டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!

ராட்சத விலங்கான டைனோசர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது பூமியைத் தாக்கிய ராட்சத எரிநட்சத்திரம் தான் என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.பூமியில் முன்பு வலம் வந்து கொண்டிருந்த ராட்சத பாலூட்டிகளான டைனோசர்கள் எப்படி மறைந்தன என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

பூமியின் தென் பகுதியில் (இப்போது இந்தியா உள்ள பகுதி) மிகப் பெரிய அளவிலான எரிமலைகள் வெடித்துச் சிதறியதால் டைனோசர்கள் அழி்ந்ததாக ஒரு கருத்தும், எரி நட்சத்திரம் தாக்கியதால்தான் டைனோசர்கள் இறந்ததாக இன்னொரு கருத்தையும் விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர்.

எரிமலை வெடித்ததாக கூறும் விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைக்கு தற்போது 41 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று தீர்வைக் கூறியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு சயின்ஸ் இதழில் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். தற்போது ஆய்வு முடிவை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது ஒரு ராட்சத எரிநட்சத்திரம். இதன் காரணமாக பூமியில் இருந்து வந்த பாதி அளவிலான உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. அதில் டைனோசர்களும் ஒன்று.

பூமியைத் தாக்கிய அந்த எரிநட்சத்திரத்தின் அளவு 15 கிலோமீட்டர் அகலம் உடையதாகும். தற்போது மெக்சிகோ உள்ள பகுதி அன்று சிக்கக்ஸிலப் என்று அறியப்பட்டது. அந்த இடத்தில்தான் இந்த எரிகல் வந்து மோதியது.

இதன் காரணமாக பூமிப் பந்தின் பெரும் பகுதியில் பெரும் தீப்பிழம்புகள் தோன்றின. 10 ரிக்டருக்கும் மேலான நிலநடுக்கங்கள் பூமியை சிதறடித்தன. கண்டங்களில் பெருமளவில் நிலமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் ராட்சத சுனாமிகள் தோன்றி பூமிப் பரப்பில் பாதியை அழித்து விட்டது.

ஹீரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டின் சக்தியை விட பல கோடி மடங்கு அதிக அளவிலான வேகத்துடனும், சக்தியுடனும் அந்த ராட்சத எரிநட்சத்திரம் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால்தான் பூமியே சிதறுண்டு போயுள்ளது.

இந்த தாக்குதலில் பூமியில் இருந்து வந்த உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை பூண்டோடு அழிந்து போய் விட்டன. அவற்றில் டைனோசர்களும் ஒன்று.

எரிநட்சத்திரம் தாக்கியதால் ஏற்பட்ட பெரும் பிரளயத்தால் பூமியின் பெரும்பாலான பகுதிகளை இருள் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான் டைனோசர்கள் அழிந்து போயுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஜெர்மனி விஞ்ஞானி பீட்டர் ஷூல்ட் கூறுகையில், 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததாக நமக்கு தடயங்கள் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது அப்போது பூமியைத் தாக்கிய எரிநட்சத்திரம்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது.

மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்புகளால் டைனோசர்கள் இறந்ததாக கூற முடியாத அளவுக்கு எங்களது ஆய்வு முடிவுகள் உள்ளன.

டைனோசர்கள் அழிந்த காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பின்னர்தான் மனிதர்கள் சக்தி வாய்ந்த உயிரினங்களாக பூமியில் உருவெடுத்தனர். எனவே இந்தப் பிரளயம், மனித குல வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம் என்றார்.