2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்...!

2013 ஆம் ஆண்டு சூரியனில் ஏற்படும் பாரிய வெடிப்பொன்றினால் வெளிவரக்கூடிய பாரிய தீச்சுவாலைகள் காரணமாக பூமியில் மின் விநியோகம் முதலானவை தடைப்பட்டு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் நேற்று எச்சரித்துள்ளனர்.

நூறு வருடங்களுக்கு ஒரு தடவை இத்தகைய பாரிய வெடிப்பு சூரியனில் ஏற்படலாம் எனவும் இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுடன் தொலைதொடர்புத்துறை செயலிழப்பு, விமானங்கள் பறக்க முடியாத நிலை, இணையத்தளங்கள் செயலிழப்பு போன்றன ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றிய பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், அண்மைக்காலத்தில் 1859ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்டதற்கு ஒப்பான அளவில் பாரிய வெடிப்பொன்று மீண்டும் ஏற்பட்டால் அளவிட முடியாத சேதங்கள் ஏற்படலாம் என கூறினார்.

தொழில்நுட்பத்தில் தங்கியுள்ள நவீன சமூகம் இத்தகைய தாக்கங்களால் அதிக பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக உள்ளது எனவும் இத்தகைய நாசங்களுக்கு எதிரான தந்திரோபாயங்களை விஞ்ஞானிகள் வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.