பாம்பு கடித்தால் சற்றும் பயப்படாத மக்களைக் கொண்ட ஒரு ஊர்............


பாம்பு கடித்தால் சற்றும் பயப்படாத மக்களைக் கொண்ட ஒரு ஊர் கரூர் பக்கம் உள்ளது. இங்குள்ள பாம்பலம்மன் கோவிலுக்குப் போய் சிறிது நேரம் அமர்ந்திருந்தால் விஷம் முறிந்து விடும் என்கின்றனர் இவர்கள்.

கரூரிலிருந்து சுமார் 35 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது லெட்சுமணபட்டி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே பசுமை. அடர்ந்த வயல்வெளி. அதற்கு நடுவில் உள்ளது அழகிய பாம்பலம்மன் கோவில்.

பாம்பலம்மன் கோவிலுக்குள் எட்டிப் பார்த்தால் பெரும் கூட்டம். அத்தனை பேரும் ஜாலியாக பேசிக் கொண்டும், படுத்துக் கொண்டும் இருந்தனர். இவர்கள் எல்லாம் பக்தர்கள் இல்லை, பாம்பு கடித்து 'சிகிச்சைக்காக' வந்தவர்கள்.

பாம்பு கடித்தால் எல்லோரும் டாக்டரிடம் போவார்கள். ஆனால் இந்தப் பகுதியில் மட்டும் பாம்பு கடித்தால் பாம்பலம்மன் கோவிலுக்கு வருவதுதான் வழக்கமாம்.

இதுகுறித்து பாம்பு கடித்து, கோவிலில் அமர்ந்திருந்த நாகராஜன் என்பவரிடம் கேட்டபோது, இந்த சாமிக்கு சக்தி அதிகம். நல்ல பாம்பு, சாரைப் பாம்பு, கட்டு விரியன், கொம்பேரி மூக்கன்னு எந்த பாம்பு கடித்தாலும் உடனே இந்த கோவிலுக்கு வந்தால் உயிர் பிழைத்து விடலாம்.

கோவிலுக்கு வந்ததும், பூசாரியிடம், கடித்த பாம்பு எப்படி இருந்தது, எங்கே கடித்து என்று சொன்னால் அவர் பாம்பலம்மன் முன்பு நம்மை அழைத்துப் போய் நிற்க வைத்து சாமிக்கு பூஜை செய்வார்.

வேப்பிலையால் மந்திரிப்பார், சாமி தீர்த்தம் தருவார். அதை குடித்தால் உடனே மயக்கம் எல்லாம் பறந்துவிடும்.அதன் பின்னர் உடல் முழுக்க வேப்பிலை அரைத்து பூசி விடுவார்கள். உப்பு போடாத, பச்சரிசிப் பொங்களை சாப்பிட கொடுப்பார்கள். அதை சாப்பிட்ட பின்னர் பாம்பு விஷம் இறங்கி குணமடைந்து விடுவோம்.

பாம்புக்கு தகுந்த மாதிரி 3 நாள், 7 நாள், 18 நாள் என விரதம் இருக்கனும். இதுக்கு தீர்த்தம் போடுவதுன்னு பேரு. இது எதற்குமே காசு வாங்க மாட்டார்கள். அனைத்துமே இலவசம் என்று படு டீடெய்லாக பாம்பு விஷ முறிவு வைத்தியத்தை விவரித்தார்.

இந்த கோவிலைப் பற்றி தெரிந்து பல ஊர்களில் இருந்து மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். கரூர் மட்டும் இன்றி அருகில் உள்ள குளித்தலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற வெளி ஊர்களில் இருந்து எல்லாம் வருகிறார்கள். இதனால் இந்த கோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.

தினமும் கூட்டம் அலை மோதினாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலுக்குள் நிற்க முடியாத அளவு கூட்டம் இருக்கும்.பாம்பு கடி மட்டும் இல்லாமல் கடன் பிரச்சனை, அரசாங்க வேலை வேண்டுதல், சொத்து பிரச்சனை, குழந்தை பாக்கியம் வேண்டுதல் என்று கூடுதல் வேண்டுதலும் உண்டாம். அதுவும் பலித்து விடுவதால் தான் இவ்வளவு கூட்டம் என்கிறார் ராமசாமி என்ற பக்தர் .

பாம்பலம்மன் கோவிலுக்கு செல்லும் பலர் தங்களது பிராத்தனை நிறைவேறியதும் தங்களது வசதிக்கு தக்கவாறு கோவிலுக்கு வேல் வாங்கி வைப்பது, உண்டியலில் காணிக்கை செலுத்துவது, நாடகம் போடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.

இப்படி வேண்டிக் கொள்பவர்கள் சித்திரை மாதத்தில் இந்த கோவிலுக்கு சென்று ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாள் என சுமார் 90 நாட்களுக்கு மேல் நாடகம் போட்ட வலராறும் உண்டு என்று சொல்கிறார் லெட்சுமணம்பட்டியைச் சேர்ந்த வீராசாமி என்ற 65 வயது பெரியவர்.

பாம்பலம்மன் கோவிலுக்கு பாம்பிடம் கடி பட்டவர்கள் சென்றால் உயிர் பிழைக்கும் அதிசியம் பற்றி கரூரில் உள்ள ஒரு சில டாக்டர்களிடம் விசாரித்தபோது நம்மை ஆச்சர்ய பார்வை பார்த்து,

நீங்க சொல்வது போல நானும் கேள்விப்பட்டுள்ளேன். வேப்பிலையும், மஞ்சளும் சில பாம்புகளின் விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டவை. இதுக்கு விஷஹராம்னு பேர் உண்டு. இது எல்லா பாம்பு கடிக்கும் கேட்குமா என தெரியவில்லை என்றார்.

வித்தியாசமான ஊர்தான்.

1 comment:

Anonymous said...

unmaidhan