தோனி அடித்த ஒவ்வொரு ஓட்டத்தின் மதிப்பும் எவ்வளவு தெரியுமா?

ஐ.பி.எல்.போட்டியில் சென்னை அணியின் கப்டன் தோனி அடித்த ஒவ்வொரு ஓட்டத்தின் மதிப்பும் எவ்வளவு தெரியுமா? வாயைப் பிளக்க வேண்டாம். ஒன்றரை இலட்சம் ரூபா.
கடந்த பெப்ரவரியில் வீரர்களை ஏலம் எடுத்தபோது தோனி 6 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவர் 14 இனிங்ஸ்களில் 414 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரியாக அவரது ஒரு ஓட்டத்தின் மதிப்பு 1,44,927 ரூபா.

இப்போட்டியிலேயே அதிக ஒட்டம் எடுத்தவர் ஷோன் மார்ஷ். ஆனால், அவர் தோனி அளவுக்கு அதிர்ஷ்டசாலி இல்லை. வெறும் 12 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் 616 ஓட்டங்களை விளாசினார். அவரது ஒரு ஓட்டத்தின் மதிப்பு வெறும் 1948 ரூபா தான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் , ஏலத்தின் முதல் 2 சுற்றுகளில் மார்ஷை யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை. பின்னர் "பெரிய மனதுடன்' பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரொம் மூடி அவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்.

ஆனால், மார்ஷ?க்கு அதிக தொகை கிடைக்கவில்லை என்றாலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடியதால் ஒரு நாள் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

2.9 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்ட கௌதம் கம்பீர் (டெல்லி அணி) 534 ஓட்டங்களை எடுத்தார். அவர் அடித்த ஒவ்வொரு ஓட்டத்தின் மதிப்பு 54,307 ரூபா. 3.9 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர் சனத் ஜெயசூரியா (மும்பை ) 14 போட்டிகளில் 514 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஓட்டத்தின் சராசரி மதிப்பு ரூ.75,875.

பந்துவீச்சாளர்களில் சொஹைல் தன்வீர் (ராஜஸ்தான்) 22 விக்கெட்டுகளை (சராசரி 12.09) வீழ்த்தினார். ரூ. 40 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டின் மதிப்பும் ரூ.1,81,818. ஆனால், தன்வீர் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் துடுப்பாட்டத்திலும் சில நேரங்களில் உபயோகமாக விளங்கினார். குறிப்பாக இறுதி ஆட்டத்தில் வெற்றி ஓட்டத்தை அவர்தான் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ராஜஸ்தான் கப்டன் ஷேன் வோர்ன் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் வீழ்த்திய விக்கெட்டின் சராசரி மதிப்பு ரூ.9,47,368.
ஆனால், வோர்ன் வெறும் பந்துவீச்சாளராக மட்டும் இல்லாமல் அணியின் கப்டனாக அபாரமாக வழிநடத்தினார். பயிற்சியாளராகவும் இருந்தார்.

No comments: