தமிழக அரசியலில் "கிங்மேக்கர்" விஜயகாந்த்

ஒரு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு கூடும் கட்சியின் பொதுக் குழுவில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அடுத்து எந்த அணிக்கு போகப் போகிறது அந்தக் கட்சி என்ற முன்னோட்டம் தெரியும். ஆனால், இது எதுவுமே தெரியாமல் அமைதியாக முடிந்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு!

தி.மு.க.விலிருந்தோ அ.தி.மு.க.விலிருந்தோ பல கட்டங்களில் விலகியிருக்கிறது பா.ம.க. அப்போது நடைபெற்ற பொதுக் குழுக்களைப் போல் எந்த பரபரப்பும் இன்றி இப்பொழுது கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.

"எங்களை தன்னிச்சையாக தி.மு.க. வெளியேற்றிவிட்டது" என்பதை மட்டுமே தீர்மானமாக வடித்து,"காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கிறோம்" என்று முடிவு செய்திருக்கிறது பா.ம.க.

இந்த நேரத்தில் தி.மு.க. கைவிடாது "விலக்கப்பட்டால் அ.தி.மு.க. சேர்த்துக் கொள்ளும்" என்ற நினைப்பிலேயே கடந்த சில மாதங்களாக டாக்டர் ராமதாஸ் தி.மு.க. எதிர்ப்பு என்ற ஆயுதத்தை ஆக்ரோஷமாக எடுத்தார்.

ஆனால், பா.ம.க.வின் நினைப்புக்கு ஏற்றமாதிரி தி.மு.க.வும் அ.தி.மு.கவும் நடந்துகொள்ளவில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்?

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ஒரு வலிமையான மாற்று என்பதை முதலில் பரிசோதனை செய்து பார்த்தவர் மூப்பனார். ராஜீவ் உயிருடன் இருந்தபோதே தமிழகத்தில் 1989 இல் தனியாக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. சுமார் 47 இலட்சம் வாக்குகளைப் பெற்று பிரதான மாற்று சக்தியானது.

இந்த வாக்கு வங்கி காங்கிரஸ் கட்சிக்கு தமிழக அரசியலில் "கிங் மேக்கர்" ரோலை பெற்றுத் தந்தது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அதன் பிறகு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் போட்டி போட்டுக்கொண்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தன.

அந்த அளவுக்கு ஒரு "காங்கிரஸ் ஈர்ப்பு சக்தி' இந்த இரு கட்சிகளிடமும் இருந்தது. பிறகு கழகங்களுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் காங்கிரஸின் ?கிங் மேக்கர் ரோல்" கரையத் தொடங்கியது.

அந்த இடத்தை புதிதாக முளைத்த பா.ம.க.வும் ம.தி.மு.க.வும் பங்கு போட்டுக் கொள்ள முயற்சி செய்தன. 1989 பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. கால் வைத்தது. 1996 சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. குதித்தது. இரு கட்சிகளும் கூட்டாக ஏறக்குறைய 30 இலட்சம் வாக்குகளைப் பெற்றன. இதனால் ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் இந்த ?கிங் மேக்கர்' ரோலை ஓரளவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இந்நிலையில் காங்கிரஸே இல்லாத அணியில் ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் இருந்தால் போதும்! வெற்றி பெற்று விடலாம் என்ற தேர்தல் ஃபார்முலாவை 1998 இல் முதலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கண்டுபிடித்தார்.

அதை ஆதாரமாக வைத்து 1999, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் "நாங்கள் இல்லாத அணி வெற்றி பெறாது" என்று டாக்டர் ராமதாஸும் வைகோவும் குரல் கொடுத்தார்கள். இதுவே ஒரு கட்டத்தில் இந்த இருவரில் யார் பெரியவர்? என்ற விவாதத்திற்கு எல்லாம் வித்திட்டது.

ஆனால், சென்ற சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களத்திற்கு வந்த தே.மு.தி.க. சுமார் 27 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. பெற்ற இந்த வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளிடம் இருந்த "கிங் மேக்கர்' ரோலை கைப்பற்ற உதவியது.

2006 தேர்தல் முடிவுகள் விஜயகாந்த்தை "கிங் மேக்கர்" ரோலுக்கு அருகாமையில் கொண்டு வந்து அமர்த்திவிட்டது. அதனால் இதுவரை வீற்றிருந்த நாற்காலியை விட்டுச் செல்ல வேண்டிய நிலையில் ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் இருக்கின்றன.

இந்த விஷயத்தை நன்கு உணர்ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர்

வைகோ, "அ.தி.மு.க.வுடனான கொள்கை முரண்பாடு பற்றிக் கவலைப்படவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தில் நாம் உரிமை கொண்டாட முடியவில்லையே என்று நினைக்கவில்லை. ஈழத் தமிழர் பற்றி வேகமாகப் பேச முடியவில்லையே என்று வருந்தவில்லை. மண்டல மாநாட்டிற்கு ஜெ. வரவில்லை என்று கருதவில்லை. நாம் அ.தி.மு.க. அணியில் நீடிப்போம்' என்ற உறுதியுடன் அமைதி காக்கிறார்.

ஆனால், டாக்டர் ராமதாஸோ, எனக்கு கொள்கை இருக்கிறது. உங்களுடன் (தி.மு.க.) எல்லா கொள்கையிலும் ஒத்துப் போக முடியாது. எனக்குத் தோல்வி இல்லை. வெற்றி மேல் வெற்றிதான். நான் இன்னும் "கிங் மேக்கர்தான்" என்பதை நிலைநாட்ட அறிக்கை மேல் அறிக்கை விட்டு தி.மு.க.விடம் வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் பா.ம.க.வை வளைத்துப் போடுவதைவிட, தே.மு.தி.க.வுடன் பேசுவதே சரியான அணுகுமுறை என்று தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கருதத் தொடங்கிவிட்டன. முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தமட்டில் மீண்டும் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் கைப்பற்ற ஒரு "கூட்டணி ஃபார்முலா" வேண்டும். அதை மனதில் வைத்து இப்போதே பத்து தொகுதிகளை ரெடி பண்ணிவிட்டார். (பா.ம.க. விலகியதால் 6, ஏற்கனவே ம.தி.மு.க. விலகியதால் 4).

முதல்வருக்கு டெல்லி ஆசை கிடையாது. அதாவது பிரதமராக வேண்டும் என்ற ஆசை கிடையாது. இந்த 10 தொகுதிகளை வைத்துக்கொண்டு விஜயகாந்தை தி.மு.க.வுடன் இல்லாவிட்டாலும் காங்கிரஸுடன் அணி சேர்க்க முயற்சி செய்வார் என்றே தெரிகிறது. அதனால்தான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஆர்க்காடு வீராச்சாமியை முன்னிறுத்தி பா.ம.க.வுடன் மோதினார்.

அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் டெல்லி ஆசையும் இருக்கிறது. பிரதமர் பதவிக்கு உரிய வேட்பாளர் அவர் என்பதை அ.தி.மு.க.வினர் பொதுக் குழுக் கூட்டங்களில் கூட பேசியிருக்கிறார்கள்.

அதனால் அவரும் 40க்கு 40 தொகுதிகளை வெல்ல என்ன ஃபார்முலா? என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் காங்கிரஸை முதலில் எதிர்பார்க்கிறார். அதனால்தான் தி.மு.க. பா.ம.க. உறவு முறிவை "நமது எம்.ஜி.ஆர்" இதழில் கடைசிப் பக்கச் செய்தியாக்கியவர், "இந்திரா காந்தியை கொல்ல சதி செய்தது தி.மு.க' என்ற ராமதாஸின் பொதுக்குழு குற்றச்சாட்டை முதல் பக்கச் செய்தி ஆக்கியுள்ளார்.

இதனால் பா.ம.க.வுக்கு வரவேற்பு என்று அர்த்தமில்லை. தி.மு.க. காங்கிரஸ் உறவில் உரசலை ஏற்படுத்த பா.ம.க.வின் பேச்சைப் பயன்படுத்துகிறார் அவ்வளதுதான்! காங்கிரஸ் வராத பட்சத்தில் ஜெ.யின் கவனம் தே.மு.தி.க. பக்கம்தான் திரும்பும். அப்போதும் விஜயகாந்த்தான் எதிர்பார்க்கப்படும் கூட்டணிக் கட்சியாக இருப்பார்.

ஆக, சென்ற 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்திற்கு "கிங் மேக்கர்" ரோல் கிடைத்தது. அந்த வாக்குகளை அப்படியே வைத்திருக்கிறாரா விஜயகாந்த் என்பதைவிட, வைகோ, ராமதாஸ் ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய "கிங் மேக்கர்" ரோல் இன்னும் அவரை விட்டு விலகவில்லை.

பா.ம.க.வை தி.மு.க.வே விலக்கியதும் விலக்கப்பட்ட பிறகு பாய்ந்து பிடித்துக் கொள்ள அ.தி.மு.க. மறுப்பதும் இந்த உண்மையைப் பிரதிபலிக்கின்றன.

No comments: