செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான நீர்வளம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு

செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்குரிய நீர்வளம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் நாஸாவின் குழுவொன்று இங்கு அமிலங்களை உப்பாக மாற்றும் கார்பனேட் செறிந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக சான் பிரான்ஸிக்கோவில் நடைபெற்ற அமெரிக்க பூகோள, காலநிலை ஒன்றியத்தின் கூட்டத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது மிகவும் அதிசயமானதெனத் தெரிவித்துள்ள ரோட் ஐலண்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜோன் நீரும் கார்பன் ட்யொக்சைட்டும் கல்சியம், இரும்பு அல்லது மக்னீசியத்துடன் கலக்கும் போது கார்பனேட் உருவாவதாகவும் இது அமிலத்தை மிக விரைவில் கரையச் செய்யுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் செவ்வாய்க் கிரகத்தில் இருந்த நீர் அனைத்தும் ஒரு காலத்தில் அமிலமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

பிறிதொரு விஞ்ஞானி தெரிவிக்கையில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலொன்று செவ்வாயில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டதொரு வகை உயிரினம் இங்கு வாழ்ந்தமைக்கான பதிவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 3.6 பில்லியன் வருடங்கள் பழைமை வாய்ந்த கார்பனேட் பாறையொன்று இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செவ்வாயை ஆராயும் விண்கலத்தினால் எடுக்கப்பட்ட படங்களில் ஒரு கால்பந்தாட்ட மைதான அளவுக்கு கார்பனேட் படிவுகள் இருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டவெளியின் மத்தியில் இராட்சத கருந்துவாரம்

எமது அண்டவெளியின் மையத்தில் இராட்சத கருந்துவாரம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக ஜேர்மனிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பால்வெளியின் மையத்தில் 28 நட்சத்திரங்களால் சூழப்பட்ட பகுதியில் மேற்படி கருந்துவாரத்தை அவதானித்ததாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிலியிலுள்ள ஐரோப்பிய தெற்கு விண்வெளி அவதான நிலையத்திலுள்ள விண்வெளி தொலைக்காட்சியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்ட இந்தக் கருந்துவாரம் தொடர்பான தகவல்கள், "த அஸ்ரோபிஸிகல்" விண்வெளி விஞ்ஞான வெளியீட்டில் பிரசுரமாகியுள்ளன.

கருந்துவாரமானது எமது சூரியனைவிட 4 மில்லியன் மடங்கு பருமனானது என மதிப்பிடப்பட்டுள்ளது. அதீத ஈர்ப்புத்தன்மை சக்தியைக் கொண்ட வஸ்துக்களை உள்ளடக்கிய இந்த கருந்துவாரமானது தன்னைச் சுற்றியுள்ளவற்றை உள்ளீர்க்கும் வலிமை கொண்டுள்ளது என்பதால் அபாயகரம் மிக்கதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருந்துவாரமானது தன்னை அண்மித்துள்ளவற்றை உள்ளீர்ப்பதன் மூலம் போதிய அடர்த்தியைப் பெறுகையில், பெரும் சக்தி வெளிப்பாட்டு தாக்கங்கள் இடம்பெற்று நட்சத்திரமாக உருமாற்றம் அடைவதாக மேற்படி ஆய்வை மேற்கொண்ட ஜேர்மனிய மக்ஸ் பிளான்க் விண்வெளி ஆய்வுகூட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கருந்துவாரம் பூமியிலிருந்து 27,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 16 வருட ஆய்வையடுத்தே இந்த கருந்துவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளின் வளிமண்டலத்தில் நீராவி

நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளொன்றின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதற்கான சான்று தமக்குக் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி முகவர் நிலைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் "நேச்சர்" விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. "சூடான வியாழன்" என்றழைக்கப்படும் மேற்படி கோளின் மேற்பரப்பின் வெப்பநிலை 900 பாகை செல்சியஸாகும். மேலும் நாசா விண்வெளி முகவர் நிலைய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்வின் பிரகாரம், இந்தக் கோளின் மேற்பரப்பில் காபனீரொட்சைட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"சூடான வியாழன்" என செல்லமாக அழைக்கப்படும் "எச்.டி 189733 பி' என்ற இக்கிரகமானது எமது சூரியமண்டலத்திலுள்ள வியாழக் கிரகத்தின் வளிமண்டலத்தை ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

"சூடான வியாழன்" கிரகத்தின் வெப்பமான மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட வெப்பக் கதிர்ப்பு காரணமாக, அக்கிரகத்தின் வளிமண்டலத்தில் கனமான காற்றோட்டம் நிலவுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கோளானது அதி நவீன "ஹபின்" விண்வெளி தொலைகாட்டியைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தக் கண்டுபிடிப்பானது மனித வாழ்க்கைக்கு பொருத்தமான கோள்கள் அண்டவெளியில் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சிபாரிசுஉலக அளவில் சிறந்த சினிமா கலைஞர்களுக்கான கோல்டன் குளோப் விருது ஆலிவுட்டில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 66-வது கோல்டன் குளோப் விருது பெற தகுதியானவர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய `சிலம்டாக் மில்லியனர்' என்ற படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இசையமைத்தற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

சிலம்டாக் மில்லியனர், சிறந்த படம், சிறந்த டைரக்டர் (டேனி பாயல்), சிறந்த திரைக்கதை (சிமோன் பிïபோ) ஆகியவற்றுக்கும் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

மன இருள் அகற்றும் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள்

முருகப் பெருமானுக்குரிய சிறப்பு மிக்க தினங்கள் பல இந்துக்களால் கைக்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மூன்று வகை விரதநாட்களும் அடங்குகின்றன. அவை வார விரதநாட்கள், மாத விரத நாட்கள், ஆண்டு விரத நாட்கள் என அமைகின்றன. சுக்கிர வார விரதம் வார விரதமாகவும், கார்த்திகை விரதம் மாத விரதமாகவும், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை என்பன ஆண்டு விரதங்களாகவும் கைக்கொள்ளப்படுகின்றன.

மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை விரதம் கைக்கொள்ளப்படுகின்றது. திருக்கார்த்திகை விரதமானது ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அமையும் நாளில் மேற்கொள்ளப்படுகின்ற விரதமாகும். ஏனைய மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தினங்களைவிடக் கூடிய மேன்மை கொண்டதாகக் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் அமையும் நாள் கொள்ளப்படுவதால் திருக்கார்த்திகை எனக் குறிப்பிடப்படுகின்றது. திரு என்றால் உயர்ந்த, உத்தம என்று அமைகின்றது. அதனால், கார்த்திகை மாத விரதம் திருக்கார்த்திகை எனப் பெயர் பெறுகின்றது.

திருக்கார்த்திகைத் திருநாளைத் தீபத்திருநாள் என்றும் விளக்கீடு என்றும் கூறுகின்றோம். உலக உய்வின் பொருட்டு முருகப் பெருமான் தோன்றிய தினமாக இந்நாள் கொண்டாடப்படுகின்றது. சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப் பிழம்புகள் சரவணப் பொய்கையில் சென்று விழுந்தபோது அவை குளிர்ச்சி பெற்று ஆறு குழந்தைகளாகத் தோற்றம் பெற்றதாகவும், அந்த ஆறு குழந்தைகளையும் உமாதேவியார் கட்டியணைத்தபோது ஆறு திருமுகங்களும் பன்னிருகைகளும் கொண்ட முருகப் பெருமான் தோற்றம் பெற்றதாகவும் புராணங்கள் பகர்கின்றன.

"அருவும், உருவுமாகி, அனாதியாய்ப் பலவாறொன்றாய் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாக கருணை கூர்முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டு ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய' என்ற பாடல் முருகப் பெருமானின் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

உலக நன்மைக்காக முருகப் பெருமான் தோன்றிய திருநாளாகக் கொள்ளப் படும் இந்நன்னாளை ஆலயங்களிலும், இல்லங்களிலும் தீப ஒளியேற்றிக் கொண்டாடுவது நெடுங்காலமாக இந்துக்கள் கைக்கொள்ளும் வழிபாடாகவும் அமைகின்றது. அத்துடன், ஆசாரத்துடன் விரதமும் இருந்து வழிபாடு செய்யப்படுகின்றது.

சர்வாலய தீபம், குமராலயதீபம் என்று இரண்டாக இத்தீபத்திருநாள் வகுக்கப்பட்டுள்ளது. சர்வாலய தீபம் என்னும் போது இந்துக்கள் தமது இல்லங்கள் தோறும் தீபமேற்றுவதாக அமைகின்றது.

சர்வாலய தீபதினத்தன்று இல்லங்கள் தோறும் தீபமேற்றி, ஒளிபரப்பி வழிபாடு செய்வதானது ஒவ்வொரு இல்லமும் இறைவன் உறையும் ஆலயமாக விளங்க வேண்டும். தீமை தரும் நோக்கங்களோ, சிந்தனைகளோ, செயற்பாடுகளோ அற்ற புனிதம் ததும்பும் இல்லங்களாக இறைவன் குடியிருக்கும் கோயிலைப் போன்று சிறப்புடன் விளங்கவேண்டும் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்துவதாகச் சர்வாலய தீபம் விளங்குகின்றது.

இறைவன் உறையும் ஆலயங்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் குடியிருக்கும் வீடுகளும் புனிதமாக இருக்க வேண்டும். அப்போது தான் பண்பின்பாற்பட்ட உயர்ந்த வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்பதுடன் தீயபகை, கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் குடும்ப, சமூக உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் வழியேற்படும்.

அத்துடன் பக்தியுடன் கூடிய பண்பு மிகும் நெறியில் வாழ்வின் பாதையை ஒழுங்கமைத்துக் கொள்ளும் போது அஞ்சேல் என்று அபயமளிக்கும் முருகப் பெருமானின் கருணைமிகுகாவலும் கிட்டிவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுவதால் தன்னம்பிக்கையும் தானேவந்து சேர்ந்து வாழ்வை எழுச்சியுறச் செய்யும்.

முருகனைச் சரணடைந்தால் பெறும் பாக்கியம் எதுவென்று பாரதியார் இவ்வாறு கூறியுள்ளார். "வேலைப்பணிந்தால் விடுதலையாம்! வேல் முருகன் காலைப்பணிந்தால் கவலைபோம்' என்கிறார் அவர். மனக்கவலை மாற்றும் மாமருந்து திருமுருகன் திருவடியே என்பதைப் பாரதியார் எடுத்துக்கூறியுள்ளார்.

இல்லங்களில் தீப ஒளியேற்றுவது போன்று ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. ஆலயங்களில் தீப மேற்றி விசேடவழிபாடுகள் செய்யும் நாள் குமராலய தீபத்திருநாளாகின்றது. முருகன் ஆலயங்களில் மட்டுமல்ல, சகல இந்து ஆலயங்களிலும் இத்தீபத்திருநாள் கொண்டாடப்பட்டுவருகின்றது. மன இருள் அகற்ற இறையருள் எங்கும் பிரகாசிக்க வேண்டி நடைபெறும் வழிபாடாக குமாராலயதீபம் ஏற்றப்படுகின்றது. அதேபோன்று கார்த்திகை நட்சத்திரத்தினத்திற்கு அடுத்து வரும் ரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாள் திருமாலுக்குரிய சிறப்பு தினமாக அமைகின்றது. அன்றைய தினத்தை விஷ்ணு ஆலயதீபத்திருநாளாகக் கொண்டாடுவது இந்துக்களின் மரபு. காக்கும் தெய்வமான திருமாலின் கருணை மிக்க காப்பு வேண்டி அன்றைய தினம் வழிபாடு இடம் பெறுகின்றது.

இந்துக்கள் இயற்கைக்குத் தெய்வநிலைதந்து போற்றுகின்றனர். அதற்கான திருத்தலங்களாகக் கொள்ளப்படும் ஐந்து புண்ணிய தலங்கள் அதாவது பஞ்சபூதத்திருத்தலங்களாக தமிழ் நாட்டிலேயுள்ள ஐந்து பெருமையும், மேன்மையும் பெற்ற தலங்கள் உள்ளன.

முறையே நிலம் அதாவது பூமிக்குக் காஞ்சிபுரமும் நீருக்கு திருவானைக்காவும், நெருப்புக்கு திருவண்ணாமலையும், காற்றுக்குத் திருக்காளத்தியும், ஆகாயத்திற்குச் சிதம்பரமுமாக அமைந்து அருளுகின்றன.

தீப ஒளியேற்றி வழிபடும் திருக்கார்த்திகை தினத்திலே அக்கினி பகவானுக்குரியதாகக் கொள்ளப்படும் திருவண்ணாமலைத் திருத்தலத்திலே தீபமேற்றி சிறப்பான வழிபாட்டுடன் கொண்டாடப் படுகின்றது. இந்துக்களின் இயற்கையின், பஞ்சபூதவழிபாட்டின் சான்றாக இது அமைகின்றது.

கொலை வெறியும், கொடுபகையும் வாட்டிவதைக்கும் இக்கால கட்டத்திலேயே சூரனை அடக்கி உலகில் நிம்மதி நிலவச் செய்யத் தோன்றிய முருகப் பெருமானின் அருள் நாடி விரதமிருந்து அபயம் கேட்போம். "யாமிருக்கப் பயமேன்". 'அஞ்சேல்' என்று அபயம் தந்து ஆறுதல் தரும் முருகப் பெருமானை அச்சமில்லா பெருவாழ்வை அடைய இருண்ட, கொடிய குணங்கள் யாவும் நீங்கி அருளொளி எங்கும் பரவிப் பிரகாசிக்க அருளுமாறு தீபமேற்றி வழிபடுவோம்.

- நன்றி தினக்குரல் -