நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்களாட்சி மலர்ந்ததையடுத்து, நாராயணிஹீட்டி அரண்மனையில் வசிந்து வந்த மன்னர் ஞானேந்திரா குடும்பத்தினரை அரசு அங்கிருந்து வெளியேற்றியது.
அதனைத் தொடர்ந்து, அந்த அரண்மனையை அருங்காட்சியமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக, நேபாள அரச பரம்பரைக்கு கொடையாக அளிக்கப்பட்ட பரிசு பொருள்களைச் சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரண்டாம் உலக போரின் போது, பிரிட்டன், பிரான்ஸ் படைகளுக்கு ஆதரவு கரம் நீட்டாது, ஜெர்மானிய படைகளுக்கு பக்கபலமாக இருந்ததற்காக அப்போதைய நேபாள மன்னர் திருபுவனுக்கு விலை உயர்ந்த மெர்சிடஸ் காரை ஜெர்மன் ஆட்சியாளர் ஹிட்லர் பரிசாக அளித்தார்.
இந்த கார் தற்போது அரண்மனையில் இல்லை. இதனை அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
ஆனால், இந்த கார் 1943-ம் ஆண்டிலேயே இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக முன்னாள் பிரதமரின் மகள் ஜனக் ராஜ்ய லஷ்மி ஷா கூறியுள்ளார். தற்போது 92 வயதாகும் இவர், இந்த கார் மன்னர் திருபுவனுக்கு வழங்கப்படவில்லை என்றும், தனது தந்தையும், அப்போதைய பிரதமருமான ஜூதா சும்ஷீர் ராணாவுக்கே அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் இந்தியா வந்த ஜூதா அந்த காரை தன்னுடனே கொண்டு சென்றார். இந்தியாவில் அந்த காரை தான் 17 ஆண்டுகள் பயன்படுத்தி வந்ததாகவும், பின்னர் அதனை தனது சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு, தான் மீண்டும் நேபாளம் திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹிட்லர் கொடையாக அளித்த காரால் நேபாளத்தில் புதிய சர்ச்சை தோன்றியுள்ளது
No comments:
Post a Comment