உலகிலேயே மிக உயரமான சீன மனிதருக்கு மீண்டும் சான்றிதழ்

கின்னஸ் புதிய விதிமுறைகளின் படி தன்னை அளந்து பார்க்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த உயரமான மனிதரான லியோனிட் ஸ்டாட்னிக் மறுத்து விட்டதால், சீனாவை சேர்ந்த பவோ சிஷு னுக்கு மீண்டும் கின்னஸ் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில், உலகிலேயே மிகவும் உயரமான மனிதராக, பவோவின் பெயர் இடம் பெறுகிறது.சீனாவை சேர்ந்த பவோ சிஷுன், ஏழு அடி 8.95 அங்குலம் உயரம் கொண்டவர்.

இதற்காக, இவருக்கு, 2005ம் ஆண்டு கின்னஸ் சான்றிதழ் அளிக்கப்பட்டு, 2006ம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றது.ஆனால், உக்ரைன் நாட்டு டாக்டர் ஒருவர் அளித்த சான்றிதழ்களின் படி, அந்நாட்டை சேர்ந்த லியோனிட் ஸ்டானிக், எட்டு அடி 5.5 அங்குலம் உயரம் கொண்டவராக தெரிய வந்ததைத் தொடர்ந்து, பவோவுக்கு வழங்கப்பட்ட கின்னஸ் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.

லியோனிட் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டுமானால், புதிய விதிகளின்படி, அவரை நிற்க வைத்தும், படுக்க வைத்தும், ஒரே நாளில் ஆறு முறை அளக்க வேண்டும். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள் உக்ரைனுக்கு வந்து அளப்பதற்கோ, அல்லது லியோனிக் பிரிட்டனுக்கு வரவோ தகவல் அனுப்பப்பட்டது.

ஆனால், ஏற்கனவே தனது உயரத்தால், மனவேதனையில் உள்ள லியோனிட், தன்னை அளந்து பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டார். இது குறித்து அடுத்தடுத்து கடிதம் எழுதி யும், இதற்கு லியோனிக் சம்மதிக்கவில்லை.

அவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். ஓய்வூதியமாக மாதம் நான்காயிரம் ரூபாய் கிடைக்கிறது. இத்துடன், தங்களுக்கு சொந்த மான விவசாய நிலத்தில் தக்காளி மற்றும் வெள்ளரி பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். தனி பண்ணையில் பன்றிகள், பசுக்கள் மற்றும் கோழிகளை வளர்த்து சம்பாதிக் கின்றனர்.

ஆனால், பவோவுக்கு தன்னை பற்றிய விளம்பரத்தில் மோகம் அதிகம். இதற்கு முன்னர் ஆடுகள் வளர்த்து வந்தார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதால், இவருக்கு திருமணம் கூடி வந்தது. இவரை திருமணம் செய்து கொள்ள, ஐந்து அடி ஆறு அங்குலம் கொண்ட பெண் முன்வந்தார்.

கடந்த ஆண்டு நடந்த இவரது திருமணத்தை, சீனாவை சேர்ந்த 15க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தன. இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட கின்னஸ் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், தனது சுயவிளம் பரத்தில் பவோ தீவிரமாக ஆர்வம் காட்டினார்.

பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு விட்ட இரண்டு டால்பின்களின், வாயில் கை விட்டு, தனது மூன்றடி 4.7 அங்குல கையை விட்டு, வயிற்றில் இருந்த பொருட்களை எடுத்ததன் மூலம் அவற்றை காப்பாற்றினார். இச்செய்தி சீனப் பத்திரிகைகளில் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கின்னஸ் விதிகளை ஏற்க லியோனிக் மறுத்துவிட்டதால், மீண்டும் பவோவுக்கே, உலகின் உயரமான மனிதர் என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வெளியாகும் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் பெயர் இடம் பெறுகிறது.

இவருக்கு முன், உலகிலேயே உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தவர் இல்லினோயிசின் அல்டான் நகரைச் சேர்ந்த ராபர்ட் வாட்லோ என்பவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இவரது உயரம் எட்டு அடி 11 அங்குலம். இவர் 1940ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.கின்னஸ் புத்தகத்தில், உலகிலேயே மிக குள்ளமான மனிதராக இடம் பெற்றிருப்பவர் ஹி பிங் பிங். இவரது உயரம் இரண்டு அடி 5.37 அங்குலம். பவோ வசிக்கும் இடத்தில் இருந்து சில நூறு கி.மீ., தூரத்தில், மங்கோலியாவில் இவர் வசித்து வருகிறார்.

கியூபாவை வஞ்சிக்கும் இயற்கையின் சீற்றம்

கியூபாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் குஸ்தவ் எனப்பெயரிடப்பட்டுள்ள சூறாவளி வலுப்பெற்று வருகின்றது.மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்றவாறு வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூறாவளி அபாய வகையில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக மியாமியில் இருக்கும் அமெரிக்க தேசிய சூறவாளி மையம் தெரிவித்துள்ளது.

முதன்முதலாக சூறாவளி தாக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள கியூபாவின் மேற்கு பகுதியில் இருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேறு இடங்களுக்கு சென்றுள்ளன

எங்கும் நீ....

நான் எப்பொழுதும்
உன்னையே பார்ப்பதாக
புகார் செய்கிறாய்...!
நான் எங்கு சென்று
புகார் செய்வது...!
எங்கு பார்த்தாலும்
நீயாகவே தெரிவதை!

முடியாது...

ஓவியத்தில்
வரைய முடியாது
உன் அழகை!
கவிதையில்
எழுத முடியாது
உன் பேரழகை!
சிலையில்
செதுக்க முடியாது
உன் சிணுங்கல்களை!
வானவில்லால்
வெல்ல முடியாது
உன் வண்ணத்தை!
நட்சத்திரங்களால்
பிரதிபலிக்க முடியாது
உன் புன்னகையை!
நிலவால் கூட
பிரகாசிக்க முடியாது
உன் ஒளி முகத்தை...

அவள்

பாலைவனம் என்றாலும்
பயணம் செய்வேன்
பாதை காட்டுவது
அவளாக இருக்க வேண்டும்...
கொசுக்கடியில் கூட நிம்மதியாக
உறங்குவேன்
கனவில் வருவது அவளாக இருக்க வேண்டும்
கடுமையாக உழைக்க காத்து கிடக்கிறேன்
ஊதியம் தருவது
அவளாக இருக்க வேண்டும்
வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன்
வாழ்க்கைத் துணைவி
அவளாக இருக்க வேண்டும்!

அடடே......

காகிதத்தில்
வரைந்ததை
ரப்பர் கொண்டு
அழிக்கலாம்
சரி,
மனதில்
வரைந்த
அவளை
எதனைக் கொண்டு
அழிக்கலாம்?

சூரிய சக்தியால் இயங்கும் அதிசய விமானம்

சூரிய சக்தியால் இயங்கும் கார்கள் ஏற்கனவே வெளி வந்து விட்டன. இப்போது சூரிய சக்தியால் இயங்கும் விமானங்களும் பறக்கத் தொடங்கி விட்டன.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் `செபிர்-6' என்ற புதிய ரக குட்டி விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுக்காக இந்த சூரிய சக்தி விமானம் உரு வாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இந்த சூரிய சக்தி விமானத்தின் சோதனை ஓட்டம் நடந் தது.இந்த ஆள் இல்லாத குட்டி விமானம் 83 மணி 37 நிமிட நேரம் இரவு பகலாக தொடர்ச்சியாக பறந்து உலக சாதனை படைத்துள்ளது.

30 கிலோ எடை உள்ள இந்த குட்டி விமானம் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறக் கும் ஆற்றல் கொண்டது. பகல் நேரத்தில் சூரிய சக்தியை பயன்படுத்தி பேட்டரி ரீசார்ஜ் செய்து கொண்டு இரவு நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளும்.

இளைய தலைமுறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண்

இளைய தலைமுறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண் நிஷிதா ஷா, போர்ப்ஸ் பத்திரிகை தகவல் வாஷிங்டன் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷிதா ஷா (28) இடம்பிடித்து உள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது குடும்பம், தாய்லாந்தில் வசித்து வருகிறது. அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் அவ்வப்போது கோடீஸ்வரர்கள், அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்போது அடுத்த தலைமுறையில் மகா கோடீஸ்வரர்களாக இருக்கப் போகிறவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் நிஷிதா ஷா இடம்பெற்றுள்ளனர். மேலும் கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ், பேபால் நிறுவனத்தை ஆரம்பித்த எலோன் முஸ்க், ஹாலிவுட் நடிகர் டைலர் பெர்ரி, மிக்சி இணையதள நிறுவனர் கென்ஜி கஷாரா, பிபோ இணையத்தின் மைக்கேல், ஜாச்சி பர்ச் உட்பட பலர் இடம்பெற்று உள்ளனர். இப்போதைய உலக மகா கோடீஸ்வரர்கள் வயதானவர்களாக உள்ளனர்.

1,125 கோடீஸ்வரர்களின் சராசரி வயது 61. இந்நிலையில்தான் இந்த பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டு உள்ளது. நிஷிதா ஷா, தாய்லாந்தின் ஜிபி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது தந்தை ஆரம்பித்த நிறுவனம் இது. இப்போது மொத்தம் 40 நிறுவனங்கள் உள்ளன. இவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.1,612 கோடி. எதிர்காலத்தில் இது பல மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது. கப்பல்கள், துணி என ஏகப்பட்ட துறைகளில் கொடிகட்டிப் பறக்கின்றனர்

ஆகஸ்ட் 27ஆம் திகதி வானத்தில் இரு சந்திரன்கள்?

செவ்வாய்க் கிரகமானது எதிர்வரும் 27ஆம் திகதி பூமிக்கு மிக நெருங்கி வரவுள்ளதாகவும் அது பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டாவது சந்திரன் போன்று தோற்றமளிக்கும் எனவும் அராபிய பத்திரிகைகள் அண்மையில் அறிக்கையிட்டிருந்தன.

இந் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வானிலை நிபுணர்கள் மேற்படி எதிர்வு கூறல் அறிக்கைகளை நிராகரித்துள்ளனர். எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க் கிரகமானது வானத்தில் பெரிய முழுநிலவு போன்று தோற்றமளிக்கும் எனவும் அதனால், வானத்தில் இரு சந்திரன்களைப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் எனவும் இணையத் தளங்கள் பலவற்றிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

செவ்வாயானது ஒவ்வொரு 780 நாட்களுக்கும் ஒரு தடவை சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்கையில் பிரகாசமான தோற்றத்தை வெளிப்படுத்துவது வழமையாகவுள்ளது என எமிரேட்ஸ் வானிலை சபையின் இஸ்லாமிய சந்திர அவதான திட்ட தலைவர் மொஹமட் சொயுகத் அவதா தெரிவித்தார்.

மேற்படி செவ்வாய்க் கிரகமானது இவ்வருடம் மனித வெற்றுக் கண்ணுக்கு முழு நிலவு அளவு தோன்றுவது சாத்தியமில்லை எனக்குறிப்பிட்ட அவர், 2287ஆம் ஆண்டில் அத்தகைய இரு சந்திரத் தோற்றப்பாடு வானில் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார்.

4 X 100 மீற்றர் அஞ்சலோட்டம்; தகுதியிழந்தது அமெரிக்கா!

பீஜிங் ஒலிம்பிக்கின் 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தகுதியிழந்துள்ளன. 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தற்போதைய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையை வைத்துள்ள அமெரிக்கா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாதது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இறுதிச் சுற்றுக்கு செல்லும் அணியை தேர்வு செய்வதற்காக 2 தகுதிச் சுற்றுகள் நடத்தப்பட்டன. இதில் முதல் தகுதிச் சுற்றில் ரோட்னி மார்டின், டிராவிஸ் பட்கெட், டார்விஸ் பேட்டன், டைசன்கே ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி பங்கேற்றது. இதில் "கோல்' மாற்றும் போது அமெரிக்க அணியினரிடையே ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக கோல் களத்தில் விழுந்ததால், அந்த அணி இறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை இழந்தது.

மகளிர் பிரிவிலும் ஏமாற்றம்: இதேபோல் மகளிருக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்திலும் அமெரிக்க அணி கோல் மாற்றும் பிரச்சினையால் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெறத் தவறியது. இரு பிரிவுகளாக நடந்த தகுதிச் சுற்றில், முதல் தகுதிச் சுற்றில் ஏஞ்சலா வில்லியம்ஸ், மெசெலி லெவிஸ், டோரி எட்வர்ட்ஸ், லாரின் வில்லியம் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி பங்கேற்றது.

இதில் 3 ஆவது மற்றும் 4 ஆவது வீராங்கனைகளிடையே கோல் மாற்றும் போது பதற்றம் ஏற்பட்டதால், கோல் களத்தில் விழுந்தது. இதையடுத்து அமெரிக்கா இறுதிப் போட்டிக்கான தகுதியை இழந்தது. 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தனி நாடாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு என இரண்டிலும் தகுதி பெறத் தவறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகளிர் கால்பந்தாட்டம்; அமெரிக்காவுக்கு தங்கம்

ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் கால்பந்தாட்டத்தில் பிரேஸிலை 10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கா தங்கப் பதக்கம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா கூடுதல் நேர வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வெற்றியை ஈட்டியது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும், தென்னமெரிக்கா நாடான பிரேஸிலுடன் மோதிய அமெரிக்கா வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் பிரேஸில் சிறப்பாக விளையாடி அமெரிக்காவுக்கு கடும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் அமெரிக்க அணி சமாளித்து ஆடி கூடுதல் நேர வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றிபெற்றது.

மகளிர் கால்பந்தில் ஜேர்மனி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்தப் பதக்கத்திற்காக ஜப்பானுடன் மோதிய ஜேர்மனி, 20 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

ஜமேக்கா ஆதிக்கம் தொடர்கிறது! பெண்கள் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கம்

ஒலிம்பிக் தடகள போட்டிகளில் ஜமேக்கா முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் ஜமேக்காவின் வெரானிகா கேம்பெல் தங்கம் வென்று சாதித்தார்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் ஜமேக்காவின் வெரானிகா கேம்பெல், ஷரோன் சிம்சன், அமெரிக்காவின் முனா லீ உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகள் கலந்துகொண்டனர். தொடக்கத்திலே சிறப்பாக ஓடிய ஜமேக்காவின் வெரானிகா 21.74 விநாடிகளில் போட்டித் தூரத்தை கடந்து தங்கம் வென்றார். வெள்ளி பதக்கத்தை அமெரிக்காவின் அலிசன் பெலிக்சும், வெண்கலத்தை ஜமேக்காவின் கெரோன் ஸ்டூவர்ட்டும் கைப்பற்றினர்.

ஆண்கள் 100 மீற்றர் 200 மீற்றர் மற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்திலும் தங்கம் வென்ற ஜமேக்கா தற்போது பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்திலும் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தடகளத்தில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை.

மின்னல் வேகத்தில் உசைன் போல்ட் உலக சாதனை

ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மின்னல் வேகத்தில் பறந்து இவர் 9.69 விநாடிகளில் உலக சாதனையும் படைத்தார். நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட், அசபா பாவல், டைசன் கெய் ஆகியோரிடையே கடும் போட்டி காணப்பட்டது.

முதலில் நடந்த அரையிறுதியில் அமெரிக்காவின் டைசன் கெய் 10.05 விநாடிகளில் ஓடி ஐந்தாவது இடமே பெற முடிந்தது. இதையடுத்து உலக சாம்பியனான இவர் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை பரிதாபமாக இழந்தார்.

டைசன் வெளியேறியதைத் தொடர்ந்து ஜமேக்கா வீரர்களான போல்ட் அசபா பாவல் மற்றும் அமெரிக்காவின் வோல்டர் டிக்ஸ் இடையே முதலிடம் பெறுவதில் போட்டி நிலவியது.விறுவிறுப்பான இறுதிச் சுற்றில் 21 வயதான உசைன் உட்பட 8 பேர் பங்கேற்றனர்.

உலகில் அதிகவேக வீரரை நிர்ணயிக்கும் ஓட்டம் என்பதால் " டென்சன் ' எகிறியது. ஓட்டம் தொடங்கியதும் " போட்டோ பினிஷ் ' இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் வேகத்தில் ஓடிய போல்ட், கண் இமைக்கும் நேரத்தில் 100 மீற்றர் தூரத்தை கடந்தார். இவருக்கு அருகில் கூட யாரும் வரவில்லை. போட்டித் தூரத்தை 9.69 விநாடிகளில் கடந்த இவர் தங்கப்பதக்கம் வென்றதோடு, தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.

முன்னதாக இவர், கடந்த மே மாதம் 9.72 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 0.03 விநாடிகள் வித்தியாசத்தில் தனது சாதனையை தகர்த்துள்ளார். மின்னல் வேகத்தில் ஓடிய இவர் " லைட்னிங் போல்ட் ' என்ற தனது புகழை தக்க வைத்துக் கொண்டார்.

அமெரிக்காவுக்கு"அடி' : 2 ஆவது இடத்தை பெற்ற ரினிடா டுபாய் கோவின் ரிச் சர்ட் தொம்சன் ( 9. 89 விநாடி) வெள்ளி வென்றார். அமெரிக்காவின் வோல்ட் டிக்ஸ் ( 9.89 விநாடி) வெண்கலம் பெற்றார். ஜமேக்காவின் அசபா பாவல் ( 9.95 ) 5 ஆவது இடமே பெறமுடிந்தது. முதலிரண்டு இடங்களையும் கரீபிய மண்ணைச் சேர்ந்தவர்கள் பெற்றதன் மூலம் தடகளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பலத்த "அடி' விழுந்துள்ளது.

8 தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார் பெல்ப்ஸ்

ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் புதிய சாதனை படைத்திருக்கிறார். பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற 400 மீற்றர் மெட்லி அஞ்சலோட்ட நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து 8 ஆவது தங்கப் பதக்கத்தை பெல்ப்ஸ் வென்றார்.

இதற்கு முன் ஒரு ஒலிம்பிக் போட்டியில் 7 தங்கப் பதக்கங்கள் பெற்று மார்க்ஸ் ஸ்பிட்ஸ் படைத்திருந்த சாதனையை பெல்ப்ஸ் நேற்று முறியடித்தார்.

அமெரிக்க வீரர்களான ஆரோன் பியர்ஸ்சோல், பிரண்டன் ஹான்சன், பெல்ப்ஸ் மற்றும் ஜேசன் லேசக் ஆகியோர் 400 மீற்றர் அஞ்சலோட்ட நீச்சல் போட்டியில் தங்களது இலக்கை 3.29.34 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய நீச்சல் அணி 2 ஆவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் ஜப்பான் அணி 3 ஆவது இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

ஒரே ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தனக்கு தற்போது ஏற்படும் உணர்வை வெளிப்படுத்த தெரியவில்லை என்றும், உற்சாகத்தின் காரணமாக தான் உணர்ச்சிவசப் பட்டிருப்பதாகவும் கூறிய பெல்ப்ஸ், தனது தாயை உடனடியாக சந்திக்க விரும்புவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தங்கம் வென்ற அணியில் தான் இடம் பெற்றது தனக்கு மிகுந்த பெருமிதம் அளிப்பதாக மற்றொரு வீரர் பியர்ஸ்சோல் கூறினார். பெல்ப்ஸ் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 14 தங்கப் பதக்கம் வென்று அசைக்க முடியாத இடத்திற்கு உயர்ந்துள்ளார்

ஒலிம்பிக்கில் சாதனை தொடர்கிறது - பெல்ப்ஸ் 7 வது தங்கத்தை வென்றார்

ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் நீச்சல் போட்டியில் 7 வது தங்கப்பதக்கத்தை வென்று ஒரே ஒலிம்பிக்கில் 7 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.
100 மீற்றர் பட்டபிளை பிரிவில் பெல்ப்ஸ் 0.01 விநாடி வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார். ஏற்கனவே, கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள மைக்கெல் பெல்ப்ஸ் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கவேட்டைநடத்தி வருகிறார்.

400 மீற்றர் மெட்லி பிரிவில் தங்கத்தை வென்று தனது வேட்டையை தொடங்கிய பெல்ப்ஸ், நேற்று முன்தினம் 6 வது தங்கப்பதக்கத்தை வென்றார். இந்நிலையில் நேற்று 100 மீற்றர் பட்டர்பிளை போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அவர் 7 வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டிகளில் 7 தங்கப்பதக்கத்தை வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்சன் சாதனையை இவர் சமன் செய்துள்ளார். மார்க் ஸ்பிட்ஸ் 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியில் 7 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

இன்று நடைபெறும் 400 மீற்றர் மெட்லி அஞ்சலோட்டப் போட்டியில் பெல்ப்ஸ் பங்கேற்கிறார். இதில் வெற்றிபெற்றால் அவர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை வென்று புதிய சாதனை படைப்பார்.

ஏற்கனவே ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 9 தங்கப்பதக்கங்களை வென்றிருந்த காரல் லூயிஸ்,மார்க் ஸ்பிட்ஸ், பாவே நூர்மி மற்றும் லாட்நினா ஆகியோரின் சாதனையை இவர் முறியடித்து, இதுவரை மொத்தம் 13 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் பெல்ப்ஸ் 0.01 விநாடிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. செர்பிய வீரர் மிலோராட் கவிக் இவருக்கு பெரும் சவாலாக விளங்கினார். கடைசிக் கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்ச முயற்சித்து கடும் போட்டியில் ஈடுபட்டனர். ஒரு விநாடிக்கும் மிகக் குறைவான வித்தியாசத்தில் பெல்ப்ஸ் வெற்றி பெற்றார்.

ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டப் போட்டி ஜமேக்காவின் போல்ட் உலக சாதனை

பீஜிங் ஒலிம்பிக் தொடரில் உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரை அறிமுகப்படுத்தும் 100 மீற்றர் இறுதிப் போட்டியில், ஜமேக்கா வீரர் உசைன் போல்ட் பந்தயத் தூரத்தை 9.69 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நேற்றிரவு நடந்த இப்போட்டியில் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசாபா பாவல் 5 ஆவது இடத்தையே பிடித்தார். 100 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் உசைன் போல்ட், மற்றொரு ஜமேக்கா வீரர் அசாபா பாவல் உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். அமெரிக்காவின் டைசன் கே தகுதிச்சுற்றில் பந்தயத்தூரத்தை 10.05 நொடிகளில் கடந்ததால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

போட்டி தொடங்கிய 3 நொடிகளுக்குள்ளாகவே போல்ட் முன்னிலை பெற்றார். 6 ஆவது, 7 ஆவது நொடியில் மற்ற வீரர்களை விட போல்ட் வெகு தூரம் முன்னேறினார். தங்கத்தை வெல்வது உறுதி என்று தெரிந்தவுடன், போட்டி முடிவதற்கு முன்பாகவே தனது நெஞ்சில் கையைத் தட்டி இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

முடிவில் 9.69 நொடிகளில் பந்தயத் தூரத்தைக் கடந்து உசைன் போல்ட் தங்கப் பதக்கத்தை வென்றார். ரினியாட் ருபாகோ நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் தொம்ஸன் (9.89 விநாடி) வெள்ளிப்பதக்கத்தையும், அமெரிக்க வீரர் வோல்டர் டிக்ஸ் (9.91 விநாடி) வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.

இப்போட்டியில் போல்ட்க்கு பெரும் சவாலாக விளங்குவாரென எதிர்பார்க்கப்பட்ட அசாபா பாவல் பந்தயத் தூரத்தை 9.95 நொடிகளில் கடந்து 5 ஆவது இடத்தையே பிடித்தார்.

செவ்வாய் கிரகத்தில் தூசுப் படலம்

அமெரிக்காவின் "பீனிக்ஸ்' விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தூசுப் படலம் இருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில், மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதை அறிவதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் "பீனிக்ஸ்'விண்கலம் செலுத்தப்பட்டது. பத்து மாத கால பயணத்திற்கு பின், கடந்த மே மாதம் செவ்வாய் கிரகத்தில் பீனிக்ஸ் தரை இறங்கியது.

விண்கலத்தில் உள்ள அதி நவீன கேமரா மூலம் புகைப்படங்கள் எடுத்து, நாசா விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள, நிலப் பரப்புகள் ஏற்கனவே படம் பிடித்து நாசாவிற்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், சமீபத்தில் செவ்வாயில் இளஞ் சிவப்பு நிறத்தில் தூசுப் படலம் இருப்பதை, பீனிக்ஸ் படம் எடுத்து அனுப்பியுள்ளது. "பீனிக்ஸ் அனுப்பியுள்ள புகைப்படங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்'என்று, நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்

எத்தனை பார்வை...!

கிட்டப் பார்வை
தூரப் பார்வை
இரண்டு மட்டுமே
நான் அறிந்த பார்வை
ஆனால் பாவையே
உனக்குத் தான் எத்தனை பார்வை
கணவரைப் பார்க்கையில்
காதல் பார்வை
கனி மழலையைப் பார்க்கையில்
பாசப் பார்வை
உயிர்களைப் பார்க்கையில்
கருணைப் பார்வை
கயவரைப் பார்க்கையில்
கனல் பார்வை
பார்வையில் இத்தனை
வகைகளென்று - உனை
பார்த்த பின்பே நான்
அறிந்ததடி.

சூரிய சக்தியில் ஏ.சி.

ஏசி இயங்குவதால் கரன்ட் பில் எகிறுவது பற்றி கவலைப்படுகிறீர்களா...? விட்டுத் தள்ளுங்க, விரைவில் சூரிய சக்தியில் இயங்கும் ஏசி அறிமுகமாக உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கிரீன்கோர் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. 170 வாட் திறன் கொண்ட, சூரிய சக்தியை கிரகித்து மின்சாரமாக மாற்றும் அமைப்பு இதில் உள்ளது. இப்போது ஸ்பிளிட் ஏசியில் வீட்டுக்கு வெளியே கருவியை வைப்பதுபோல, இந்த சோலார் பேனலை பொருத்தி விட வேண்டியதுதான்.

அதில் விழும் சூரிய ஒளியை கிரகித்து நேர்மின்சாரமாக்கி ஏசி இயந்திரம் இயங்கும். இந்த ஏசி மூலம் 600 சதுர அடி பரப்புக்கு குளிர்சாதன வசதி செய்யலாம். மின் சிக்கனம் தவிர, சுற்றுச்சூழலுக்கு ஆதரவான இந்த ஏசியை அமெரிக்க உணவு நிறுவனமான மெக்டொனால்டு மற்றும் கடற்படை ஆகியவை சோதனை அடிப்படையில் பொருத்தியுள்ளன.

சூரிய சக்தி நேரடியாக கிடைக்காத நேரங்களிலும் ஏசி செயல்படும் விதத்தில் பாட்டரி வசதியும் உண்டு. சூரிய சக்தி கிடைக்கும்போது அதில் ஒரு பகுதி, பாட்டரியில் சேமிக்கப்பட்டு, சூரியன் இல்லாத நேரங்களில் ஏசியை தொடர்ந்து இயங்கச் செய்யும்.

இந்த சோலார் ஏசியை கிரீன்கோர் நிறுவனம் 2 மாடல்களில் வெளியிடவுள்ளது. ஒரே இடத்தில் பொருத்துவது, சக்கரங்கள் மூலம் எங்கும் நகர்த்திச் செல்வது போல அவை விற்பனைக்கு வர உள்ளன.

கடலடி விஞ்ஞானி

உலகின் பனிக் கண்டமான அன்டார்டிகாவில் மனிதர்களே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காரணம் அங்கு நிலவும் கடுமையான குளிர் மற்றும் பனிச்சூழல்தான். அன்டார்டிகா பகுதியில் உள்ள கடலில் நீர் குளிர்காலத்தில் விரைந்து பனிக்கட்டியாகிவிடுகிறது.

இதுகுறித்து ஆராய்ச்சி செய்வதற்காக படத்தில் காணும் சீல் என்னும் இந்த விலங்கின் தலையில் சென்சார்களைப் பொருத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் சயன்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் அமைப்புடென்மார்க்கின் சயனடிக் இண்டஸ்டிரியும் இணைந்து கடலுக்கடியில் இவை நீந்தும்போது பனிக்கட்டிகள் உருவாவது, காலநிலை மாற்றம் போன்றவற்றை இந்த சென்சார்கள் மேற்கண்ட ஆராய்ச்சி அமைப்புக்கு அனுப்புமாம். எவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளர் இவ்வளவு சமர்த்தாக கரையில் ஒதுங்கியிருக்கிறார் பாருங்கள்!

ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்தார் பெல்ப்ஸ்

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் 11 ஆவது தங்கப்பதக்கத்தை வென்று ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக தங்கப்பதக்கங்களை வென்ற வீரர் எனும் சிறப்பைப் பெற்று புதிய வரலாற்றை படைத்திருக்கிறார். நேற்று அவர் 200 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 200 மீற்றர் பிரி ஸ்டைல் அஞ்சலோட்டம் ஆகிய 2 பிரிவுகளிலும் தங்கத்தை வென்று பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 5 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதுவரை அவர் வென்றுள்ள 5 தங்கப்பதக்கங்களுமே உலக சாதனை மூலம் பெறப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதனை நீச்சல் வீரராக கருதப்படும் அமெரிக்காவின் மைக்கெல் பெல்ப்ஸ் 8 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டுமெனும் இலக்கோடு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கியிருக்கிறார்.

நேற்றுவரை 5 தங்கப் பதக்கங்களையும் அவர் உலக சாதனையை முறிடியத்து வென்றுள்ளார். ஏற்கனவே கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கப்பதக்கங்களை வென்ற பெல்ப்ஸ் நேற்று முன்தினம் 3 பதக்கங்களை வென்றதன் மூலம் 9 பதக்கங்களை வென்று இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 9 பதக்கங்களை வென்றுள்ள கார்ல் லூயிஸ், பாவோ நுர்மி, மார்க் ஸ்பிட்ஸ் மற்றும் லாட்நினா ஆகிய சாதனையாளர்கள் பட்டியலில் சேர்ந்தார்.

இந்நிலையில் நேற்றுக் காலை அவர் 200 மீற்றர் பட்டர்பிளை பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று ஒலிம்பிக் வரலாற்றிலேயே 10 ஆவது தங்கப்பதக்கத்தை வெல்லும் வீரர் எனும் சிறப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப்பதக்கங்களை வென்ற தனிநபராக அவர் உருவாகியுள்ளார். 200 மீற்றர் பட்டர்பிளை பிரிவில் அவர் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் நடைபெற்ற200 மீற்றர் பிரிஸ்டைல் அஞ்சலோட்டப் போட்டியில் அவர் அமெரிக்க அணியில் பங்கேற்றார்.

இந்தப் போட்டியில் அமெரிக்க அணி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம் பெல்ப்ஸ் தன்னுடைய 11 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வென்றுள்ள 5 ஆவது தங்கமாகும்.

அவர் திட்டமிட்டபடி எஞ்சிய 3 போட்டிகளிலும் தங்கத்தை வென்றால் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்சின் சாதனையை முறியடித்து மற்றுமொரு வரலாற்று சாதனையை நிகழ்த்துவார்.

புறப்பட்டது சொகுசு கப்பல்

அமெரிக்காவின் சொகுசுக் கப்பல் நிறுவனம் செலிபிரிட்டி. அதன் ஆர்டரின் பேரில் ஜெர்மனியின் மெயேர் கப்பல் கட்டும் தளத்தில் சோல்ஸ்டைஸ் என்ற அதிநவீன பயணிகள் சொகுசுக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

315 மீட்டர் நீளம், 36.8 மீட்டர் அகலம் கொண்ட இக்கப்பலில் 1,426 அறைகள் உள்ளது.

ஒரே நேரத்தில் கப்பலில் 2,852 பேர் பயணம் செய்ய முடியுமாம்.

மேற்கூரை மூடிய கப்பல் தளத்தில் இருந்து அமெரிக்க பயணத்துக்காக கிளம்பும் கப்பலை ஆர்வமுடன் மக்கள் பார்க்கின்றனர்.

8 அடி உயர குரங்கு மனிதன்

கனடாவில் 8 அடி உயர குரங்கு மனிதன் நடமாட்டத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கனடாவின் ஒட்டாரி யோவில் உள்ள கிராமப்பகுதியில் வித்தியா சமான ஒருமிருகம் நடமாடு வதாக பீதி ஏற்பட்டது. 8அடி உயரத்துக்கு இருக்கும் அந்த மிருகம் பார்ப்பதற்கு குரங்கு போல் இருக்கிறது. கறுப்பு நிறத்தில் முடியும் உள்ளது. ஆனால் அதன் நடவடிக்கைகள் மனிதனை போலவே உள்ளது.

குரங்கு மனிதன் என்று இதை கிராம மக்கள் அழைக்கிறார்கள். எப்போதாவது கிராமப் பகுதிகளில் நடமாடும் இந்த குரங்கு மனுதனை பார்த்ததாகவும் கிராம மக்கள் பலர் தெரிவித்துள்ளனர். மனிதர்களை பார்த்ததும் இது காட்டுக்குள் ஓடிச்சென்று விடுகிறது.

அதன் கால் தடங்களை விலங்கியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். குரங்கு மனிதனால் ஆபத்து ஏற்படுமோ என்ற பீதியில் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தயங்குகிறார்கள்.

அன்ன நடை போடும் குட்டி யானை


அன்னை மலியின் பாதுகாப்புடன் பார்வையாளர்களை நோக்கி அன்ன நடை போட்டு வருகிறது இந்த குட்டி யானை. பின்னால் உலவிக் கொண்டிருப்பது பாட்டி யானை.

கனடாவின் கேம்பிரிட்ஜ் அருகே உள்ள ஆப்பிரிக்கன் லயன் சபரி என்ற உயிரியல் பூங்காவில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த ஆசிய யானைக் குட்டி பிறந்துள்ளது. இது அரிய வகை ஆசிய யானை இனத்தின் மூன்றாம் தலைமுறை குட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தாகம் எப்போது தணியும்?

ஆந்திரப் பிரதேசத்தின் இரட்டை நகரங்களான ஐதராபாத் ,செகந்திராபாத்தை கடந்த 2 நாட்களாக மழை, வெள்ளம் பாடாய் படுத்தி பலரை பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், அசாமில் தென்மேற்குப் பருவமழை கைவிரித்து, வறட்சி ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தி நகரில் உள்ள தெருக் குழாய்களில் தண்ணீருக்குப் பதிலாக காற்றுதான் வருகிறது. அங்குள்ள வனவிலங்கு பூங்காவில் தண்ணீர் வராத குழாயை ஒரு வானர குடும்பம், ஏக்கத்துடன் பார்க்கிறது.

5 லட்சம் பூனைகள் சீனாவில் தேடிப்பிடிப்பு


சீனாவில் பீஜிங் நகரில் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 5 லட்சம் பூனைகள் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன, எனத் தெரிவிக்கப் படுகிறது.

இந்தப் பூனைகள் சிறிதும் அசைய முடியாத நிலையில் பெரும் எண்ணிக் கையான கூண்டுகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன

ஒலிம்பிக்கினூடாக நிஜ சொரூபத்தை உலகத்துக்கு காட்டுகின்றது சீனா

29 ஆவது ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப வைபவத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் 400 கோடிக்கும் அதிகமான மக்களை பிரமிக்க வைத்ததன் மூலம் "எங்களால் முடியும்' என்பதை சீனா சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.
அங்குரார்ப்பண நிகழ்வுகளை "பறவைக்கூடு' தேசிய விளையாட்டரங்கில் குழுமிய 1 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கண் கொட்டாமல் பார்த்ததாக பெய்ஜிங்கிலிருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

5 ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்த செழிப்பான வரலாற்றை அதி நவீன முகத்துடன் சீனா வெளிப்படுத்தியிருக்கிறது. சீனாவின் தியானமென்சதுக்கத்தில் மக்கள் வெள்ளம் நள்ளிரவு வரை அலைமோதியது. வர்ணப்பூச்சிகளை முகங்களில் பூசியிருந்த பல்லாயிரக்கணக்கான சீனர்கள் கொடிகளை அசைத்தவாறு தாய்நாட்டுப் பற்றுடன் கோஷமெழுப்பினர்.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாணவேடிக்கைகளால் சுமார் 4 மணித்தியாலம் வானம் வர்ணஜாலம் காட்டியது. 208 ஒலிம்பிக் குழுக்களும் விளையாட்டுக்குழுக்களும் போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்திருக்கின்றன. நேற்றைய தினமே உண்மையான போட்டி ஆரம்பமானது.

"கிழக்கு ஆசியாவின் நோயாளி'யென ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்ட சீனா இப்போது "என்னால் போட்டியிட முடியும்' என்று நிரூபித்துக் காட்டியிருப்பதாக அந்நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டியானது உலகின் தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கும் சாதாரண சீனர்களின் குரல்களை கேட்பதற்கும் வழிசமைத்துக் கொடுத்திருப்பதாக அந்நாட்டு மக்கள் கூறியுள்ளனர்.

"தனது உண்மையான சொரூபத்தை உலகுக்குக் காட்ட சீனா தயார்' என்று அவர்கள் கூறுகின்றனர்.

8808 இல் 8 மணி 08 நிமிடத்தில் 8 இறாத்தல் 8 அவுன்ஸில் 2 குழந்தைகள்

8808 இல் 8மணி 08 நிமிடத்தில் இரு குழந்தைகள் பிறந்துள்ளன. அமெரிக்காவின் அயோவா,மின்னே சொட்டா ஆகிய அருகருகேயுள்ள மாநிலங்களில் இந்த இரு குழந்தைகளும் பிறந்திருக்கின்றன.
நெய்லி ஜோ ஹொவர்,ஸாண்டர் கோய் நினிக்கர் ஆகிய இரு குழந்தைகள் 8 இறாத்தல் 8 அவுன்ஸ் எடையுடன் பிறந்திருக்கின்றன.

ஸாண்டர் அவரின் தாய்வழி பாட்டன்,பாட்டிக்கு எட்டாவது பேரப் பிள்ளையாவார். ஜோ ஹொவர் பிறந்த மின்னே சொட்டா லேக்ரீயன் ஆஸ்பத்திரியின் ஊழியர்கள் இக்குழந்தை பிறந்த நேரத்தில் லொத்தர் சீட்டுகளை வாங்கினார்கள்.

இதேவேளை, ஸாண்டரின் தந்தையார் சாட் ரினிக்கர் கூறுகையில், 8 தனக்கு முன்னர் அதிர்ஷ்டமற்ற எண்ணாகும்.ஆனால், இப்போது லொத்தர் சீட்டை வாங்க தான் யோசிப்பதாக அவர் கூறியுள்ளார்

தொலைந்துபோன உலகம் அண்டார்டிகாவில் கண்டுபிடிப்பு

தற்போதுள்ள பனி நிறைந்த அண்டார்டிகா பகுதியில் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம் இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு "உலகம்' இருந்துள்ளதை விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளனர். அண்டார்டிகாவின் தொலைதூர மலைப்பகுதிகளில் தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் கல்லினுள் பதிந்த படிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆடம் லெவிஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக, "தி டெய்லி டெலிகிராப்' செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பகுதியில் நிலவிய கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக உயிரினங்கள் அப்படியே பனியில் மடிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி, எரிமலை சாம்பல்கள் மூலம் கிடைத்த ஆய்வுகள் மூலம் அங்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய பெரிய பனிப்பாறைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் கிடைத்த கடின ஓடுள்ள நீர்வாழ் பிராணியின் படிமங்கள், பாசி வகைகள் ஆகியவற்றின் மூலம் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக உலகளாவிய விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டிருந்தாலும், "பழைய' உலகம் ஒன்று இருந்து அழிந்துபோனதை கருத்தில் கொள்ள இந்த கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

கூல்.......அடுத்த கூகிள்..............

இணையத்தில் தேடுவோர் அனைவருக்கும் தெரிந்திருக்கும் பெயர் கூகுள். தேடு பொறிகளின் அரசன் அது. அதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ தேடுபொறிகள் வந்தாலும் அத்தனையும் தடமில்லாமல் அழிந்துவிட்டன. ஏதோ யாகூவும், மைக்ரோசொப்டும் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருக்கின்றன. எனினும் அவற்றின் மொத்த வியாபாரம் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அப்படியானால் கூகுளின் எதேச்சதிகாரத்தை ஒன்றுமே செய்ய முடியாதா? முடியவே முடியாது என்கிறார்கள் கூகுளின் நிர்வாகிகள். அதற்குக் காரணமும் இருக்கிறது. வலுவான முதலீடு, நல்ல கட்டமைப்பு, ரகசியம் காக்கும் திறன், அரசுகளையே ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பம் ஆகியவைதான் கூகுளை நம்பர் 1 ஆக வைத்திருக்கிறது.

ஆனால், இந்த நம்பிக்கை கடந்த வாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அதற்குக் காரணம் கூல் என்ற புதிய தேடுபொறியின் உதயம்தான். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா பேட்டர்சன், ரஸல் பவர் தம்பதிதான் இந்தத் தேடுபொறியை உருவாக்கினர். தொடக்க நாளில் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுவரை வேறு எந்தத் தேடுபொறிக்கும் கிடைக்காத அளவுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.

கூகுள் தேடுபொறியை விட 3 மடங்கு அதிகமான இணையப் பக்கங்களை உள்ளடக்கியது. பல மடங்கு வேகமாகத் தேடித் தருவது, தேடுவதை மட்டுமல்லாமல் அவை தொடர்பான மற்ற தகவல்களையும் தருவது என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் கூறப்பட்டன. அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது எனப் பார்ப்பதற்கு தளத்துக்குள் நுழைந்தால், நம் கண்ணில்படுவது மிக எளிமையான கவர்ச்சிகரமான முதல் பக்கம். எந்த எளிமையால் கூகுள் முதலிடத்தைக் தக்கவைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த எளிமையை, அதைவிட அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறது கூல். கறுப்புப் பின்னணி, தேடும் சொற்களை உள்ளிடுவதற்கான பெட்டியின் நளினமான வடிவமைப்பு ஆகியவை முதல்பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடும்.

இவையெல்லாம் தேடுபொறிக்கு அவசியம்தான் என்றாலும், நமக்கு வேண்டிய தகவல்களை அள்ளித் தருவதைக் கொண்டுதான் அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும். ஏதாவது சொற்களை உள்ளிட்டுக் கொண்டிருக்கும்போது அது தொடர்பான வேறு சொற்களின் பட்டியல் வருகிறது. அதிலிருந்துகூட ஏதாவது ஒரு சொல் அல்லது வாசகத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியும். தேவையான தகவலின் முக்கிய வார்த்தையை உள்ளிட்டதும், தகவல்கள் வந்து கொட்டுகின்றன.

அங்கும் சில சிறப்புகளைச் செய்திருக்கிறது கூல். மற்ற தேடுபொறிகளைப் போல் வரிசையான பட்டியலாக இல்லாமல், பக்கவாட்டில் பத்திகளாக இணையப் பக்கங்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு இணையப் பக்கத்துக்கும் அது தொடர்பான படம் ஒன்றும் அருகிலேயே இருக்கிறது. இது தவிர, வலது ஓரத்தில் இருக்கும் ஒரு பட்டியலில் நாம் தேடிய தகவல்களை ஒத்த மற்ற தகவல்களின் பட்டியலும் கிடைக்கிறது. கூகுளுடன் ஒப்பிட்டால் வேகம் கொஞ்சம் அதிகம்தான். முதல்நாளிலேயே, 5 கோடி பேர் கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியிருப்பதாக பேட்டர்சன் கூறுகிறார். மற்ற தேடுபொறிகளுக்கு கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் இது மிக அதிகம். ஆயிரக்கணக்கான சர்வர்களை கூகுள் பயன்படுத்தி வரும் நிலையில், வெறும் 120 சர்வர்களைக் கொண்டு இத்தனை வசதிகளையும் வழங்கும் கூல் தேடுபொறியின் சாதனை வரவேற்கத் தக்கதே.

ஆனால், கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியவர்கள் யாரும் அது கூகுளை விட சிறந்த தேடுபொறி என்றோ, சரியான போட்டியாக இருக்கும் என்றோ இதுவரை கூறவில்லை. கூல் தேடுபொறியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய வசதிகளை வரவேற்கும் அதே நேரத்தில், பொருத்தமான தகவல்களைத் தேடித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இலட்சக்கணக்கான பக்கங்களைத் தேடித் தருவதை விட பொருத்தமான சில பக்கங்களைத் தேடித் தருவதே பயனுள்ளதாக இருக்கும். இந்த விடயத்தில் கூல் வெற்றிபெறவில்லை.

அதேபோல், விக்கிபீடியா போன்ற முக்கிய இணைய தளங்களைக் கூட முதல் பக்கத்தில் காட்டுவதில்லை என்றும் பலர் கூறுகின்றனர். தேடித் தரும் இணைய தளங்களுக்கு அருகிலேயே அது தொடர்பான படங்கள் வருவது வசதியாக இருந்தாலும், அதில் சில ஆபாச படங்களாக இருப்பது முகம்சுளிக்க வைக்கிறது. கூல் நிறுவனத்தினர் கூறுவது போல் கூகுளைவிட அதிக இணையப் பக்கங்களை உள்ளடங்கியது எனக் கூறுவதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

மிடியாவால்தான் இத்தனை பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பலர் குறை கூறுகின்றனர். உண்மையில் நல்ல விடயங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் நம்மை வந்தடைய வேண்டும். மீடியா வழியாக அல்ல. கோலியாத்தை தாவீது வீழ்த்தியது போன்று அதிசயம் எதுவும் நடந்தாலொழிய கூகுளுக்கு எந்த அச்சுறுத்தலும் இப்போதைக்கு இல்லை.

