478 காரட் வைரம்

தென் ஆப்பிரிக்காவை போலவே இங்கு ஏராள மான தங்கம், வைர சுரங் கங்கள் உள்ளன. இங்குள்ள வெட்செங் பகுதியில் உள்ள சுரங்கத்தில் அபூர்வ வைரக் கல் வெட்டி எடுத்திருக் கிறார்கள். உலகிலேயே பெரிய வைர கற்களில் இதுவும் ஒன்று.இந்த வைரக்கல் 478 காரட். இன்னும் இந்த வைரக்கல் பட்டை தீட்டப்படவில்லை.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 105 காரட் கோகினூர் வைரத்தை விட இது மிகவும் பெரியது.ஆப்பரினாஸ் 3106 காரட் வைரக்கல் கடந்த 1905 வெட்டி எடுக்கப்பட்டது. மிகப் பெரிய வைரக்கற்களில் அது முதல் இடத்தை பிடித்தது. இப்போது லிசோ தோவில் வெட்டி எடுக்கப் பட்ட வைக்கல் இந்த வரிசையில் 20-வது இடத்தை பிடித்துள்ளது.

கோழி முட்டைக்குள் பாம்பு குட்டி

ஆம்லெட் போடுவதற்காக கோழிமுட்டையை உடைத்தவர் அதற்குள் பாம்புக்குட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பீகார் மாநிலம் சமஸ்திபூருக்கு அருகே உள்ளது சம்து கிராமம். இந்த கிராமத்தைச்சேர்ந்த பகதூர் ராம் என்பவர் 2 கோழிகளை வளர்த்து வருகிறார். அந்த கோழிகள் போடும் முட்டைகளை அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வது வழக்கம்.

நேற்று பகதூர்ராமின் நண்பர் கிஷோர் குமார் என்பவர் ஆம்லெட் சாப்பிட ஆசைப்பட்டு பகதூரிடம் இருந்து ஒரு முட்டையை விலைக்கு வாங்கி வந்தார்.

அடுப்பில் தோசைக்கல்லை போட்டு கல் சூடானதும் முட்டையை உடைத்து தோசைக்கல்லில் ஊற்றினார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போட்டது. முட்டையில் இருந்து வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் விழுவதற்கு பதிலாக 5 அங்குல நீளமுள்ள குட்டி பாம்பு ஒன்று விழுந்ததுதான் அவருடைய அதிர்ச்சிக்கு காரணம்.

பாம்புக்குட்டியைப் பார்த்து வெலவெலத்துப்போன அவர் உடனே ஓடிச்சென்று நண்பர் பகதூர்ராமிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினார். முதலில் இதை நம்ப மறுத்த பகதூர் அந்த குறிப்பிட்ட கோழி போட்ட வேறு ஒரு முட்டையை உடைத்து பார்த்தார். அந்த முட்டையிலும் சுமார் 2-முதல் 3- அங்குள நீளமுள்ள பாம்பு குட்டி இருந்தது.

இந்த தகவல் காட்டுத்தீ போல கிராமம் முழுவதும் பரவியது. அடுத்த அரை அணி நேரத்தில் கிராமமே பகதூர் வீட்டு முன்பு திரண்டது. அதிசய கோழியையும் அது போட்ட பாம்பு முட்டைகளையும் அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச்சென்றனர். இது எப்படி சாத்தியம் என்று தங்களுக்குள் விவாதித்துக்கொண்டனர்.

இதற்கிடையே கால்நடை ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை டாக்டர் அஜய்குமார் தனது குழுவுடன் விரைந்து வந்து அந்த கோழியையும் அது போட்ட மற்ற முட்டைகளையும் பாம்புக்குட்டியையும் ஆய்வுக்காக எடுத்துச்சென்றார்.

அவர் கூறும்போது, "என்னால் இதை நம்பவே முடியவில்லை, அதிசயமாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.கோழி முட்டைக்குள் பாம்புக்குட்டி இருந்ததைத்தொடர்ந்து அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடைகளில் யாருமே முட்டை வாங்க வில்லை. இதனால் முட்டை விற்பனை முற்றிலும் நின்று விட்டதாக கடைக்காரர்கள் கூறினார்கள்.

இரு கோள்கள் மோதியதற்கு நட்சத்திர தூசுகள் சான்று

அண்டவெளியில் பொது ஈர்ப்பு மையத்தைக் கொண்ட இரட்டை நட்சத்திர முறைமையொன்றை சுற்றி பாரிய தூசுப் படலங்கள் வலம் வருவது அவதானிக்கப் பட்டதாகவும். அவை பூமியையொத்த இரு கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட மிக மோசமான சிதைவால் உருவாகியவையாக இருக்கலாம் என தாம் கருதுவதாகவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியும் வெள்ளிக் கிரகமும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவடையும் பட்சத்தில் உருவாகும் பாரிய தூசுப் படலத்தை ஒத்ததாக இது உள்ளதென மேற்படி ஆய்வில் பங்கேற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பென்ஜமின் சுக்கெர்மன் தெரிவித்தார்.

மேற்படி நட்சத்திர தூசுக்களானது, பூமியிலிருந்து 20,307,300 ஒளியாண்டுகளுக்கு அதிகமான தூரத்தில் மேஷ நட்சத்திரத் தொகுதியிலுள்ள நட்சத்திரத்தை சுற்றியே இந்த தூசு காணப்படுவது கண்டறியப்பட்டதாக மேற்படி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு ஒளியாண்டானது ஒரு வருடத்தில் ஒளி பயணிக்கும் தூரமான 6 திரில்லியன் மைல்களுக்கு சமமாகும்

65 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பவளப் பாறை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலியாவில் 65 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பவளப் பாறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள பிளின்டர்ஸ் மலைத் தொடரில் இந்தப் பாறை அமைந்துள்ளது. இதை மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த அரிதான பவளப் பாறை நீண்ட ஆண்டுகள் கடலுக்கு அடியில் இருந்துள்ளது. கடந்த காலங்களில் பூமியில் ஏற்பட்ட பல்வேறு பருவமாற்றங்களையும் இது சந்தித்துள்ளது.

இதனால், இதன் மூலம் கடந்த காலங்களில் பூமியில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றங்கள் குறித்தும் பவளப்பாறைகளின் பரிணாம வளர்ச்சி குறித்தும் அறிய இயலுமென அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதி காலத்தில் வாழ்ந்த விலங்குகளின் வாழ்க்கை குறித்தும் இந்த பாறை மூலம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று அவுஸ்திரேலிய புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பொருளாதார நிலநடுக்கம் !!!

எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத சந்தைப் பொருளாதாரம் சந்திக்க நேரும் விபத்து அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்சி னையை எப்படி எதிர்கொள்வது என்று அந்த நாட்டின் பொருளாதார நிபுணர்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா மட்டுமல்ல, உலக சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, சுமார் 700 பில்லியன் டொலர்களை (அடேயப்பா, 70,000 கோடி டொலர்கள்) திவாலாக இருக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வாரி வழங்கி, தனது ஒட்டுமொத்தப் பொருளாதாரமே தகர்ந்து விடாமல் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அமெரிக்காவின் நிதிநிலைமை ஆட்டம் காணும் அளவுக்கு அப்படி என்ன பொருளாதார நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டது? எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத சந்தைப் பொருளாதாரம் சந்திக்க நேரும் விபத்தைத்தான் இப்போது அமெரிக்காவும் சந்தித்துள்ளது. உலகிற்கெல்லாம் பொரு ளாதார நடவடிக்கையில் அரசின் தலையீடு கிஞ்சித்தும் கூடாது என்று உபதேசம் செய்தவர்கள் இப்போது அரசின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

1990இன் பிற்பகுதியில், அமெரிக்காவில் அனைவருக்கும் குடியிருக்க வீடு வேண்டும் என்கிற முனைப்புடன் அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவில் குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடனை வாரி வழங்கத் தொடங்கின. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் நிறுவனங்களின் வளர்ச்சிதான் இப்படியொரு திட்டத்தின் பின்னணியாக இருந்தது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்போது, இந்தியாவில் யார், இன்னார் என்று கேள்வி இல்லாமல் வங்கிகள் கடன் அட்டைகளையும், வாகனக் கடன்களையும் கொடுப்பதுபோல, அமெரிக்காவிலும் தராதரம் பார்க்காமல் எல்லோருக்கும் வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகள் இறங்கின. என்ன வேலை, என்ன சம்பளம், என்ன பின்னணி என்பதைக் கருத்தில்கொள்ளாமல் வாங்க இருக்கும் வீடுகளையே அடமானமாக ஏற்றுக்கொண்டு அதிகரித்த வட்டிக்குக் கடன்கள் தரப்பட்டன.

கேட்டதும் கடன் கிடைக்கிறது எனும் போது வீடு வாங்கும் ஆசை அனைவருக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ரியல் எஸ்டேட் தொழிதச் செயற்கையான வளர்ச்சியை எத்தனை காலம் தக்க வைக்க முடியும்? ஒரு கட்டத்தில் தேவையும் குறைந்து விலையும் சரியத் தொடங்கியது. வேறு காரணங்களால் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிறு பின்னடைவு, அதிகரித்த வேலை இழப்புக்கு வழிகோலியது. பலருடைய வீட்டுக்கடன்களின் தவணைகள் அடைக்கப்படாத நிலைமை ஏற்பட்டது. அந்தக் குடியிருப்புகளை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தினவே தவிர, அவைகளை விற்றுப் பணமாக்க முடியவில்லை. அவற்றை வாங்க ஆள் இல்லை.

வங்கிகள் தாங்கள் விநியோகம் செய்திருந்த கடன்களையும், அதற்காக அடமானமாகப் பெற்றிருந்த வீடுகளின் பத்திரங்களையும் காட்டி பெரிய நிதிநிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்றிருந்தன. தவணைப் பணம் தடைப்பட்டு, அடமானமாகப் பெற்ற வீடுகளையும் விற்க முடியாத நிலையில் வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆட்டம் காணத் தொடங்கின. விளைவு? இந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்காக முதலீடு செய்திருந்த நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின.

இதன் தொடர்விளைவாக இந்த நிதி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்த பொதுமக்கள், தங்களது முதலீடு மதிப்பிழந்ததால் நஷ்டமடைந்தனர். இது அமெரிக்கா முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. பங்குச்சந்தை சார்ந்த பொருளாதாரத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இது என்பதற்கு அமெரிக்கா இப்போது சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓர் எடுத்துக்காட்டு.

உலகமெல்லாம் பெயரும் பெருமையும் பேசிய பியர் ஸ்டேர்ன்ஸ், லெஹ்மான் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி. நிறுவனங்களில் தொடங்கி சிறிய மற்றும் அமெரிக்காவில் மட்டுமே செயல்படும் பல நிதி நிறுவனங்களும் வாராக்கடனாக மாறிய வீட்டுக் கடன்களால் பாதிக்கப்பட்டு திவாலாகும் நிலைமை. அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்பட்டு விடாமல் தடுக்க, அமெரிக்க மத்திய வங்கி முதலில் வட்டிவிகிதத்தைக் குறைத் தது.

பிரச்சினை தீர்ந்தது என்று கருதும் வேளையில் ஒன்றன்பின் ஒன்றாக நிதி நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கியதும், அரசு அந்த நிறுவனங்களின் உதவிக்கு ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிதி நிறுவனங்களில் கண்ணை மூடிக்கொண்டு கடன் வழங்கும் நமது ஐசிஐசிஐ போன்ற வங்கிகள், தாங்கள் உலகப் பொருளாதாரத்தில் ஒன்றியவர்கள் என்று காட்டிக்கொள்ள முதலீடு செய்துவிட்டு இப்போது முழிக்கின்றன. உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இப்போது அமெரிக்கா சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அதனால் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் தொடர் விளைவுகளும் உதாரணங்கள்.

இந்தியாவிலும் கடன்களை வாரி வழங்கி பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்திக் காட்டும் முயற்சி நடக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அமெரிக்காவின் அவலத்திருந்து நம்மவர்கள் பாடம் படித்தால் நல்லது!

2010 உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட சின்னம் ஜொகனஸ்பேர்க்கில் வெளியீடு

2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்துக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி வரிசையில் 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை தென்னாபிரிக்கா நடத்துகிறது.

இந்தப் போட்டி நடைபெற இன்னும் 21 மாதங்கள் உள்ள நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஜொகனஸ்பேர்க் நகரில் நேற்று முன்தினம் உலகக் கிண்ணத்துக்கான சின்னத்தை அறிமுகம் செய்தது.

பச்சை தலைமுடியை கொண்ட சிறுத்தைப் புலி உலகக் கிண்ணச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஜக்குமி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விண்கலம் பூமியில் விழுகிறது

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு தேவையானவற்றை கொண்டு சென்ற ஐரோப்பிய விண்கலமான ஜுலியஸ் வெர்னோ எதிர்வரும் 29 ஆம் திகதி பூமியில் விழுகிறது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விண்வெளிசென்ற 22 தொன் நிறையுடைய இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழையும் போது நெருப்புக் கோளமாக மாறி பசுபிக் பெருங்கடல் பகுதியில் விழும். இவ்வாறு விழுவதன் மூலம் எந்தவித கெடுதலும் ஏற்படாதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாராலிம்பிக் கோலாகலமாக நிறைவு 211 பதக்கங்களுடன் சீனா முதலிடம்

பெய்ஜிங்கில் நடைபெற்றுவந்த 13 ஆவது ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டி புதன் கிழமை நிறைவு பெற்றது. சீனத் தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் திருவிழா கடந்த மாதம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அங்கேயே கடந்த 6 ஆம் திகதி ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. இதில் 148 நாடுகளைச் சேர்ந்த 4200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

உடல் குறைபாட்டை ஒரு குறையாகக் கருதாமல், வீரர்கள் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி காண்போரை பிரமிக்க வைத்தனர். 12 நாட்கள் நடந்த இந்த போட்டி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. பீஜிங் பறவைக்கூடு வடிவிலான தேசிய மைதானத்தில் கண்ணைக் கவரும் கலை நிகழ்ச்சிகள், மயிர் கூச்செறியும் நடனங்கள், வாணவேடிக்கைகளுடன் விழா நிறைவு பெற்றது.

இந்தப் போட்டியில் மொத்தம் 76 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம் பெற்றன. முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சீனா 89 தங்கம் உட்பட மொத்தம் 211 பதக்கங்கள் குவித்து முதலிடத்தை பிடித்தது. பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள் விபரம் வருமாறு;

நாடுதங்கம், வெள்ளி, வெண்கலம்,மொத்தம்

சீனா89,70,52,211 இங்கிலாந்து42,29,31,102 அமெரிக்கா36,35,28,99 உக்ரைன்24,18,32,74 அவுஸ்திரேலியா 23,29,27,79 தென்னாபிரிக்கா21,3,6,30 கனடா19,10,21,50 ரஷ்யா18,23,22,63 பிரேசில்16,14,17,47 ஸ்பெயின்15,21,22,58

கணனி பாவனையாளர்களுக்கு இன்றியமையாத எச்சரிக்கைகள்

இமெயில் என்பது ரேஷன் கார்டு போல தேவைப்படும் ஓர் வசதியாக உள்ளது. யாரும் இப்போது தபால் அலுவலகத்தை நாடுவதே இல்லை. அவசரத்திற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இமெயில் அக்கவுண்ட் கட்டாயம் நமக்குத் தேவயாய் உள்ளது. ஆனால் இதில் பலரும் தவறு இழைக்கின்றனர். திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகளை இங்கு காண்போம்.

1. முதலாவதாக ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு இன்றைய இணையச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வர்த்தக ரீதியான இமெயில் தரும் நிறுவனத்தின் இமெயில் அக்கவுண்ட்டை பணம் செலுத்திப் பெற்றுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இதனை உங்கள் வர்த்தகத்திற்குப்பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். உங்கள் அக்கவுண்ட் உள்ள சர்வர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் உங்களுக்கான இமெயில் சேவை கிடைக்காது.

ஆனால் உங்களின் இமெயில் தெரிந்தவர்கள் அதற்கு மட்டுமே மெயிலை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு நிறுவன சர்வர்கள் மூலம் வைத்திருந்தால் அவை உங்களுக்கு இது போன்ற சிக்கலான நேரத்தில் உதவும் அல்லவா? பொதுவாக வர்த்தக பயன்பாட்டிற்கு ஒன்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான பரிமாற்றத்திற்கென ஒன்றும் மற்ற இல்ணைய தேடல்களுக்கு ஒன்றுமாக வைத்துக் கொள்வது நல்லது.

2. நீங்கள் வெகு நாட்களாக ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக அதனையே வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் வெகுநாட்கள் பயன்படுத்திய இமெயில் அக்கவுண்ட்கள் ஸ்பாம் மெயில் அனுப்புபவர்கள் வசம் நிச்சயம் சிக்கியிருக்கும். எனவே சில ஆண்டுகள் சென்ற பின்னர் அதனை விடுத்து புதிய அக்கவுண்ட் திறப்பது தான் நல்லது.

3. இமெயில் பயன்பாட்டிலும் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் இல்லம் இல்லாமல் வெளியே உங்கள் அலுவலகத்திலோ அல்லது இன்டர்நெட் மையங்களிலோ உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துபவராக இருந்தால் பயன்பாட்டிற்குப் பின் இமெயில் அக்கவுண்ட் தரும் சர்வரில் அக்கவுண்ட்டை முறையாக மூடிவிட வேண்டும். இல்லையேல் அடுத்து அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் இமெயிலைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மூடுவது மட்டுமின்றி அந்தக் கம்ப்யூட்டரின் கேஷ் மெமரியைக் காலி செய்துவிடுவதும் நல்லது.

அத்துடன் ஹிஸ்டரி, பாஸ்வேர்ட் இவை எதுவும் இருந்தால் அவற்றையும் கிளியர் செய்திட வேண்டும். கேஷ் மெமரியை எப்படி கிளியர் செய்வது என்று கேட்கலாம்? இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Optionsசென்று அங்கு இருக்கும் Clear History,” “Delete Cookies” and “Delete Files”என்ற மூன்று பட்டன்களிலும் கிளிக் செய்து ஓகே கொடுங்கள். பயர் பாக்ஸ் தொகுப்பு பயன்படுத்துபவர்கள் Ctrl + Shift + Del என்ற மூன்று கீகளையும் ஒரு முறை அழுத்தினால் போதும்.

4. எப்போதும் உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரில் உங்கள் இமெயில் செக் செய்திட வேண்டாம். இது முறையற்றது மட்டுமின்றி உங்களின் ரகசிய தகவல்கள் மற்றவருக்கு தெரிந்து போகும் வாய்ப்புகள் உண்டு. அத்துடன் தெரிந்து போனால் வேலை போய்விடும் அல்லவா?

5. எல்லாவற்றிற்கும் இமெயில் என அலைய வேண்டாம். ஏனென்றால் இமெயில் என்பது உங்கள் நடவடிக்கைகளைப் பதிவு செய்திடும் ஓர் சாதனமாகும். பின்னர் நான் இதனை அனுப்பவே இல்லை என்று சாதிக்க முடியாது. எனவே ரகசிய தகவல் பரிமாற்றங்களுக்கு தொலைபேசியையே பயன்படுத்தவும்.

6. தேவையற்ற போது மற்றவர்களின் இமெயில் முகவரியை அடுத்தவர் அறியும் வகையில் அனுப்ப வேண்டாம். பலர் தேவையின்றி தங்களின் பிரதாபங்களை வெளிப்படுத்த தாங்கள் எழுதும் இமெயில் கடிதங்களை மற்றவருக்கும் காப்பி(CC மூலம்) அனுப்புவார்கள். இதனால் அந்த இன்னொரு நபரின் இமெயில் முகவரி மற்றவருக்கும் தெரிகிறது. இது தேவயற்ற வகையில் அனைவருக்கும் தெரியநேர்கையில் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அப்படி உங்கள் கடிதத்தை மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும் என்றால் BCC பயன்படுத்துங்கள்.

7. உங்களுக்கு வந்த இமெயில் கடிதங்களுக்குப் பதில் அளிக்க விரும்புகையில் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் Reply / Reply All என இரண்டு வசதிகள் உண்டு. இதில் எதனைப் பயன்படுத்துவது எனச் சிலருக்கு சந்தேகம் உண்டு. ரிப்ளை ஆல் பட்டனை அழுத்தினால் அந்த கடிதத்தில் உள்ள அனைத்து இமெயில் முகவரிகளுக்கும் பதில் போய்ச் சேரும். மெயில் அனுப்பிய வருக்கு மட்டுமே பதில் அனுப்ப வேண்டும் எனில் ரிப்ளை பட்டனை அழுத்தி பதில் கடிதம் எழுதி அனுப்பவும்.

8. ஒரு சிலர் தங்களுக்கு வந்த கடிதங்களை அவை மற்றவர்களுக்குப் பயன்படுமா என்று சரியாக முடிவு செய்திடாமல் தேவையற்ற வகையில் மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்வார்கள். இந்தப் போக்கு தேவையற்ற ஒன்று. இதில் பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களே அதிகம் பார்வேர்ட் செய்யப்படும். இவ்வாறு தேவையற்ற பார்வேர்டிங் செய்வது கூடாது. இந்தப் பழக்கமும் உங்கள் நண்பர்களுடைய இமெயில் முகவரிகளை மற்றவர்களிடம் அவசியம் இன்றி கொண்டு சேர்க்கும்.

9. இமெயில்களை, குறிப்பாக முக்கிய இமெயில்களை பேக்கப் செய்து வைத்துக் கொள்வது நல்லது. இவையும் சில டாகுமெண்ட்களைப் போல முக்கியமானவையே.

10. குறுக்கு வழியில் பணம் கிடைக்கும் என்று வருகிற இமெயில்களை நம்புவதும், இந்த இமெயில்களை 45 பேருக்கு அனுப்புவதால் உங்களுக்குப் புண்ணியம் வந்து சேரும் என்று கூறும் இமெயில்களை உடனே அழித்துவிடுவதுதான் நல்லது. எதற்கும் பதில் அனுப்பித்தான் பார்ப்போமே என்று அனுப்பினால் அவ்வளவுதான் தொலைந்தீர்கள். உங்களுடைய கடைசி பைசா வரை அவர்களின் பைசாவாகிவிடும்.

11. தேவையற்ற மின் இதழ்களுக்கு சப்ஸ்கிரைப் செய்திட வேண்டாம். ஒரு சில நிறுவனங்கள் உங்கள் விருப்பங்கள், நாடு, மொழி என்று கண்டறிந்து உங்கள் இமெயில் முகவரியை மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள். எனவே தேவை என்று உணரும் இதழ்களுக்கு மட்டுமே சப்ஸ்கிரைப் செய்திடவும். அவற்றிற்கும் கூடுமானவரை இலவச இமெயில் முகவரிகளைக் கொடுங்கள். பதிவு செய்கையில் உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களைத் தூண்டி தூண்டி கேட்கும் தளங்களைச் சந்தேகப்பட்டால் கற்பனையான தகவல்களைத் தரவும்.

12. பல வேளைகளில் உங்கள் நண்பரின் இமெயிலிலிருந்து சில பிஷ்ஷிங் இமெயில்கள் வரும். நண்பர் தானே என்று திறந்து அந்த செய்தியில் கூறியபடி செய்திட வேண்டாம். சில வைரஸ்கள் இது போல உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு அட்ரஸ் புக்கில் முகவரிகளைத் திருடி உங்கள் நண்பரின் இமெயில் முகவரியிலிருந்து வருவது போலவே பிஷ்ஷிங் மெயில்களை அனுப்பும்.

13. மிக அதிகமாகக் கவனம் எடுக்க வேண்டியது இமெயில் அட்டாச்மெண்ட்கள்தான். முறையாக ஸ்கேன் செய்திடமால் எந்த அட்டாச்டு பைல்களையும் திறக்க வேண்டாம்.

14. கூடுமானவரை மற்றவர்களின் கம்ப்யூட்டர்கள் வழியாக இமெயில் செக் செய்வதனைத் தவிர்த்திடுங்கள். ஏனென்றால் அந்தக் கம்ப்யூட்டர் பாதுகாப்பானதா என்று தெரியாது. அதில் உள்ள பிஷ்ஷிங் புரோகிராம் வழியாக உங்கள் இமெயில் முகவரியும் மாட்டிக் கொள்ளும் வேளையும் உண்டு.

15. இமெயிலுக்கான பாஸ்வேர்ட் களை அடுத்தவர் அறிந்து கொள்ளாதவண்ணம் அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிறந்த நாள், உங்கள் பட்டப் பெயர், குழந்தைகளின் பெயர்கள், அவர்களின் பிறந்த நாள்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

கம்பியூட்டரை ரீ ஸ்டார்ட் செய்யும் டைம்ஸ், ஷட் டவுண் செய்வது அவசியமா?

கம்ப்யூட்டரை எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை ஷட் டவுண் செய்து பின் ரீ ஸ்டார்ட் செய்திட வேண்டும்? இது போல பல கேள்விகளை நமக்கு பட்டியலிட்டு வாசகி திருமதி வேணி ராஜகோபால் குற்றாலத்திலிருந்து எழுதி உள்ளார். மேலே குறிப்பிட்ட கேள்வி குறித்து இதுவரை எழுதாததால் உடனே குறிப்புகளைச் சேகரித்து இங்கு தருகிறேன்.கட்டாயம் நாம் கம்ப்யூட்டரை நிறுத்தி சும்மா வைத்திருக்க வேண்டுமா? கம்ப்யூட்டர்கள் கட்டாயம் ரெஸ்ட் எடுக்க வேண்டுமா? இப்படி ஒரு கட்டாயம் எந்த கம்ப்யூட்டருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

குறைந்த பட்ச இயக்க நிலை அல்லது அதிக பட்ச இயக்க நிலை என்று எதுவும் இல்லை. ஆனால் சில வேளைகளில் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டமே கம்ப்யூட்டரை இப்போது ரீ ஸ்டார்ட் செய்திடுக, என்று நமக்கு செய்தி கொடுக்கும். இந்த செய்தி பெரும்பாலும் ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பை இன்ஸ்டால் செய்தவுடன், அதன் செயல்பாடுகளை இயக்க கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டிய சூழ்நிலையில், இந்த செய்தி காட்டப்படும். இருந்தாலும் பின் ஒரு நேரத்தில் ஸ்டார்ட் செய்திட வேண்டும் என்றாலும் செய்திடலாம் என்று சலுகையும் தரப் படும். அந்த சலுகையையும் மேற்கொள்ளலாம்.

கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்படுகையில் நாம் கட்டாயமாக ரீஸ்டார்ட் செய்தே ஆக வேண்டும். ஏனென்றால் பிரச்னையின் சூழ்நிலை காரணமாக கம்ப்யூட்டரின் செயல்திறன் முடங்கிப்போயிருக்கும். இங்கு ரீ ஸ்டார்ட் செய்வதால் எந்த பிரச்னையினால் கம்ப்யூட்டர் முடங்கிப் போய் விட்டது என்று அறிய வாய்ப்பு கிடைக்கும். பிரச்னைகள் இருந்தால் தானாக சரியாகும் வாய்ப்பும் உண்டு.

தேனீக்கள் கொட்டியதில் 3 பேர் பலி

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் தேன்கூடு களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டி ருந்தது. அப்போது திடீர் என்று அந்த லாரி கவிழ்ந்தது. தேன்கூடுகளில் இருந்து லட்சக்கணக்கான தேனீக்கள் அந்த பகுதி முழுவதும் வட்டமடித்து பறந்தன.

ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்களை தேனீக்கள் கொட்டின. இதில் 3 பேர் பலியாகி விட்டனர். விசேஷஉடை அணிந்த ஊழியர்கள் தேனீக்களை ஒரு வழியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறட்டை விடும் குழந்தைக்கு ஆபத்து

குழந்தைகளின் தூக்கம் குறித்து பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினர். தூக்கத்தில் குறட்டை விடும் குழந்தைகள் மற்றும் குறட்டை விடாத குழந்தைகளிடம் நடந்த இந்த ஆராய்ச்சியில் இக்குழந்தைகளின் கவனிக்கும் திறன், மூளை செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் குறட்டை காரணமாக நிம்மதியற்ற தூக்கமுடைய குழந்தைகளின் கற்றல் திறன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.இரவு நேரங்களில் குறட்டை விடும் குழந்தைகள் மூச்சு விடுவதில் ஏற்படும் இந்த சிரமத்தால் அவர் களுடைய மூளைத்திறன் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

குறட்டை விடும் பிரச்சினையை நீக்க நாக்கின் அடிப்பகுதியில் உள்ள சதையை நீக்கும் அறுவை சிகிச்சை செய்த பிறகு அக்குழந்தைகளின் கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டது இந்த ஆராய்ச் சியின் முடிவில் தெரிய வந்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பாராலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் பிரேஸில் வீரர் புதிய உலக சாதனை

பீஜிங் பாராலிம்பிக்கில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் 100 மீற்றர் ஓட்டத்தில் பிரேஸில் வீரர் லுகாஷ் ராடோ புதிய உலக சாதனை படைத்தார். சீனத் தலைநகர் பீஜிங்கில் ஊனமுற்றோருக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 100 மீற்றர் டி 11 பிரிவில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. இதில் பிரேஸிலின் லுகாஷ் ராடோ 11.03 விநாடி நேரத்தில் ஓடி தங்கம் வென்றார். இரண்டாவதாக வந்த அங்கோலாவின் ஜோஸ் அர்மன்டோ வெள்ளிப் பதக்கம் வென்றார். வெண்கல பதக்கம் பிரான்ஸ் வீரருக்கு கிடைத்தது.

டி36, டி44 பிரிவு 100 மீ, போட்டிகளில் உக்ரைன் மற்றும் தென் ஆபிரிக்க வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

பெண்களுக்கான 100 மீற்றர் டி11 பிரிவில் உக்ரைனின் ஆக்ஷனா போத்துர்சக் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலத்தை பிரிட்டன், ஸ்பெயின் வீராங்கனைகள் பெற்றனர். நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் பிரிஸ்டைல் பிரிவில் பிரேசில் வீரர் அன்ட்ரூ பிராஸில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். ஆண்களுக்கான 100 மீற்றர் பட்ட பிளை பிரிவில் புதிய உலக சாதனை படைத்து ஸ்பெயின் வீரர் எங்ஹமது தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

வில்வித்தை போட்டிகளில் தகுதி சுற்றுகளில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் 4 பழைய சாதனைகள் தகர்த்தப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. முதலாவதாக ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தை பிரிவில் பிரிட்டனின் ஜான் ஸ்டப்ஸ் 691 புள்ளிகள் எடுத்து உலக சாதனை படைத்தார். இந்தப் பிரிவில் இதற்கு முன் 679 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

பெண்கள் பிரிவில் பிரிட்டனின் டேனியலி பிரவுண் 676 புள்ளிகள் எடுத்து புதிய பாராலிம்பிக் சாதனை படைத்தார். கொரிய வீராங்கனை லீ வா சுக் அதிக புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். இதே பிரிவில் சீனாவின் ஜியோ ஹாங்காங் பாராலிம்பிக் சாதனை படைத்தார்.

சாம்ப்ராஸின் சாதனையை முறியடிப்பதற்கு பெடரருக்கு ஒரு வெற்றிக் கிண்ணம் தேவை

டெனிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள அமெரிக்காவின் பீற் சாம்ப்ராஸின் சாதனையை (14 பட்டம்) பெடரர் நெருங்குகிறார். தற்போது 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள இவர், இன்னும் ஒரு பட்டம் வென்றால் மகத்தான சாதனையை எட்டலாம்.

பெடரர் தொடர்ந்து 5 முறை விம்பிள்டன் (2003, 2004, 2005, 2006, 2007) ஓப்பன் பட்டங்களை (2004, 2005, 2006, 2007, 2008) வென்றுள்ளார். மூன்று முறை அவுஸ்திரேலியன் ஓப்பனில் கிண்ணத்தை (2004, 2006, 2007) கைப்பற்றியுள்ளார்.

விம்பிள்டன், அமெரிக்கன் ஓப்பன் என இரண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 5முறை சாம்பியன் பட்டம் வென்ற உலகின் முதலாவது வீரர் என்ற பெருமை பெறுகிறார் பெடரர் 1924 இல் அமெரிக்காவின் பில் டில்டனுக்கு பின் ஓப்பனில் தொடர்ந்து 5 முறை பட்டம் வென்றுள்ளார்.

இதேவேளை, ஏ.டி.பி. தரவரிசை பட்டியலில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 7000 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அமெரிக்க ஓப்பனில் பட்டம் வென்ற பெடரர் இரண்டாவது இடத்தில் (5930 புள்ளிகள்) நீடிக்கிறார். மூன்றாவது இடத்தில் செர்பியாவின் நோவோ டோகோவிச் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்கன் ஓப்பனில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிய ஆன்டி முர்ரேவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது குறித்து ரோஜர் பெடரர் கூறியதாவது;

இந்த ஆட்டத்தில் சிறப்பாக "சேர்வீஸ்' செய்தேன். இதனால் முர்ரேக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தது. முதல் செட்டை நம்பிக்கையோடு எதிர்கொண்டு சுலபமாக கைப்பற்றினேன். இரண்டாவது செட்டில் முர்ரேசேர்வீசை "பிரேக்' செய்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக இருந்தது. தொடர்ந்து இரண்டு செட்களை பறிகொடுத்த முர்ரே மூன்றாவது செட்டில் தாக்குப்பிடிக்க தடுமாறினார். அமெரிக்கன் ஒப்பன் பட்டம் வென்றது, உலகமே என் கையில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது. என்னால் நம்ப முடியவில்லை.

இது வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருக்கும். வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்புவது மகிழ்ச்சியாகவும் மனநிறைவு தருவதாகவும் உள்ளது. விம்பிள்டன், பிரெஞ் ஓப்பன் தொடர்களில் தோல்வியைத் தழுவியது மனக் கசப்பை உண்டாக்கியது. இருப்பினும் இந்த ஆண்டு இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றது, டெனிஸ் வாழ்க்கையில் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. 13 ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் என்னுடைய வெற்றிநடை முடியவில்லை. இது கம்பீரமாகத் தொடருமென்றும் கூறினார்.

"ஸ்ரெய்ன்ஸ்' விண்கல்லை கடந்து சென்ற "ரொஸேதா' விண்கலம்

ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தின் ஆட்களற்ற பூ€˜ரொஸேதாபூ€ஙு விண் பரிசோதனை கூடமானது ஸ்ரெய்ன்ஸ் விண்கல்லை 800 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து அந்த விண்கல் தொடர்பான தகவல்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

வியாழக் கிரகத்துக்கு அப்பாலுள்ள நீள் வட்டப் பாதையை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் அணுகுவதை இலக்காகக் கொண்டு 2004 மார்ச் மாதம் 2 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்பட்ட ரொஸேதா விண்கலமானது, கடந்த வெள்ளிக்கிழமை பூமியிலிருந்து 360 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விண்கலம் 5 கிலோ மீற்றர் அகலமான ஸ்ரெய்ன்ஸ்விண்கல்லை படம் பிடித்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. 600 மில்லியன் ஸ்ரேலிங் பவுன் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், 2010 ஆம் ஆண்டு ஜுன் 10 ஆம் திகதி லுதெஷியா விண்பாறைக்கு 3000 கிலோமீற்றர் தொலைவில் பயணிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது

நடால் அதிர்ச்சித் தோல்வி இறுதியாட்டத்தில் ஆன்டி முர்ரே

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இவருடன் மோதிய ரபேல் நடால் தோல்வியடைந்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடாலை இவர் 62, 76, 46, 64 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த அரையிறுதிப் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு நேற்று முன்தினம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற ஆன்டி முர்ரே நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 13 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கு குறி வைத்துள்ள முன்னணி வீரர் ரோஜர் பெடரருடன் மோதினார்.

அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு தகுதி பெற்றிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் ஓப்பன், பிரெஞ் ஓப்பன் மற்றும் ஒலிம்பிக் பட்டங்களை வென்ற நடாலை வீழ்த்தியது பெருமிதமளிப்பதாகவும் முர்ரே தெரிவித்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள 3 ஆவது பிரிட்டன் வீரர் முர்ரே என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வீரரான பெடரருடன் இறுதிச் சுற்றில் மோதுவது தமக்கு கிடைத்த கௌரவம் என்றும் முர்ரே கூறியுள்ளார்.

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் இறுதியாட்டத்தில் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினார் செரீனா

நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்கன் ஓப்பன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் மகளிர் டெனிஸ் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம் பெற்றுள்ளார்.

நியூயோர்க்கில் அமெரிக்கன் ஓப்பன் டெனிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும் செர்பியாவின் ஜெலினா ஜங்கோவிக்கும் மோதிக் கொண்டனர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜங்கோவிக்கை 64, 75 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை மூன்றாவது முறையாக செரீனா வில்லியம்ஸ் வென்றுள்ளார்.

இந்தப் போட்டியில் ஜங்கோவிக்குடன் கடுமையான மோதலை செரீனா வில்லியம்ஸ் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டியின் முதல் செட்டில் செரீனா ஆக்ரோஷமாக விளையாடி 4 நேரடி வெற்றிகளைப் பெற்று 52 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். பின்னர் ஜங்கோவிக் அதிரடியாக விளையாடி செரீனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதிலும், சமாளித்து ஆடிய செரீனா இறுதியில் ஜங்கோவிக்கை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.

டெனிஸ் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜெலினா ஜங்கோவிக் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று செரீனாவுடன் மோதினார். ஆனால் செரீனாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தில் அவர் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். 2002 ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவின் ஓப்பன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக இந்தப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் மகளிர் டெனிஸ் தர வரிசையில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் புதிய படமான எந்திரனில் ஹாலிவுட் நிபுணர்கள்

ரஜினி நடிக்கும் ரோபோ படத்தின் பெயர் எந்திரன் என மாற்றப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புக்காக ரஜினியும் ஐஸ்வர்யாராயும் அமெரிக்கா சென்றுள்ளனர். இரண்டு பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்படுகிறது.

ஐங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் ஈரான் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பான இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஆர்.ரத்னவேலு , கலை சாபுசிரில் பாடல்கள் வைரமுத்து, பா.விஜய், படத்தொகுப்பு அன்டனி, நடனம் ராஜவுசுந்தரம், உடைகள் வடிவமைப்பு மனிஷ்மல்கோத்ரா.

ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர். மென்இன் பிளாக் பேட்மேன்ரிட்டர்ன்ஸ்,போன்ற படங்களின் ஆடை வடிவமைப்பாளர் மேரிஇவோக்ட் இந்த படத்தின் விஞ்ஞான ரீதியாக உடைகளை வடிவமைக்கிறார்.

பிரிடேட்டர் ஜவுராசிக் பார்க், பியர்ல் ஹார்பர், அயன்மேன், டெர்மினேட்டர் போன்ற படங்களில் பணியாற்றிய ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோ இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இந்தியப் படம் ஒன்றிற்கு அனிமேட்ரானிக்ஸ் செய்கிறது.

ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யூவான் வூ பிங், எந்திரன் படத்துக்கான சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். ஐ.எல்.எம், திப்பத், கேப்இஎப்எக்ஸ், போன்ற ஹாலிவுட் கம்பெனிகளும், சென்ட்ரோ மென்பான்ட் போன்ற ஹாங்காங் கம்பெனிகளும் இந்த படத்தில் விசுவல் எபெக்ட்ஸ் மற்றும் அனிமேட்ரானிக்சில் பணிபுரிய உள்ளன.

2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் 7 அடி வரை உயரலாம்

கனடாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, 4500 ஆண்டுகள் பழைமையான "மார்கம்' பனிப்பறையில் 19 சதுர மைல் பரப்பளவுள்ள பகுதி உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2100க்குள் கடல் நீர் மட்டம் 7 அடி உயரும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

சுற்றுச் சூழல் பாதிப்பு, உலகம் வெப்ப மயமாதல் போன்றவற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றன. ஆனாலும் வெப்ப மயமாதலை தடுக்க முடியவில்லை. சுற்றுச் சூழல் பாதிப்பால் காற்று மண்டலம் வெப்பமாகி பணி மலைகள் உருகத் தொடங்கிவிட்டன.கிரீன்லாந்து, அன்டார்டிக் கடல் பகுதியில் பனி மலைகள் உருகுவதால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் 7 அடி வரை உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடல் நீர் மட்டம் உயருவதால் கடலோர பகுதிகளில் பல்வேறு நாடுகள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேற்படி பனிப்பாறைப் பகுதியானது கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் திடீரென மாயமாகியுள்ளமை தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக கனடாவின் ஒன்டாறியோவிலுள்ள ரென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேசமயம் "வார்ட் ஹன்ட்' பனிப்பாறை தொடர்ந்து உருகி சிதைவடைந்து வருவதாக இவ்விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கனடாவின் இந்த நிலைமை கவலை அளிப்பதாக டென்மார்க் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த மாறுபாடுகளினால் ஆர்டிக் கடல் ஒட்டிய பிரதேசங்களில் பெரிதும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையில் டென்மார்க் மற்றும் அதன் அண்டை நாடுகளும் உதவ முன்வந்துள்ளது. மேலும் 170 சதுர மைல் பரப்பளவு கொண்ட "வார்ட் ஹன்ட்' பனிப்பாறையில், 7 சதுர மைல் பரப்பளவான பகுதி கடந்த மாதம் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி காலிறுதியில் நடால், பிஷ், முர்ரே

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்க வீரர் மார்ட்டி பிஷ், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

இதுவரை அமெரிக்க ஓப்பன் கிராண்ஸ்லாம் டெனிஸ் தொடரில் காலிறுதியைத் தாண்டிச் செல்லாத தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்காவின் சாம் குவெர்ரியை 62, 57, 76, 63 என்ற செட்கணக்கில் போராடி வீழ்த்தி காலிறுத்திக்கு முன்னேறினார்.

2 ஆவது செட் தவிர மற்ற செட்களில் நடாலின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் 41 முறை அவர் தவறுகள் செய்தார். ஆனால் முதல் சேர்வ் வின்னர்களும் குவெர்ரியின் சேர்வை முறியடித்து பெற்ற வின்னர்களும் நடாலின் வெற்றியை உறுதிசெய்தது. மற்றொரு 4 ஆவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் மார்டி பிஷ் 32 ஆம் தரவரிசையில் உள்ள பிரான்ஸ் வீரர் காயெல் மான் பில்ஸ் என்பவரை 75,62,62 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.

6 ஆம் தரவரிசையில் உள்ள பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே 10 ஆம் தரவரிசையில் உள்ள சுவிஸ் வீரர் வார்வின்காவை 61, 63, 63 என்ற நேர்செட்களில் வீழ்த்தி முதன் முறையாக அமெரிக்க ஓப்பன் டெனிஸ் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். மற்ற 4 ஆவது சுற்று ஆட்டத்தில் 17 ஆம் தரவரிசையில் உள்ள ஆர்ஜென்ரீனாவின் இளம் வீரர் மார்டின் டெல் போர்ட்டோ ஜப்பானிய இளம் வீரர் கெய் நிஷிகோரியை 63,64,63 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள்

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் செரீனா, வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் ஒருவரையொருவர் எதிர்கொள்கின்றனர்.
4 ஆவது சுற்றுப்போட்டியில் 4 ஆம் தரவரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ், வைல்@ட் கார்டில் நுழைந்த பிரான்ஸ் வீராங்கனை செவெரின் ப்ரெமான்ட் என்பவரை 62, 62 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் 7 ஆம் தரவரிசையில் உள்ள வீனஸ் வில்லியம்ஸ் 9 ஆம் தரவரிசையில் உள்ள வளரும் போலந்து டெனிஸ் நட்சத்திரமான ராத்வான்ஸ்காவை 61, 63 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்ற 4 ஆவது சுற்று ஆட்டங்களில் 16 ஆம் தரவரிசையில் உள்ள இத்தாலிய வீராங்கனை ப்ளாவியா பென்னெட்டாவிடம் 32 ஆம் தரவரிசையில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை அமேலி மௌரிஸ்மோ 36, 06 என்று அதிர்ச்சித் தோல்வி தழுவினார். ரஷ்ய வீராங்கனை தினாரா ச்ஃபின தரவரிசையில் இல்லாத ஜெர்மனி வீராங்கனை குரோயென் பீல்ட் என்பவரை 75, 60 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

கூகிளின் மற்றுமோர் படைப்பு!

Google Chrome (Internet Explorer) போன்றது)புதிய இணையப் பரிசோதிப்பான்

இங்கே தரவிறக்கம் செய்யலாம்

சாதனைக்கு காத்திருக்கும் பெடரர்

நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஓப்பன் டெனிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நான்கு முறை பட்டம் வென்ற ரோஜர் பெடரர், தனது 30 ஆவது தொடர் வெற்றியை பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற 3 ஆவது சுற்று ஆட்டத்தில் செக். குடியரசின் ராடிக் ஸ்ரீபானிக்குடன் மோதிய பெடரர், 63, 63, 62 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்வரை தரவரிசையில் முதலிடத்திலிருந்து வந்த பெடரர் இதுவரை 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இன்னும் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றால் அவர் பீற் சாம்ப்ராசுக்கு இணையாகத் திகழ்வார். மேலும், தற்போது நடைபெற்றுவரும் போட்டியில் இவர் பட்டம் வென்றால் 5 முறை அமெரிக்க ஓப்பன் டெனிஸ் பட்டத்தை வென்று, 1924 ஆம் ஆண்டு சாதனை செய்த பில் டில்டன் சாதனையை சமன் செய்வார்.

4 ஆவது சுற்றில் பெடரர் ரஷ்யாவின் இகோர் ஆன்ட்ரீவ் அல்லது ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவுடன் மோதுவார்.

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி நடால், வில்லியம்ஸ் சகோதரிகள் வெற்றி

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டியில் நடால், வில்லியம்ஸ் சகோதரிகள் காலிறுதிக்கு முந்தைய 4 ஆவது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடந்து வருகிறது.

அமெரிக்க ஓப்பனை முதல் முறையாக வெல்லும் வேட்கையுடன் உள்ள உலகின் முதல் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால், 71 ஆவது இடம் வகிக்கும் செர்பியாவின் விக்டோர் டிரோக்கியை எதிர்கொண்டார். இதில் வழக்கம் போல் தனது அதிரடியை வெளிப்படுத்திய நடால் 64, 63, 60 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று 4 ஆவது சுற்றுக்குள் நுழைந்தார். அடுத்து அமெரிக்காவின் சாம் கியூரியை எதிர்கொள்கிறார்.

9 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளாக், தனது நண்பர் மார்டி பிஸ்சிடம் 36, 36, 67 (47) என்ற நேர் செட்டில் தோற்றுப் போனார். பிஸ் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். 7 ஆம் நிலை வீரரான அர்ஜென்ரீனாவின் நல்பாண்டியன், 4 ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெர்ரர், 14 ஆம் நிலை வீரர் கார்லோவிச் (குரேஷியா), 16 ஆவது இடம் வகிக்கும் ஜில்ஸ் சிமோன் (பிரான்ஸ்) ஆகியோரும் அதிர்ச்சித் தோல்வியுடன் நடையைக் கட்டினார்கள்.

3 ஆவது சுற்றில் முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 62, 61 என்ற நேர் செட்டில் ஜப்பானின் சுகியாமாவை தோற்கடித்தார். இதற்கு முன்பாக சுகியாமாவுக்கு எதிராக மோதிய 3 மோதலிலும் செரீனா ஒரு செட்டையும் இழந்ததில்லை. அந்தச் சிறப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். செரீனா அடுத்து பிரான்ஸின் சிவரினே பிரிமோடை சந்திக்கிறார்.

செரீனாவின் அக்கா வீனஸ் வில்லியம்ஸ் 62, 61 என்ற நேர் செட்டில் உக்ரைனின் அலோனா போடரென்கோவை வீழ்த்தினார். 4 ஆவது சுற்றில் வீனஸ் போலந்தின் ராத்வன்ஸ்காவை எதிர்கொள்கிறார். இதன் மூலம் வில்லியம்ஸ் சகோதரிகள் காலிறுதியில் சந்திப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

ரஷ்ய முன்னணி நட்சத்திரம் டினரா சபீனா, சுவிற்சர்லாந்தின் இளம் வீராங்கனை டிமியா பாக்சின்ஸ்கியின் சவாலை முறியடித்தார். கடுமையான போராட்டத்திற்குப் பின் 36, 75, 62 என்ற செட் கணக்கில் சபீனா வெற்றி பெற்றார். முன்னாள் நம்பர் வன் வீராங்கனை பிரான்ஸின் அமலி மவுரஸ்மோ 64, 64 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான ஜூலி காயினை விரட்டினார். ஜூலி 2 ஆவது சுற்றில் முதல் நிலை வீராங்கனை செர்பியாவின் இவானோவிச்சை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.