நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வம் தெரிவு

நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வமாக ஷரீயா பஜ்ராசார்யா என்ற 6 வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் உயிர் வாழும் பெண் தெய்வம் என்ற நிலையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பெண் தெய்வத்தின் நிலைக்கு இச்சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின், உயிர் வாழும் பெண் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சிறுமி என்ற பெருமையை ஷரீயா பெறுகிறார்.

நேபாள பாரம்பரிய வழக்கங்களின் பிரகாரம், பல்வேறு பௌதீக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தலைநகர் காத்மண்டுவிற்கு அருகிலுள்ள பக்தாபூரில் வசிக்கும் மேற்படி சிறுமி உயிர் வாழும் பெண் தெய்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் மன்னருக்கான மதகுருவே உயிர்வாழும் பெண் தெய்வத்திற்கான நியமனத்தை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது.

தற்போது மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், புதிய உயிர்வாழும் பெண் தெய்வம் தொடர்பான அங்கீகாரத்தை யார் வழங்குவது என்பதை மேற்படி விவகாரம் சம்பந்தமான நம்பிக்கை சபையின் தலைவர் விரைவில் தீர்மானிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது

No comments: