வு நம்மிடம் இருக்கிறதா...?

பணிக்குருத்துவத்தை ஏற்படுத்திய நாளும் இதுவே. குருக்களுக்கான ஆண்டாக இவ்வாண்டை நினைவுகூரும் நாம், குருக்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

உலகை வெறுத்து எமக்கு அப்பால் நான்கு சுவர்களுக்குள் பேசாமல் இருந்த காலம் போய் இன்று மக்கள் மத்தியில் பணிவிடை புரிய வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தப்படுகின்ற கால கட்டம்.

வேகமாக வளர்ந்து வரும் நுகர்வுக் கலாசாரமும் உலக மதிப்பீடுகளும் குருக்களை மட்டும் தாக்காது என்பதில் நியாயமில்லை. அவர்களும் மனிதர்கள், ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்கள். எனவே, தவறலாம் தவறுகளை களைந்து மீண்டும் புண்ணிய வாழ்வில் அடியெடுத்து வைக்க அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.

திருச்சபை என்ற மாபெரும் குடும்பத்தில் அவர்களும் உறுப்பினர்கள். நம் பிள்ளை தவறு செய்தால் நாலு பேருக்கு மத்தியில் விளம்பரப்படுத்தி அவர்களை கேவலப்படுத்துவோமா; நிச்சயம் இல்லை.

அதுபோல அவர்களையும் நினைத்து மன்றாடுவோம். பணிவிலும் மகிழ்ச்சியிலும் பணிபுரிய குருக்களும் முன்வர வேண்டும். நாமும் எமது பொதுக் குருத்துவ அழைத்தலை புரிந்து கொள்ள வேண்டும். இதையே பெரிய வியாழன் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.