முதலிடத்தை இழக்கும் நிலையில் பெடரர்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டெனிஸ் போட்டியின் 3 ஆவது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரர் குரோஷியாவின் இவோகர்லோவிக்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

இந்தத் தோல்வியின் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளாக டெனிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வந்த ரோஜர் பெடரர் அந்த இடத்தை நழுவவிடவுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டெனிஸ் 3 ஆவது சுற்று ஆட்டத்தில் கர்லோவிக்கிடம் ரோஜர் பெடரர் 76, 46, 76 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிச் சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் வெற்றி பெற்றால் அவர் பெடரரிடமிருந்து தரவரிசையில் முதலிடத்தைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பருவத்தில் அதிகமான ஏஸ்களை அடித்து சேர்வீஸ்களில் வெற்றி பெற்ற கர்லோவிக் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பெடரருக்கு கூடுதல் நிர்ப்பந்தங்களையளித்தார்.

உலகின் முதலாவது இரட்டைக்கை மாற்று அறுவைச்சிகிச்சை - விஞ்ஞானிகளின் உலக சாதனை

6 வருடங்களுக்கு முன்பு விபத்தொன்றில் இரு கைகளையும் இழந்த விவசாயி ஒருவருக்கு, கைகள் மாற்று அறுவைச் சிகிச்சையின் மூலம் இறந்தவர் ஒருவரின் கைகளை பொருத்தி ஜேர்மனிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இரட்டை கைகள் மாற்று அறுவைச் சிகிச்சையொன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை இதுவே உலகில் முதல் தடவையாகும். முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், 54 வயதான மேற்படி விவசாயிக்கு 15 மணித்தியால அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு இக்கரங்களை பொருத்தியுள்ளனர்.

இதற்காக மேற்படி அறுவைச் சிகிச்சைக்கு சிறிது நேரத்திற்கு முன்பு உயிரிழந்த இளைஞர் ஒருவரது கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு 2003 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவில் கையின் முன்பகுதியை மட்டும் இழந்த ஒருவருக்கு கரமாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. ஆனால் தோள் பகுதிக்கு சிறிது கீழே கரங்கள் துண்டாக்கப்பட்ட ஒருவருக்கு கரமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதற்றடவையாகும். எனினும் அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டவரால் உடனடியாக கையை அசைக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

அந்நபரின் துண்டிக்கப்பட்ட கைப் பகுதிகளுக்கும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்குமிடையே தினசரி சுமார் ஒரு மில்லிமீற்றர் வரையில் நரம்புகள் வளர்ந்து இணைப்பு உறுதிப்படுத்தப்பட்ட பிற் பாடே, அவரால் கையை அசைக்கக்கூடியதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சனி கிரகத்தின் நிலவில் தண்ணீர்

சூரிய குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களில் 2-வது பெரிய கிரகம் சனி. சூரியனில் இருந்து 142 கோடி கி.மீ. தூரத்தில் சனி கிரகம் உள்ளது. சனி கிரகம் பற்றி ஆராய அமெரிக்காவின் நாசா நிறுவனம் `காசினி' என்ற விண்கலத்தை 1997-ம் ஆண்டு அனுப்பியது.

7 ஆண்டுகளுக்கு பிறகு 2004-ம் ஆண்டில் காசினி விண்கலம் சனி கிரகத்தின் அருகே சென்ற டைந்தது. அங்கு அது ஆய்வுகளை மேற்கொண்டது.

பூமிக்கு துணை கோளாக சந்திரன் இருப்பது போல சனி கிரகத்துக்கு துணை கோளாகவும் சனிக்கிரகத்தின் சந்திரனாகவும் டைட்டான் கிரகம் உள்ளது.சனி கிரகத்தின் நிலவில் (டைட்டான்) தண்ணீர் இருப் பதற்கான ஆதாரங்களை காசினி விண்கலம் அனுப்பி வைத்துள்ளது.

காசினி விண்கலம் அனுப்பிய படங்களில் நூற்றுக்கணக்கான ஏரிகள் போன்றும் பள்ளத்தாக்குகள் போன்றும் காணப்படுகின்றது. இதில் தண்ணீர் இருப்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

டைட்டானில் மீத்தேன், ஈத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன்களும் இருக்கின்றன என்பதையும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஐம்பதாவது அகவையில் நாசா

அமெரிக்காவின் விண்வெளிப் பயணத்தை முன்னேடுத்துச் செல்லும் நாசா எனப்படும் அந்நாட்டின் விண்வெளி ஆய்வு நிலையம் துவக்கப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகள் ரஷ்யாவின் பக்கமாகவும், அமெரிக்காவின் பக்கமாகவும் இரண்டாகப் பிளவுபட்டு நின்ற நிலையில், இந்த இரு நாடுகளும் தங்கள் வல்லமையை பறைசற்ற இராணுவத்தையும், தொழில்நுட்பத்தையும் உபகரணங்களாகப் பயன்படுத்தின.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போட்டிகள் விண்வெளியிலும் பெரிய அளவில் வெளிப்பட்டன. ஸ்புட்னிக் 1 என்று பெயரிடப்பட்ட முதல் செயற்கைக் கோளை அப்போதைய சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்ணில் ஏவியது.


விண்வெளி முயற்சிகளில் முன்னணியில் நாசா திகழ்கிறது. நவம்பர் 3 ஆம் திகதி ஸ்புட்னிக் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த அமெரிக்கா எடுத்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது,

1957 ஆம் ஆண்டின் டிசம்பர் 6 ஆம் திகதியன்று அமெரிக்காவின் செயற்கைக் கோள் ராக்கெட் ஏவுதளத்திலேயே வெடித்து சிதறியது.

இந்த நிலையில் 1958 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதியன்று அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜசன்ஹோவர் நேஷனல் ஏரோநாடிக்ஸ் அண்ட் ஸ்போஸ் ஆக்ட் என்ற சட்டத்தை கைச்சாத்திட்டார். இந்த சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அமைப்பான நாசா அதன்பிறகு பல விண்வெளி சாதனைகளுக்கு பொறுப்பானது.