கல்வித்துறையில் தேசிய கணிப்பீட்டு முறைமை

கல்வியினூடாக வறுமையைக் குறைப்பதாயின், மாணவரின் பாடசாலை சேர்வு வீத அதிகரிப்பு, பாடசாலைக் கல்வியை முடித்துக்கொள்வோரின் வீதத்தின் அதிகரிப்பு என்பன மட்டும் போதாது; மாணவர்களில் ஏற்படும் கல்வித்தேர்ச்சி, அறிவாற்றல் அதிகரிப்பு என்பன வறுமைத் தணிப்புக்கு முக்கியமானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கான கல்வியின் முழு ஆற்றலையும் பெற்றுக்கொள்ள உயர்தரமான அறிவும் அறிவுத்திறன்களும் மாணவர்களில் வளர்க்கப்படல் வேண்டும்.

வளர்முக நாடுகளில் பாடசாலைக் கல்வியைப் பெறும் மாணவர்களின் கற்றல் தேர்ச்சி மிகவும் குறைவு என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நாடுகள் மாணவர்களின் கல்வித்தேர்ச்சிகளை முறையாகக் கண்காணிப்பதில்லை; மாணவர் சித்தி பற்றிய தமது சொந்த கணிப்பீடுகளை நடத்துவதில்லை; சர்வதேச, பிராந்திய ரீதியான கணிப்பீடுகளிலும் கலந்து கொள்வதில்லை. இவ்வாறான கணிப்பீடுகள் இல்லாமையால் மாணவர்களின் கல்வித் தேர்ச்சி பற்றியும் காலப்போக்கில் அதில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடியாதுள்ளது. கல்வியின் தராதரங்களை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் தாக்கம், நாட்டின் பின்தங்கிய பிரிவினர்களின் கல்விச் சித்தி போன்ற விடயங்கள் பற்றி எதுவும் அறியமுடியவில்லை.

1990 களிலும் பின்னர் 2000 இல் தொடங்கிய தசாப்தத்திலும் தேசிய, சர்வதேசிய ரீதியாக மாணவர்களின் கல்விச் சித்தி பற்றிய மதிப்பீடுகள் பிரசித்தி பெற்றுவிட்டன. கல்வியின் தராதரம் பற்றித் தீர்மானிப்பதற்கான முக்கிய கருவிகளாக அவை கருதப்படுகின்றன. இக்கணிப்பீடுகள் இரு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை;

முதலாவதாக, கோளமயமாக்கம் அதிகரித்து வருவதையும், "யாவருக்கும் கல்வி' என்னும் கொள்கையில் அக்கறை செலுத்தப்பட்டு வருவதையும் இது காட்டுகின்றது. சர்வதேச ரீதியான கணிப்பீடுகள் கோலமயமாக்கத்தின் ஒரு விளைவேயாகும். இதுவரை காலமும் பாடசாலைகளின் வளங்களைக் கொண்டு கல்வித்தராதரங்களை மதிப்பிடும் போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும் இது காட்டுகின்றது. பாடசாலையின் பௌதீக வளங்கள், ஆசிரியர் பயிற்சி, பாட ஏற்பாட்டு மற்றும் கற்பித்தல் சாதனங்கள் பற்றிய வள மதிப்பீட்டை விடுத்து, பாடசாலைக் கல்வியினால் மாணவர் பெற்ற கல்விச் சித்தியைக் கணிப்பீடு செய்யும் புதிய போக்குத் தென்படுகின்றது.

இன்று மாணவர்களின் கல்வித் தேர்ச்சியில் அக்கறை செலுத்தக் காரணம் மனித வளவிருத்தியில் புதிதாகச் செலுத்தப்படும் கவனமாகும். பொருளாதார அபிவிருத்தியின் மூலப்பொருட்களும் உழைப்பையும் விட அறிவு முக்கிய பங்கு கொள்கின்றது; சர்வதேச சந்தையில் நாட்டின் போட்டித்தன்மையையும் அதன் பொருளாதார வளர்ச்சி வீதத்தையும் தீர்மானிப்பதில் அறிவும் திறன்களையும் கொண்டோர் முக்கிய பங்கு கொள்கின்றனர் என்பதால் கல்வித் தேர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இப்பின்புலத்தில் இன்று கல்வி முறைகளின் செயலாற்றத்தினை அறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்விச்சித்தி பற்றிய தேசிய கணிப்பீடுகளைக் கொண்டு, கல்வி முறைகளின் செயலாற்றத்தை அறியலாம். இத்தேசிய கணிப்பீடு குறிப்பிட்ட தரத்தில் (Grade) அல்லது குறிப்பிட்ட வயதினருக்கு, பாட ஏற்பாட்டின் ஒரு துறையில் நடத்தப்படலாம். மாணவர் சித்தி பற்றிய இக்கணிப்பீடு, கல்விமுறையின் சித்தி அடைவு பற்றிய ஒரு மதிப்பீட்டைத் தருகின்றது. கல்வி முறையின் சில பிரதான அம்சங்கள் பற்றிக் கொள்கை வகுப்பாளர்கள் தகவலைப் பெற்றுக்கொள்ள இத்தேசிய கல்வி ஆய்வு உதவும். மாணவர்களுக்கு அல்லது அவர்களில் சிலருக்கு (Sample) நடத்தப்படும். இக்கணிப்பீட்டோடு, ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் போன்றோரும் பல பின்னணித் தகவல்களை வழங்குதல் வேண்டும். மாணவர்களின் சித்தி! பற்றிய தகவல்களோடு (புள்ளிகள்/ தரங்கள்) வினாக் கொத்துகள் மூலம் பெறப்படும் பின்னணித் தகவல்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். மாணவரின் சித்தியில் செல்வாக்குச் செலுத்தும் குடும்பப் பின்னணி, ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் உளப்பாங்கு, பாட ஏற்பாட்டுத் துணைச் சாதனங்கள் என்பன பற்றியும் ஆராயப்படும்.

பொது அம்சங்கள்

உலகின் பல பாகங்களிலும் நடத்தப்படும் தேசிய கணிப்பீட்டு முறைமைகளில் பல பொது அம்சங்கள் உண்டு; சகல கணிப்பீடுகளும் மொழியறிவு/ எழுத்தறிவு, கணிதத்திறன்கள்/ எண்ணறிவு பற்றியன. சில நாடுகளில் இரண்டாம் மொழி, விஞ்ஞானம், திசை, சமூகக்கல்வி என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன. சகல தேசிய கணிப்பீடுகளிலும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பங்குகொள்கின்றனர். மேலும், கட்டாயக்கல்வியின் முடிவில் இக்கணிப்பீடுகள் நடத்தப்படுகின்றன.

வேறுபாடுகள்

தேசிய கணிப்பீட்டு முறைமைகளில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகளும் உண்டு. சில நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் கணிப்பீடுகள் நடத்தப்படுகின்றன. வெவ்வேறு பாடப்பரப்புகளில் கணிப்பீடு செய்யப்படுவதும், உண்டு. வேறு சில நாடுகளில் கணிப்பீடுகள் அடிக்கடி நடைபெறுவதில்லை. சில நாடுகளில் கல்வி அமைச்சும் வேறு சில நாடுகளில் தேசிய ஆராய்ச்சி நிலையம், பரீட்சைச் சபை, பல்கலைக்கழகங்கள் எனப் பல்வேறு நிலையங்கள், இக்கணிப்பீடுகளைச் செய்கின்றன. சில நாடுகளில் பாடசாலைகள் விரும்பினால் மட்டும் கணிப்பீட்டில் பங்குகொள்ளலாம். சில நாடுகளில் சகல பாடசாலைகளும் பங்குகொண்டேயாக வேண்டும். சில பாடசாலைகள் பங்குகொள்ளாதபோது, பெறுபேறுகள் கல்வி முறைகளின் செயலாற்றம் பற்றிய சரியான முடிவுகளைப் பெறமுடியாது.

வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகள் சில காலமாகத் தேசிய கணிப்பீட்டு முறைமையைப் பயன்படுத்தி வந்தாலும் 1990 களிலேயே ஏனைய நாடுகள் இக்கணிப்பீட்டை நடத்தும் வசதிகளைப் பெற்றன. இலத்தீன் அமெரிக்க நாடுகள் 1990 களில் இக்கணிப்பீட்டை நடத்தத் தொடங்கின. 1990 இல் "யாவருக்கும் கல்வி'யைப் பிரகடனம் செய்த Jomptien மகாநாடானது, கல்வி விரிவை மட்டுமன்றி கல்வித் தேர்ச்சிகளையும் வலியுறுத்தியது; 2000 ஆம் ஆண்டின் Dakar நடவடிக்கைச் சட்டமும் இதே விடயத்தை வலியுறுத்தியது. அதன்படி "கல்வித்தராதரத்தின் சகல அம்சங்களிலும் மேம்பாடு காண வேண்டும், சகல பிள்ளைகளும் எழுத்தறிவிலும் எண்ணறிவிலும் வாழ்க்கைத்திறன்களிலும் தேர்ச்சி காண வேண்டும்.'

இப்பின்புலத்தில், "யாவருக்கும் கல்வி' என்ற கொள்கையை ஏற்றுக்கொண்ட சகல நாடுகளும் மாணவர்களின் கற்றல் தேர்ச்சியை அறிந்து கொள்ளும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதாயிற்று. தேசிய அரசாங்கங்கள் நன்கொடை வழங்கும் நாடுகளின் உதவியுடன் தேசிய கணிப்பீட்டு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கின. இக்கணிப்பீடுகளைப் பயன்படுத்திக் கல்வித் தராதரங்களை மேம்படுத்த வேண்டும் என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், 2004 வரை செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, தேசிய கணிப்பீட்டு முறைகள் மாணவர்களின் தேர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

மாணவர்களின் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, பாடசாலை வளங்கள் அதிகரிக்கப்படவில்லை என்பதோடு, பல வளர்முக நாடுகளில் செய்யப்பட்ட தேசியக் கணிப்பீடுகள் வழங்கிய தகவல்கள் தரங்குறைந்து காணப்பட்டன.

இக்கணிப்பீடுகள் ஆராய முற்பட்ட விடயங்கள்

*மாணவர்கள் பாடசாலை முறையில் எந்த அளவு சிறப்பாகக் கற்கின்றார்கள்? (பொது எதிர்பார்ப்புகள், பாட ஏற்பாட்டு நோக்கங்கள், வாழ்க்கைக்கான ஆயத்தம் என்பவற்றோடு தொடர்புபடுத்தி இவ்விடயம் ஆராய்ப்படும்)

*குறிப்பிட்ட துணைச் சமூகக் குழுக்களின் செயலாற்றம் எப்படி உள்ளது? (ஆண்கள் பெண்கள், நகர கிராமப்புற மாணவர்களில் வெவ்வேறு இன,மொழிக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள், வெவ்வேறு பிராந்தியங்களில் வாழும் மாணவர்கள் இவர்களுடைய செயலாற்றல்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டா?

*மாணவர்களின் சித்தியோடு, தொடர்புடைய காரணங்கள் எவை? பாடசாலை வளங்கள், ஆசிரியர்களின் ஆயத்த நிலை, தகுதி, பாடசாலை வகை போன்ற நிலைமைகளா அல்லது மாணவரின் வீட்டுச் சூழலும் சமூகச் சூழலுமா?

*அரசாங்கம் வகுத்துள்ள நியமங்களுக்கேற்ப வளங்கள் வழங்கப்பட்டுள்ளனவா? உதாரணமாக, பாடநூல்கள், ஆசிரியர் தகுதிகள் பிற தராதர உள்ளீடுகள் என்பன.

*காலப்போக்கில் மாணவர்களின் சித்தி மட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா?

பொதுப் பரீட்சைகளும் தேசிய மதிப்பீடுகளும்

எல்லா நாடுகளிலுமே பொதுப் பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. (உதாரணமாக இலங்கையில் 5ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சா/நி, உ/நி பரீட்சை) ஆனால், இப்பரீட்சைகள், தேசிய கணிப்பீடு வழங்கும் தகவல்களைத் தருவதில்லை. பொதுப் பரீட்சைகள் மாணவர் சித்திக்குச் சான்றிதழ் வழங்குகின்றன; அடுத்த கட்டப் படிப்புக்கு மாணவர்களைத் தெரிவு செய்கின்றன; பாடசாலைகளில் கற்கப்படும் விடயங்களைத் தரப்படுத்த உதவுகின்றன.

பொதுப் பரீட்சைகளின் பிரதான பணி அடுத்த கட்டக் கல்விக்கும் வேலைகளுக்கும் மாணவர்களைத் தெரிவு செய்வதாகும். சார்பளவில் உயர்சித்தி மாணவர்களை வேறுபடுத்திக் காட்டவும் உதவுகின்றது. இதனால், முழுப்பாட ஏற்பாட்டையும் உள்ளடக்கியதாகப் பொதுப் பரீட்சைகள் அமைவதில்லை.

இரண்டாவதாக, ஆண்டுக்கு ஆண்டு பரீட்சைக்கு வெவ்வேறு மாணவர்கள் அமர்கின்றனர். இதனால், கால அடிப்படையில் ஒப்பீடுகளையும், செய்துகொள்ள முடியாது.

மூன்றாவதாக, இப்பரீட்சைகள் மாணவர்களுக்கு எதிர்காலப் பயனுடையவை என்பதாலும், ஆசிரியர்களுக்கும் பரீட்சை முடிவுகள் விளைவுகளை ஏற்படுத்துவதாலும் பரீட்சிக்கப்படும் பாடப்பகுதிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற இடமுண்டு, உதாரணமாக செயல்முறைத் திறன்கள் பரீட்சிக்கப்படுவதில்லை. இதனால், பரீட்சைகள் பாட ஏற்பாட்டை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை.

பொதுவாக, இப்பரீட்சைகள் மிகப் பிந்தியே நடத்தப்படுகின்றன. (தரம் 11, 13) ஆனால், மாணவர்கள் பற்றிய தகவல் அவர்கள் சிறு வயதினராக இருக்கும் போதே பெறப்படல் வேண்டும். இப்பின்புலத்தில் பொதுப் பரீட்சைகளை விட தேசிய கணிப்பீடுகள் கல்வி முறையின் கல்வித்தராதரத்தைப் பற்றி அறிய அதிகம் உதவுவன.

23-06-2008 தினக்குரல்

No comments: