திருப்பூரில் குழந்தையை ரூ.40க்கு தாய் விற்கவில்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தாயிடமே குழந்தை ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் கலா. இவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தனது மகன் அழகேசனுடன்(6) தனியாக வசித்து வந்தார். கட்டிட வேலைக்குச் சென்று கலா பிழைப்பு நடத்தி வந்தார்.
கலாவுக்கு கடந்த 22ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆன கலா, குழந்தையுடன் திருப்பூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது கலாவுடன் கட்டிட வேலை செய்யும் செல்வி என்பவர் அங்கு வந்தார். அவரிடம் குழந்தையை காட்டிய கலா, ‘இதை எப்படி வளர்ப்பது என தெரியாமல் தவிப்பதாக’ புலம்பியுள்ளார். தானே வளர்ப்பதாக கூறியதால் செல்வியிடம் குழந்தையை கொடுத்தார் கலா.
அசதியாக இருந்த கலாவிடம் ஏதாவது சாப்பிட்டு விட்டு போ என கூறி 40 ரூபாயை செல்வி கொடுத்துள்ளார். குழந்தையுடன் வீட்டுக்கு வந்த செல்வியிடம் அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். அதன் பிறகு குழந்தையை ரூ.40க்கு செல்வி வாங்கி வந்ததாக தகவல் பரவியது. குழந்தையை தத்து எடுக்க அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டுள்ளனர். இதுகுறித்து செல்வி, கலாவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கலா மற்றும் செல்வியை, பெருமாநல்லு£ர் போலீசில் நேற்று முன்தினம் ஒப்படைத்தார். விசாரணையில் குழந்தையை பணத்துக்காக விற்கவில்லை என தெரிந்தது. இதையடுத்து, குழந்தையை கலாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment