ரஜினியின் ஆயுதத்தை பயன்படுத்திய கலைஞர்!

"இதோ, அதோ' என்று எதிர்பார்க்கப்பட்ட "தி.மு.க. பா.ம.க. கூட்டணி விவகாரம்' முடிவுக்கு வந்துவிட்டது.

முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அறிக்கைகள், விமர்சனங்கள், வெளிப்படையான கருத்துகள் என்று தி.மு.க. மீது "போர்' தொடுத்துக் கொண்டிருந்தார் பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ்.

சென்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் வடமாவட்டங்களில் பா.ம.க.விற்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையைச் சமாளித்து பா.ம.க.வை உயிரோட்டமாக வைத்துக் கொள்வதற்கே இப்படியொரு "விமர்சன' ஆயுதத்தைக் கையிலெடுத்தார் ராமதாஸ். ஆனால் அந்த ஆயுதம் அவரை நோக்கியே திரும்பிப் பாய்ந்தது என்னவோ, காடுவெட்டி குருவின் புண்ணியத்தால் மட்டுமே!

காடுவெட்டி குருவின் பேச்சு, தி.மு.க.வினரைக் கொதிப்படைய வைத்தது. அதேநேரத்தில் அப்போது காங்கிரஸ், "இங்கும் அங்குமாக' அல்லாடிக் கொண்டிருந்த நேரம்! "விஜயகாந்துடன் கூட்டணி வைத்தால் என்ன? அ.தி.மு.க. என்ன நிரந்தர எதிரியா?' போன்ற எண்ணங்கள் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதியாக வந்த அருண்குமார் போன்றோரால் எழுப்பப்பட்டன.

அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஒரு பகுதியினரின் (நிதியமைச்சர் ப.சிதம்பரம் உட்பட) ஆதரவும் இருந்தது. அதைத் தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தால் கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் அறிக்கைப் போர் நடந்தது.

இந்த இரு விடயங்களும் காடுவெட்டி குருவின் சி.டி.மீது அதிக அக்கறை காட்ட முடியாமல் தி.மு.க.வைத் தடுத்து நிறுத்தியது. இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் "காங்கிரஸுடன் கூட்டணி' என்ற ஒரு புது ஃபார்முலாவை விதைத்தார் டாக்டார் ராமதாஸ். இந்த விஷயங்கள் எல்லாமே இப்போது கிளியர் ஆகிவிட்டன! காங்கிரஸ் தி.மு.க.வுடன் தான் இருக்கும் என்ற சூழ்நிலை உறுதியாகியுள்ளது.

கர்நாடக தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கும் பெரிய பிரச்சினை இல்லை என்றே தெரிகிறது. ஆனால் தி.மு.க. மீதான டாக்டர் ராமதாஸின் "அட்டாக்' மட்டும் குறையவில்லை என்ற கோபம், தி.மு.க. தலைமைக்கு உண்டு. அதைவிட "தி.மு.க. பா.ம.க. தொண்டர்கள்' மத்தியில் ஆங்காங்கே தொகுதிக்குத் தொகுதி ஒற்றுமை சீர்குலைந்த நிலையில் இருக்கிறது.

இப்படி அனைத்துக் காரணங்களையும் அலசிப் பார்த்த முதல்வர் கருணாநிதி பா.ம.க.வை இப்படியே விட்டால் தனது "லீடர்ஷிப்' மீதே மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தார். அதன் எதிரொலிதான் முரசொலி "சேது' இல்லத் திருமண விழாவில் காடு வெட்டி குருவின் சி.டி.யை "டச்' பண்ணி, ""இப்படிப்பட்ட கட்சியுடன் உறவு தொடருவதுதான் கூட்டணிக்கு இலக்கணம் என்றால் அது பெரிய அவமானம்' என்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார் முதல்வர் கருணாநிதி.

அதற்கு டாக்டர் ராமதாஸிடம் இருந்து, "காடுவெட்டி குரு பேசியதில் எனக்கு உடன்பாடில்லை' என்று வெளிப்படையான மறுப்பு அறிக்கை வரும் என்றே எதிர்பார்த்தார். ஆனால் அவரோ, "அது பொதுக்குழுவில் பேசியது. ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பேசியது' என்பது போல் பதிலளித்து, காடுவெட்டி குருவின் பேச்சை நியாயப்படுத்தினார். அதன்பிறகு தி.மு.க.வின் கடலூர் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதற்கிடையில் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் "கூட்டணிக்குள் ஒற்றுமை வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தினர்.

அதை ஆமோதிக்கும் வகையில் கடலூர் மகளிர் மாநாட்டில் பத்திரிகையாளர் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி, ""இந்த மாநாட்டோடு இவர்களுக்கும் வேறு சில கட்சிகளுக்கும் ஊடல் விளையுமா? கூடல் முறியுமா?' என்ற அந்த எண்ணத்தோடு, அந்த ஆசையோடு கேட்கிறவர்கள் எல்லாம் உண்டு. உங்கள் அவசரத்திற்கு நானும் அவசரப்பட முடியாது. யாரோ சில பேர் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறார்கள் என்பதற்காக அதே பாணியில் நானும் கட்சி நடத்த முடியாது. எல்லாம் 17 ஆம் திகதி உயர்நிலை செயல்திட்டக் குழுவில் முடிவு செய்யப்படும்' என்ற ரீதியில் பேசினார்.

இதன் மூலம் 48 மணி நேரம் பா.ம.க.வுக்கு "டைம்' கொடுத்தார். இந்த அவகாசத்தைப் பயன்படுத்தியாவது காடுவெட்டி குருவின் பேச்சுக்கு ஓப்பனாக டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவிப்பார் என்றே கருதினார் முதல்வர். ஆனால், அந்த வாய்ப்பையும் டாக்டர் ராமதாஸ் நழுவவிட்டார். மாறாக இது தொடர்பாக அப்போது முதல்வர் எழுதிய கடிதத்தையும் வெளியிட்டு, "மார்ச்சில் என் மீது நம்பிக்கை வைத்தவர் இப்போது நம்ப மறுப்பது ஏன்?' என்றே கேள்வி எழுப்பினார்.

அதேநேரத்தில் மத்திய அமைச்சர் அன்புமணியோ, ""அவர் பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கூட்டணி முறிவு பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம்' என்று தி.மு.க. தரப்பிடம் சொல்ல, அவர்களிடமிருந்தோ, "எங்களால் உங்கள் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என்ற உத்தரவாதத்தைத் தருகிறோம். ஏனென்றால் உங்களுக்கும், தி.மு.க.வுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை' என்றே சொல்லியுள்ளார்கள்.

இப்படி பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடுவதற்கு முன்பு திங்கட்கிழமையன்று இரவு, சி.ஐ.டி. நகரில் உள்ள முதல்வர் இல்லத்தில் சீனியர் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இரவு 7.30 மணியிலிருந்து 9 மணி வரை நடைபெற்ற அக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் முதல்வருடன் பா.ம.க. விவகாரம் குறித்து விவாதித்தார்கள். இந்த "சீனியர்கள் கூட்டம்' முடிந்த மறுநாள் (கடந்த செவ்வாய்க்கிழமை) உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காடுவெட்டி குருவின் சி.டி. பற்றிய விபரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, "தலைவரையே விமர்சித்துவிட்டு, அதற்க வருத்தமும் தெரிவிக்காத நிலையில், பா.ம.க.வுடன் கூட்டணியைத் தொடருவதில் அர்த்தமில்லை' என்று ஆணித்தரமாக வாதத்தை வைத்தது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்தானாம்.

இவருக்கும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் ஏற்பட்ட மோதலில்தான் "சேலத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது' என்று அம்மாவட்ட பா.ம.க. முடிவு செய்து முன்பு அறிவித்தது. அதேபோல் அமைச்சர் துரைமுருகனும் கருத்து தெரிவித்துள்ளார். இருவருமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் குழுவில் பேசியவர்கள் அனைவருமே, "தலைவரின் முடிவுதான் இறுதியானது. அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்' என்ற கருத்தை முன்வைத்தார்கள். இதைத் தொடர்ந்து ஒன்பது பக்கத் தீர்மானம் வெளியிடப்பட்டது.

அதில் காடுவெட்டி குருவின் பேச்சும் விபரமாகக் கொடுக்கப்பட்டு, கடைசியில், ""எவ்வளவு இழிவாக, தரக்குறைவாக, தன்மான உணர்வைப் பறிக்கும் விதமாக கேவலப்படுத்தப்பட்டாலும், அப்படிக் கேவலப்படுத்துகிறவர்களோடு உறவை நீடிப்பதுதான் கூட்டணியின் இலக்கணம் என்று ஏற்றுக் கொள்ள இயலாத காரணத்தால், அவர்களையும் (பா.ம.க.) இணைத்துக் கொண்டு இந்தக் கூட்டணியை இனித் தொடர முடியாது என்ற நிலையை இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு வருத்தத்தோடு அறிவிக்கின்றது' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் காடுவெட்டி குருவின் வன்முறைப் பேச்சுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட தீர்மானம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கருத்தை மையமாக வைத்தே இது போன்றதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸுக்கும் ரஜினிக்கும் இதேபோல் பிரச்சினை வெடித்தது. அப்போது "யாருக்கு வாக்களிக்க வேண்டும்?' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல்; இரண்டாவது வன்முறை, டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட் சஸ செயல்களிலும், அராஜகங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாஸை நான் என்னுடைய தனிப்பட்ட பாதிப்பிற்காக எதிர்க்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன்' என்று கூறி, "பா.ம.க. போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்' என்று கேட்டுக் கொண்டார்.

"வன்முறைக்கு ஆதரவு' பற்றிய ரஜினியின் அதே ஆயுதத்தைக் கையிலெடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று "காடுவெட்டி குருவின் வன்முறைப் பேச்சை' காரணம் காட்டி, "பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை' என்று அறிவித்துள்ளார். "கூட்டணி முறிவு' அறிவிப்பின் மூலம், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் அமைவதில் "முதல் மூவ்' பண்ணியுள்ளார். முதல்வர் கருணாநிதி இதன் மூலம் "கவுண்ட்டர் மூவ்' செய்யும் பணியையும், அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு தேர்தல் அணியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தியுள்ளார்.

இப்போதைக்கு விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், சரத்குமார் ஆகியோர் ஜெ.வின் எதிரே இருக்கிறார்கள். தேசியக் கட்சி வரிசையில் பா.ஜ.க. காத்திருக்கிறது. "பா.ம.க.வும் விஜயகாந்தும் ஒரே அணியில் நீடிக்க முடியுமா?' என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் 2001 இல் தேர்தல் முடிந்து முதல்வரானவுடன் அளித்த பேட்டியில், "மூப்பனாருக்கும், ஆதரவு தெரிவித்த மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றி' என்று ஜெ.சொன்னாரே தவிர, ராமதாஸ் பெயரைச் சொல்லி நன்றி சொல்லவில்லை. மூப்பனார் மறைவிற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜி.கே.வாசனுக்கு திருச்சி மாநகராட்சியைக் கொடுத்தார். ஆனால் எவ்வளவோ கேட்டும் சேலம் மாநகராட்சியை பா.ம.க.வுக்குக் கொடுக்காதது மட்டுமின்றி, அக்கட்சியுடன் கூட்டணியே வேண்டாம் என்று உதறித்தள்ளினார் ஜெ.

லேட்டஸ்டாக பா.ம.க. விலக்கப்பட்ட விஷயத்தை அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான "நமது எம்.ஜி.ஆர்.' கட்சி பக்கத்தில் சிறிய செய்தியாக மட்டுமே போட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, "பா.ம.க. விடயத்தில் அ.தி.மு.க. அவசரப்படவில்லை' என்பது தெரிகிறது. ஆகவே அடுத்து ஜெயலலிதா செய்யப்போகிற "கூட்டணி மூவ்' வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் பந்தயத்தில் பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் கிடைக்க உதவுமா? அல்லது தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலையை உருவாக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

No comments: