டைனோசர் இனம் அழிந்தது எப்படி?

ஜுராஸிக்பார்க் என்ற ஆங்கிலப் படத்தில் டைனோசர்களின் பிரம்மாண்டத்தையும், அவைகளின் அட்டகாசத்தையும் பார்த்து பிரமித்தோம் நாம். அந்த இனத்தில் மருந்துக்குகூட இன்று எதுவும் இல்லை!

கிட்டத்தட்ட ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால், இங்கு கூட்டம் கூட்டமாக வசித்து வந்த டைனோசர்கள் எப்படி ஒட்டு மொத்தமாக அழிந்தன? என்ற கேள்வி எல்லோருக்குமே எழுந்தது. அதற்கான ஆராய்ச்சிகளும், முடிவுகளும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருந்தன.

பொதுவாக எரிமலைகள் பொங்கியதால் வெளிப்பட்ட வாயுக்கள் காரணமாகத்தான் டைனோசர்கள் இறந்திருக்கலாம் என்று பரவலாக கருதப்பட்டது. 1980ஆம் ஆண்டில் வால்டேர் ஆல்வர்ஸ் என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் இத்தாலியில் உள்ள கபியோ என்ற பீடபூமிப் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபடும்போது... நிலத்திற்கு மேல் தெரிந்த அடுக்குப் பாறைகளுக்கு இடையில் ஒரு அங்குல அளவுக்கு கறுப்பாக... வித்தியாசமான களிமண் இருப்பதைக் கண்டார். இதில் சிறிதளவை எடுத்து வந்து தனது தந்தை லூயிஸ் ஆல்வர்ஸிடம் கொடுத்தார்.

லூயிஸ் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. அவர் அந்த மண்ணை சோதனை செய்ததில், அதில் அளவுக்கு அதிகமாக இரிடியம் என்ற உலோகம் இருப்பதை கண்டார். இரிடியம் என்பது இரும்பைப் போன்ற கடினமான உலோகம். தங்கத்தை விட அரிதான இந்த உலோகம் விண்கற்களில் அதிகளவில் உள்ளன.

பாறை அடுக்குகளுக்கு இடையில் அதிகளவில் இரிடியம் உலோகம் கலந்த தூசிகள் பூமியின் மேல் படிந்ததே காரணம் என்றனர் சிலர். குறிப்பாக, அந்தப் பாறைகளின் வயது ஆறு கோடியாக இருந்ததால், டைனோசர்கள் அழிவுக்கு அந்த விண்கல் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறினர்.

ஆனால் விண்கல் எங்கே விழுந்தது என்று யாருக்கும் தெரியாததால் தெளிவான முடிவுக்கு யாரும் வரவில்லை. ஆனால் அதன் பின்னர், டென்மார்க்கில் இதேபோல், பாறை அடுக்குகளுக்கு இடையில் இரிடியம் அதிக அளவில் உள்ள களிமண் அடுக்கு இருப்பதை கண்டுபிடித்தபோது விண்கல் விழுந்த இடத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியது.

பாறைகளில் இருந்த இரிடியம் அளவின் அடிப்படையில் பூமியைத் தாக்கிய விண்கள் 14 கிலோமீட்டர் குறுக்களவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இதன்படி விண்கல் பூமியின் மீது மோதினால் கிட்டத்தட்ட 180 கிலோமீட்டர் குறுக்களவிற்கு பள்ளம் ஏற்பட்டிருக்கும் என்றும் ஆல்வர்ஸ் தெரிவித்தார்.

அதன் பிறகு, வட அமெரிக்காவில் இருந்த பாறை அடுக்குகளில் ஒன்றரை அங்குல அளவுக்கும், தென் அமெரிக்காவில் இருந்த பாறைகளில் இரண்டு அங்குல அளவுக்கும் இரிடியம் கலந்த களிமண் அடுக்கு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டவுடன் இந்த இரண்டு இடங்களுக்கும் இடையில்தான் விண்கல் விழுந்திருக்கும் என்றும் நம்பப் பட்டது.

இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த ஆலன் ஹில்டே பிராண்ட் என்ற புவியியல் ஆய்வாளர், ஒரு எண்ணை நிறுவனத்தின் நில வரைபடத்தை எதேச்சையாக பார்த்தபோது, அதில் மெக்சிகோவிற்கு அருகில் நிலத்தின் மேல்பாதியும், கடலுக்கு அடியில் கீழ்பாதியுமாக நீள் முட்டை வடிவில் ஒரு பெரிய பள்ளமான பகுதி குறிப்பிடப் பட்டிருந்ததைப் பார்த்தார். இந்தப் பள்ளம் அல்வர்ஸ் கூறியபடி 200 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்ததால், டைனோசர்களை அழித்த விண்கல் விழுந்த இடம் இதுவாகத் தான் இருக்கும் என்று தெரிவித்தார். இதையே அனைவரும் ஆமோதித்தனர்.

மேலும், இதேபோல் இன்னொரு விண்கல் வந்தால் என்னவாகும் என்ற அச்சமும் ஏற்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளாக மீடியாக்களும் தங்களுடைய பங்குக்கு டைனோசர்களைப் பற்றி கூறிக் கொண்டே இருந்தன.

தற்போது, டைனோசர் அழிவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரின்சிடன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெர்ட்டா கெல்லர் என்ற தொல்விலங்கியல் பேராசிரியர், தனது குழுவினருடன் விண்கல் விழுந்த இடத்துக்கு சென்று பாறை அடுக்குகளில் இருந்த கடல் பூச்சிகள் மற்றும் சிப்பிகளை ஆய்வு செய்து அவற்றின் வயதைக் கணக்கிட்டார்.

இதில் அந்தப் பள்ளம் டைனோசர்கள் அழிவுக்கு 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதையும், இதற்கும், டைனோசர்கள் அழிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் கண்டுப்பிடித்தார்.

இந்நிலையில் மும்பைக்கு மேற்கில் அரபிக்கடலுக்கு அடியில் 600 கிலோ மீட்டர் குறுக்களவில் ஒரு பெரிய பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சிவா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பள்ளம், மெக்சிகோவில் காணப்பட்ட பள்ளத்தை விட பத்து மடங்கு பெரியதாக இருக்கிறது.

இந்தப் பள்ளத்தின் நடுவில் எவரெஸ்ட் மலையை விட பெரிய மலையும் உள்ளது. இதை அறிந்த கெல்லர், உடனே இந்தியாவிற்கு வந்து தக்காணப் பீடபூமியில் இருக்கும் பாறைப் படிவங்கள் எப்போது ஏற்பட்டது... இதுக்கும் டைனோசர் அழிவிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்று ஆராய்ந்தார்.

குறிப்பாக ராஜமுந்திரிக்கு அருகில் உள்ள பாறைக் குழம்பு படிவங்களை ஆய்வு செய்ததில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த பொராமினிபெரா என்ற கடல் உயிர்களின் புதை படிவங்கள் இருப்பதைக் கண்டார்.

இந்தக் கால கட்டத்தில்தான் டைனோசர்களோடு, கடல் பூச்சிகளும் அழிந்தன. இதன் அடிப்படையில் தக்காணப் பீடபூமியில் முன்பு கடலுக்கு அடியில் இருந்து பாறைக்குழம்பு வெளிவந்த போது அதிலிருந்து வெளிப்பட்ட வாயுக்களே... டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பார்க்க வினோதமாக இருக்கும் டைனோசர்களின் உருவத்தைப் போன்றே... அவைகளின் அழிவுக்கான காரணங்களும் ஆச்சரியத்தக்க வகையில் நீண்டு கொண்டே செல்கின்றன!

No comments: