கமல் பத்து வேடங்களில் நடித்திருக்கும் தசாவதாரம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டில் முடியும் மெகா மாரத்தான். இந்தக் காட்டாற்று வெள்ளத்தில் ஒருவர் உணர்ச்சிகரமான கதையையோ, ஊடுருவித் துளைக்கும் காட்சியையோ எதிர்பார்த்தால் ஏமாற்றமே. ஆற்றில் குதித்தபின் அதன் போக்கில் நீந்துவதுதானே புத்திசாலித்தனம்!
சைவ, வைணவ சண்டையுடன் தொடங்குகிறது தசாவதாரம். சண்டை என்று வந்தபின் செக்கேது... சிலையேது... சிவனை வணங்க மறுக்கும் ராமானுஜ நம்பியை கோவிந்த ராஜ பெருமாள் சிலையுடன் பிணைத்து கடலில் வீசுகிறான் சைவனான குலோத்துங்க சோழன். சோழனால் சமுத்திரத்தில் மூழ்கிய கதை மீண்டெழுவது இருபத்தியோராவது நூற்றாண்டில்.
அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் கோவிந்தன் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். பரவினால் தரணியே நாசமாகும் அந்த வைரசை தீவிரவாதிக்கு விலை பேசுகிறார் கோவிந்தனின் உயரதிகாரி. எதிரி கைக்கு வைரஸ் சென்றுவிடக் கூடாது என்பதால் வைரசைக் கடத்துகிறார் கோவிந்தன். முன்னாள் சிஐஏ ஏஜெண்டான வெள்ளை அமெரிக்கன் பிளெட்சர் வில்லன். கோவிந்தன் ஓட பிளேட்சர் துரத்த மீதி ரீல் முழுவதும் ஜாலியோ ஜிம்கானா!
சில நிமிடங்களே நீடிக்கும் ஆரம்பக் காட்சியில் நம்பியாக வரும் கமலின் நடிப்பும், தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், சோழர் கால அரங்க அமைப்பும், ரேஷமையாவின் கல்லை கண்டால் பாடலும் மாயம் புரிகின்றன. மறக்க நெடுநாள் ஆகும் காட்சியமைப்பு.
கோவிந்தனின் ஓட்டம் அமெரிக்காவில் துவங்கி இந்தியா வந்து சிதம்பரம் வழியாகச் சென்னை சுனாமி பேரலைகளுடன் நிறைவடைகிறது. இந்த நெடும் பயணத்தில் ரா உளவுத்துறை அதிகாரி பல்ராம் நாயுடு, தலித் தலைவர் வின்சென்ட் பூவராகவன், கிருஷ்ணவேணி பாட்டி, ஏழடி உயர கலிபுல்லா கான், ஜப்பான் தற்காப்புக் கலை நிபுணர், பஞ்சாப் பாடகர் அவதார் சிங், ஜார்ஜ் புஷ் எனப் பலவேசம் காட்டுகிறார் கமல்.
சுந்தர தெலுங்கும் கொஞ்சும் தமிழும் கலந்து பல்ராம் நாயுடு உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் நகைச்சுவை சரவெடி. மேனரிசம், தோற்றம், குரல் என அத்தனையிலும் நாயுடுவாகவே மாறியிருக்கிறார் கமல்.
கமலா என்று ஆச்சரியப்படுத்துகிறார் வின்சென்ட் பூவராகவன். கறுப்பு உடம்பில் இருந்து வெளிப்படும் சிவப்புச் சிந்தனைகள் பளீர். எதிரியின் குழந்தைகளைக் காப்பாற்றப்போய் சுனாமியில் உயிர்விடும் பூவராகவனின் முடிவு கண்ணீர்த்துளி. வெள்ளைக்கார வில்லன் பிளெட்சர் (இதுவும் கமல்தான்) வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு. இலக்கைத் தவிர எதையும் மதிக்காத முரட்டுத்தனம். சின்னக் கத்தியும் சேவலின் சிலிர்ப்புமாக
ஆச்சர்யப்படுத்துகிறார். கிளைமாக்சில் பிளெட்சரும் ஜப்பான் கமலும் மோதிக்கொள்ளும் காட்சி ஆக்ஷன் கவிதை. கிருஷ்ணவேணி பாட்டியிடம் மேக்கப் தூக்கல். அவர் உட்பட சில கமல் கேரக்டர்களின் பேச்சு உன்னிப்பாகக் கேட்டாலொழிய புரிவது கடினம். நம்பியின் மனைவி, சிதம்பரம் ஆண்டாள் என அசினுக்கு இரு வேடங்கள். பெருமாள் சிலையுடன் கமலை படமுழுக்க பின்தொடரும் ஆண்டாள், அப்ளாஸ்களை அள்ளிக் கொள்கிறார்.
வில்லனுக்கு உதவி செய்து அநியாயமாக உயிர்விடும் சிஐஏ ஏஜெண்டாக மல்லிகா ஷெராவத். மணக்காத மல்லிகை. பி.வாசு, சந்தான பாரதி, நாகேஷ், ஜெயப்ரதா, கே.ஆர்.விஜயா, வையாபுரி ஆகியோரும் உண்டு. சேஸிங்கின் நடுவே சும்மா வந்து போவதால் சில கமல்கள் மனதைக் கவரவில்லை என்பது கமலின் உழைப்பிற்குப் பேரிழப்பு.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பாடல்களுக்கு இசையமைத்த ஹிமேஷ் ரேஷமையா, பின்னணி இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத், எடிட்டர் தணிகாசலம், கலை இயக்குநர்கள், மேக்கப் கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் ஆகியோருக்குத் தனியே பாராட்டு விழா நடத்தலாம். படத்தின் நிஜமான பலம் தொழில்நுட்பம், கிராஃப்பிக்சில் தூசி முதல் சுனாமி வரை வரவழைத்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் அல்ல உயர்நுட்பம்!
வசனத்தில் காரமும் உண்டு காமெடியும் உண்டு. ஜார்ஜ் புஷ், வைரசின் மீது அணுகுண்டு போடலாமா என போனில் கெத்தாகக் கேட்டுவிட்டு அருகில் இருப்பவரிடம் வைரசின் பெயரைச் சொல்லி அது என்ன என்று கேட்பது உலக நாயக நக்கல். அதேபோல் அசினின், கடவுள் இருக்கார் என்று சொல்லுங்கோ என்ற கெஞ்சலுக்கு, கடவுள் இல்லைனு நான் சொன்னேனா... இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன் என்ற கமலின் பதிலடியும் ஜோர்.
படத்தில் ஹிரோஷிமா, பியர்ல்ஹார்பர் பெயர்களும் வருகின்றன. படம் நெடுக வரும் வரலாற்று விழிப்புணர்வு பிற தமிழ்ப் படங்களில் பார்க்க முடியாதது. அதுபோல ஆதிக்க சாதியினர் பற்றிய விமர்சனம்.
இரண்டு மூன்று கமல்கள் ஒன்றாக வரும் காட்சிகள் நிறைய. சின்ன உறுத்தல்கூட இன்றி அதனைப் படமாக்கிய கே.எஸ்.ரவிக்குமாரின் உழைப்பு பிரேமுக்கு பிரேம் பளிச்சிடுகிறது.
இவ்வளவு இருந்தும் அழுத்தமான கதையும் இருந்திருந்தால்... என்று நினைக்கத் தோன்றுவதே படத்தின் ஒரே பலவீனம். கமல், கே.எஸ்.ரவிக்குமார், ரவிச்சந்திரன் கூட்டணியில் இப்படம் ஒரு மெகா கார்னிவால். அதில் கரைய முடிந்தவர்களுக்கு கொண்டாட்டம் கியாரண்டி!
No comments:
Post a Comment