வானத்தில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து ருமேனியா நாட்டு போர் விமானத்தின் மீது மர்ம பொருள் ஒன்று மோதியதில் விமானி காயம் அடைந்தார். அந்த விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதியதா என்று விசாரணை நடைபெறுகிறது.
33 ஆயிரம் அடி உயரத்தில்
விண்வெளியில் இருந்து பறக்கும் தட்டு வருவதாகவும், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து விட்டு செல்வதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாவது உண்டு. ஆனால், அந்த தகவல்கள் எதுவும் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. எனினும் அது தொடர்பான கதைகளும், சினிமா படங்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் ஐரோப்பாவில் அமைந்துள்ள ருமேனியா நாட்டுக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று விண்ணில் பறந்தது. ரஷிய தயாரிப்பான `மிக்-21' ரகத்தை சேர்ந்த அந்த விமானம், தான்சில்வேனியா பகுதியில், சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.
விமானி அறை சேதம்
அப்போது அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று விமானத்தின் மீது மோதி விட்டு சென்றது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மோதிய பொருளின் எடை சுமார் 500 கிலோ இருக்கும். மர்ம பொருள் மோதியதால் போர் விமானத்தில் உள்ள விமானியின் அறையும் முற்றிலுமாக சேதம் அடைந்தது.
விமானிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. எனினும், சமயோசிதமாக செயல்பட்ட அந்த விமானி, விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். விமானம் மீது மோதிய அந்த பொருள், எதிர்பாராத விதமாக மோதியதுபோல தெரியவில்லை. குறி பார்த்து ஏவி விட்டது போல இருந்தது.
பறக்கும் தட்டா?
இந்த விபத்து குறித்து விமானத்தில் இருந்த வீடியோ காமிராவில் பதிவான காட்சிகளில், நீல வண்ணத்திலான பனிக்கட்டி போன்ற பொருள் விமானத்தை குறி பார்த்து தாக்கியது தெரியவந்தது. அது பறக்கும் தட்டு போல காணப்பட்டது. எனவே, விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
போர் விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதியது குறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ருமேனியா ராணுவ அதிகாரிகள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரிக்க ராணுவ தளபதி கிரிகோரி தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளனர்.
அதிபர் புஷ் விமானமா?
இதற்கிடையே தனது தந்தைக்கு சொந்தமான பகுதிக்கு ரகசிய பயணமாக அமெரிக்க அதிபர் புஷ் சென்றதாகவும், அந்த விமானத்தில் இருந்துதான் மர்ம பொருள் ஏவப்பட்டதாகவும் ருமேனிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
போர் விமானத்தின் மீது அந்த பொருள் மோதிய உடனேயே புஷ் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, அதிக உயரத்துக்கு விமானத்தை ஓட்டிச் சென்றதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.
ருமேனியா எல்லைக்குள் செல்வதற்கான அனுமதி மற்றும் தகவல் இல்லாமல் புஷ் விமானம் சென்றதாக புகார் எழுந்துள்ளதால் ருமேனியா - அமெரிக்கா இடையே தூதரக ரீதியிலான பிரச்சினை எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment