தென் தமிழின் வீழ்வும் திராவிடச் சுயம்புகளும்

"தமிழில் என்ன இருக்கிறது? அது ஒரு காட்டுமிராண்டி மொழி! நீங்கள் உங்கள் வீடுகளிலும் ஆங்கிலத்தையே பேச்சு மொழியாகப் பயன்படுத்துங்கள்!" என்றெல்லாம் பெரியார் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவும் தீர்மானமாகவும் பேசினார்.

தமிழ் என்னும் அடையாளமில்லாமல் தமிழர்கள் ஓரினமாக எப்படி ஒருமைப்பட முடியும் என்பதற்கான விடை அவரிடம் இல்லாவிட்டாலும்கூட, மொழிப்பற்றைத் "தாய்ப்பால் பைத்தியம்' என்று அவர் நகையாடத் தயங்கவில்லை.

அவருக்கு ஆரிய மொழிதான் அடிமைப்படுத்தக் கூடாது: ஆங்கில மொழி அடிமைப்படுத்தலாம்! ஆங்கிலம் அறிவு மொழி என்பது அவருடைய தீர்மானமான கருத்து! உலகம் பெற்றிருக்கும் உயரறிவை எந்த மொழி வாயிலாகவும்பெற்று உயர்வடையலாம் என்னும் எளிய உண்மையைச் சிந்தனையாளர் பெரியார் ஏற்கவில்லை.

பெரியார் கறுப்புத் தமிழனை ஒரு பரிசுத்த வெள்ளையனாக்க விரும்பியது போலவே, அவருக்கு முந்தைய காலத்தில் இந்தியர்கள் அனைவரையுமே வெள்ளைக்காரர்களின் எதிரொலியாக்க ஒருவன் நினைத்தான். அவன் பெயர் மெகாலே!

அதற்கு அவன் ஆங்கில மொழியைக் கருவியாகக் கொண்டான். அதை இந்தியாவின் பயிற்று மொழியாக்கினான். நியூட்டனின் விதி, குறிக்கணக்கீட்டியல், பிரெஞ்சுப் புரட்சி எனக் கற்கத் தகுந்த எதையுமே ஆங்கில மொழி வாயிலாக மட்டுமே கற்பதற்குப் பிரிட்டிஷ் ஆட்சிப் பின்புலத்தில் வகை செய்தான் அவன்!

"நிறத்தால் அவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள்; ஆனால் நடையால், உடையால், பழக்க வழக்கத்தால், பண்பாட்டால் அனைத்தாலுமே அவர்கள் ஐரோப்பியர்களாக மாறுவார்கள்" என்று அடித்துச் சொன்னான். நூற்றி ஐம்பது ஆண்டுகள் வெள்ளைக்காரன் இந்தியாவை எல்லா வல்லமையோடு ஆண்டும். மெகாலேயின் கனவுகள் மெய்ப்படவில்லை. அவை சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போயின.

இந்தியர்கள் வெள்ளத்தோடு போய்விடாமல் அவர்களைத் தடுத்தாட்கொண்டு, இந்தியமொழிகளையும், இந்தியப் பழக்க வழக்கங்களையம், நடை உடைகளையும், பண்பாட்டையும் கட்டிக்காத்தவன் ஊழித் தீயென போர்பந்தரில் தோன்றிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!

அந்தச் சான்றோன் உருவாக்கிய வார்தா கல்விக் கொள்கையை 1937 இல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி நிறைவேற்றினார். மெகாலேயின் ஆங்கிலப் பயிற்று மொழித்திட்டம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டு, தமிழ் பயிற்று மொழியாக்கப்பட்டது. வெள்ளையர்களின் கண் முன்னாலேயே இது நடந்தது. தமிழ் அறிவியலைப் பயிற்றும் ஆற்றல் சான்றது என்பதை மெய்ப்பிக்கத் திண்ணை இரசாயனம் பற்றி நூல் எழுதினார் ராஜாஜி.

இதற்காகத் "தமிழ் கொண்டான்" என்பது போன்ற பட்டங்களை அன்றைக்கு யாரும் ராஜாஜிக்கு வழங்கவில்லை. வசன கவிஞர்களை விட்டுச் சொரியச் சொல்லி சுகங்காணும் பழக்கம் அன்றைய முதலமைச்சர்களிடமில்லை! கால்டுவெல் கால்கோல் விழா நடத்தி, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் தொடங்கிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் புலவர்கள் இயக்கமாகச் சிறுத்துவிடாமல், ராஜாஜி தோற்றுவித்த தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தின் மீது படர்ந்து, ஊற்றம் பெற்றது!

ஆங்கில மொழி சிறந்தது; ஆங்கிலேயப் பழக்கவழக்கங்கள் சிறந்தவை என்னும் மோகத்தைச் சம்மட்டி கொண்டு தகர்க்காவிட்டால், விடுதலை அடைந்தாலும் மக்கள் அடிமை மனப்பான்மையிலே வாழ்வர் என்று காந்தி பிழையறச் சிந்தித்தார்

அடிமை வாழ்வை மறுக்க முதலில் ஆங்கிலத்தை மறுக்க வேண்டும் என்பதில் தொடங்கினர். இந்திய மொழிகளின் பழம் பெருமைகள் தோண்டி எடுக்கப்பட்டன. தாய்மொழியில் பேசுமாறும் எழுதுமாறும் மக்கள் தூண்டப்பெற்றனர். ஆங்கிலம் அறிந்த காந்தி தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலைத் தன் தாய்மொழியான குஜராத்தியில் எழுதினார். ஆங்கிலம் அதை மொழி பெயர்த்துக் கொண்டது. அதைத்தானே அது காலமெல்லாம் செய்து கொண்டிருந்தது.

அதனுடைய தொடர்ச்சியாக அண்ணா, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்து, அதனை மக்கள் இயக்கமாக்கி வெற்றிபெறச் செய்தார். 1950 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலம் தமிழின் பொற்காலம்! அது அண்ணாவின் காலம்! ஒரு தலைவனின்வெற்றி அவன் வாழ்ந்த காலத்து மக்களின் வாழ்க்கை முறைகளைக் கொண்டே அறியப்படும். தலைவனின் பிறந்த நாள் விழாக்களில் வசனகவிஞர்கள் பாடுவதைக் கொண்டு அறியப்படுவதில்லை.

1970 க்குப் பிறகு தமிழ் உணர்வு படிப்படியாகத் தேயத் தொடங்கியது. "திராவிடச் சுயம்புகள்" என்று சொல்லிக் கொண்டவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கியும் அது வெறும் உதட்டுச் சேவகமாக முடிந்து போனது. 1970 இல் தொடங்கிய சரிவு 1991 இல் தொடங்கிய உலகமயமாக்கலால் விரைவு பெற்றது. ஒரு வகையில் தமிழின் இருண்ட காலம் தொடங்கிவிட்டது எனலாம்!

வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் கூடத் தாய் 'அம்மா' என்றே அழைக்கப்பட்டாள். 'மம்மி'யாகவில்லை, மாமியார் அத்தை என்றே அழைக்கப்பட்டார். அன்டியாகவில்லை! ஒரு பெண்ணை அவர் யாராக இருந்தாலும் எந்த வயதினராக இருந்தாலும் "அம்மா' என்று விளித்துப் பேசிய தமிழ்நாட்டில் இப்போது பெண்களெல்லாம் "மேடம்' ஆகிவிட்டார்கள்.

பாவாடை, தாவணி போய், பஞ்சாபிய உடையான சுடிதாரோடு ஒரு துப்பட்டாவும் வழக்கிற்கு வந்து இப்போது அவையும் போய், ஒரு முழுக்காற்ச்சட்டையும் ஒரு பனியனும் இளம் பெண்களின் உடையாகிவிட்டது. மார்புச் சேலை போடும் உரிமை வேண்டும் என்று ஒரு வகுப்பார் சென்ற காலங்களில் போராடியதுபோய், அது வேண்டாம் என்று போராடும் காலம் வந்துவிட்டது. வசதியற்ற வீட்டுப்பிள்ளைகள் மட்டுமே தமிழ்வழிப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். வள்ளுவனின் தாய்மொழி இன்று வறியவர்களின் மொழியாகிவிட்டது!

நீதிமன்றங்கள் முழுவதும் எண்ணிலடங்கா மணமுறிவு வழக்குகள்! நான்கைந்து முறை கணவனை மாற்றிக்கொண்டவள் அரிஸ்டாட்டிலின் தர்க்க விதிகளைப் பயன்படுத்தி அளப்பரிய வகையில் ஆணாதிக்கம் பற்றி அலசி எடுக்கிறாள்!

அகத்திணை பெற்ற மொழி உலகிலேயே தமிழ் ஒன்றுதான்! ஆனால் தமிழ்நாடு அமெரிக்க அழி கலாசாரத்திலிருந்து வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள புறப்பட்டிருக்கிறது. தாயை அம்மா என்றழைக்கக் கூடத் தாய்மொழி தேவைப்படாதபோது தமிழ் செம்மொழியாக இருந்தாலென்ன? குறுமொழியாக இருந்தாலென்ன?

தமிழ்நாட்டை மராட்டியர்கள், நாயக்கர்கள், நவாபுகள், ஆங்கிலேயர் என்று பலரும் ஆண்டார்கள். அவரவர் ஆட்சிக் காலத்தில் அவரவரின் தாய்மொழியே அரண்மனை மொழியாக இருந்தது. ஆங்கிலேயரைத் தவிர மற்ற அனைவரையும் தமிழ் உள்ளிழுத்து, உறிஞ்சி அவர்களையும் ஒரு ஜாதியாக்கி உள்ளடக்கிக் கொண்டுவிட்டது.

இப்படிப் பெரியார்களாலும், மெகாலேக்களாலும், ஆங்கிலேய நேரடி ஆட்சிகளாலும் அசைக்க முடியாதபடி நங்கூரம் பாய்ச்சி நின்ற தமிழ், 1991 க்குப் பிந்தைய உலகமயமாக்கலால் ஆட்டம் காணும் நிலைக்கு உள்ளாகி இருப்பது வரலாற்று அவலம்.

தமிழனின் நடை, உடை, பழக்கவழக்கம், பண்பாடு, நயத்தக்க நாகரிகம் ஆகிய அனைத்தும் ஆட்டம் காண்பதற்கு அதுதான் காரணம்! கொழுத்த பணம் சுரண்டலின் வெளிப்பாடு என்னும் கோட்பாடு சுட்டெரிக்கப்பட்டுவிட்டது. நுகர்ச்சி வெறி உலகம் முழுவதும் ஊழிக்கூத்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

பணம் வழிபாட்டுக்குரியது என்னும் நச்சுக் கருத்தை எங்கெங்கும் வெற்றிகரமாக விதைத்ததிலேதான் உலகமாக்கலின் வெற்றியே அடங்கி இருக்கிறது. ஒரே ஒரு கொடி, ஒரே ஒரு நாட்டின் ஆதிக்கம், ஒரே ஒரு மொழி, ஒரே ஒரு நாகரிகம் என்பதை நோக்கி உலகு செலுத்தப்படுகிறது. நுண்ணிய வேறுபாடுகளும், பண்பாட்டுப் பன்மையும் அழிக்கப்பட்டால்தானே உலகை ஒரு கொடி, ஒரு மொழி, ஒரு ஆதிபத்தியத்தின் கீழ் ஒருமைப்படுத்த முடியும்!

அதற்கு புஷ்ஷின் மகள் வந்து தமிழ்நாட்டை ஆள வேண்டியதில்லை. கருணாநிதியே ஆள்வார். ஆனால் உலகின் மெக்காவாக வாஷிங்டன் மாறிவிடும்! இந்த ஆதிபத்தியதை உலகம் முழுவதும் தடுத்து நிறுத்த சோவியத் இல்லாத நிலையில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே இதில் முனைந்து நிற்கின்றன. நடை, உடை, நாகரிகம், பண்பாடு, அரேபிய மொழி ஆகியன எதிலும் அமெரிக்கக் கலப்பின்மை என்று எந்தப் பாதிப்பும் இல்லாமல் வாழ்வதோடு, அந்த ஆதிபத்தியத்தை எதிர்த்துப் போரும் நடத்துகின்றன!

நம்முடைய ஆட்சியாளர்கள் உலகமயமாக்கலை எதிர்த்துக் கருத்துருவாக்கம் செய்யக்கூடப் போதுமானவர்களில்லை. அவர்களின் குடும்பமயமாக்கலே இன்னும் முடிந்த பாடாய் இல்லையே.

No comments: