மின்னல் வேகத்தில் ஓடிய ஜமேக்காவின் உசைன் போல்ட் புதிய உலக சாதனை

மின்னல் வேகத்தில் ஓடிய ஜமேக்காவின் உசைன் போல்ட் 100 மீற்றர் தூரத்தை 9.72 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இவர் அசபா பவெலின் (9.74 விநாடி) சாதனையை தகர்த்தார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் சர்வதேச கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டி நடந்தது. நேற்று முன்தினம் நடந்த 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமேக்காவின் உசைன் போல்ட் அபாரமாக ஓடினார். கடந்த முறை உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 200 மீற்றர் ஓட்டத்தில் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், இம்முறை 100 மீற்றர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று அசத்தினார்.

இத்தூரத்தை 9.72 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். முன்னதாக கடந்தாண்டு செப்டெம்பரில் இத்தாலியில் நடந்த தடகளப் போட்டியில் ஜமேக்காவின் அசபா பவெல் 9.74 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இவரது சாதனையை மற்றொரு ஜமேக்க வீரரே முறியடித்துள்ளார். இப்போட்டியில் இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் டைசன்கே மற்றும் மூன்றாவது இடத்தை டார்விஸ் பட்டேன் பிடித்தனர்.

தனது சாதனை குறித்து போல்ட் கூறுகையில்;
"சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட பெரிதாக நினைக்கிறேன். சாதனை படைப்பேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை", என்றார்.

No comments: