இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பான் போர்க் கப்பல் முதற் தடவையாக சீனா வருகை

இரண்டாம் உலகப் போரின் பின்னர் முதற் தடவையாக ஜப்பானின் கடற்படைக் கப்பலொன்று சீனாவை வந்தடைந்துள்ளது. சீனாவின் போர்க்கப்பலொன்று ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட 7 மாதங்களின் பின்னர் 5 நாள் துறைமுக அழைப்பில் இக் கப்பல் தென்சீன துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடந்த வருடம் இருநாட்டு இராணுவ தலைவர்களுக்குமிடையில் அடையப்பட்ட இணக்கப்பாட்டைத் தொடர்ந்து பரஸ்பர துறைமுக அழைப்புக்கள் விடப்படுகின்றன.

இருநாட்டு உறவிலும் காணப்படுகின்ற பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில் இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. தாக்கியழிக்கும் ரகத்தைச் சேர்ந்த இக் கப்பல் சீனத் துறைமுகத்தை வந்தடைந்ததை சீனத் தொலைக்காட்சியொன்று ஒளிபரப்பியுள்ளது.

இக் கப்பல் கடந்த மாதம் சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்களை காவி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விஜயம் இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையில் அமைந்த நட்புறவை வளர்ப்பதற்கு உதவுமென சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: