6 விண்வெளி வீரர்களுடன் இன்று புறப்படுகிறது டிஷ்கவரி

சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தில் மேலதிக சூரியத் தகடுகளை இணைப்பதற்காக 6 விண்வெளி வீரர்களுடன் டிஷ்கவரி விண்கலம் இன்று புதன்கிழமை புறப்படுகின்றது.
சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது 3 வீரர்கள் நிரந்தரமாகத் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், 6 வீரர்கள் தங்குவதற்கு ஏற்ப விரிவுபடுத்தும் பணியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு அதிக மின்சாரம் தேவைப்படும். இதற்கான சூரிய மின்சக்தி தகடுகளுடன் கொண்டு டிஷ்கவரி விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து இன்று புதன்கிழமை புறப்படுகிறது.

இதில் 6 வீரர்கள் பயணம் செய்கின்றனர். விண்வெளி ஆய்வுமையத்தில் பழுதடைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்குப் பதில் புதிய சுத்திகரிப்பு இயந்திரத்தையும் டிஷ்கவரி குழுவினர் எடுத்துச் செல்கின்றனர்.

விண்வெளியில் நான்கு முறை நடைப்பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் தாங்கள் எடுத்துச் செல்லும் சூரிய தகடுகளை பொருத்துவர். 14 நாட்கள் பயணத்துக்குப் பின் டிஷ்கவரி குழுவினர் பூமி திரும்புவார்கள்.

தமிழில் ரிலீசாகும் ஹாலிவுட் கதை; ராட்சத மனிதர்கள்

ஒன் மில்லியன் இயர்ஸ் பி.சி. என்ற ஆங்கில படம் தமிழில் ரிலீசாகிறது. கதாநாயகனாக ஹாலிவுட் நடிகர் ஜான் ரிச்சர்ட்ஸன் நடித்துள்ளார். நாயகி ராக்வல்வெல்ச்.

ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பற்றிய கதையே இப்படம். அப்போதைய மனிதன் மற்றும் மிருகங்களின் ராட்சத தோற்றம் படத்தில் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

கொடிய மிருகங்கள் மத்தியில் மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதும் பிரமிப்பாக படமாக்கப்பட்டு உள்ளன. வித்தியாசமான உருவங்களில் உலவும், மிருகங்கள் மாய உலக காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

டாசேப்பி இயக்கியுள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் சண்முக பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

உயிர் உருவான கதை

பூமியில் உயிர் உருவானது எப்படி? என்று மனிதகுலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இத்தகைய தொடக்ககால புதிர்களுக்கு விடைகாணும் ஆசை, மனிதர் அனைவருக்கும் உள்ளது. தொழில் நுட்ப முன்னேற்றம் மிகுந்துள்ள இந்த காலக்கட்டம் உயிரின தோற்றத்தை தெளியவைக்கும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால் எவ்வளவுக்கு தொழில் நுட்ப ரீதியில் முன்னேறுகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக பூமியின் தொடக்காலம் பற்றிய கேள்விகள் ஆழமாகியுள்ளதோடு, அதை ஒட்டிய பல்வேறு திசைகளும் வெளிப்பட்டுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், பூமி தற்போது உள்ள நிலையை அடைவதற்கு முன், என்ன வடிவத்தில் இருந்தது என்பது பற்றிய நிலைப்பாடுகள் பல மாறியுள்ளன.

ரஷ்ய அறிவியலாளரான அலெக்சாண்டர் ஒப்பாரின் 1924-இல் வெளியிட்ட தனது ஆய்வுக்கட்டுரையில், கார்பன் மூலக்கூறுகள் நிறைந்த பூமியின் நீர், வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னல் ஆகியவற்றிலிருந்து உருவான குழம்பிலிருந்து, உலகின் முதல் உயிர் உருக்கள் தோன்றின என்றார். மிகவும் பிரபலமடைந்தத இக்கோட்பாட்டின் சாத்தியக்கூற்றை ஆராய 1953 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெரால்ட் யூரேயின் மாணவரான ஸ்டான்லி மில்லர் ஈடுபட்டார்.

பூமி உருவாவதற்கு முன்னர் இவ்வுலகம் இருந்த நிலைமையை செயற்கையாக உருவாக்கி, அதில் உண்டாகும் மாற்றங்களை ஆராய்வதே அவரது நோக்கம். மூடிய தெர்மா குடுவை போன்ற அமைப்பில் நீரையும் வாயுவையும் அடைத்தார். வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னலுக்கு பதிலாக, அதனுள் மின்சாரத்தை செலுத்தினார். இரண்டு வாரங்களுக்கு பிறகு, அதிலிருந்த நீர் பழுப்பு வண்ணமடைந்து, புரோதத்தை உருவாக்கக்கூடிய அமினோ அமிலம் தெர்மா குடுவையில் படிந்திருந்ததை அவர் கண்டார். தெளிவுப்படுத்தி எடுக்கப்பட்ட கலவையில் உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கு இன்றியமையாத பல மூலக்கூறுகளையும் கண்டுடறிந்தார். மில்லரின் இந்த சோதனை மூலம், தொன்மையான நீர்நிலைகளின் கரிம மூலக்கூறுகளாலான குழம்பிலிருந்து உயிர் உருவானது என்ற கண்டுபிடிப்பு, பூமி கோளில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களினால் உயிர்கள் தோன்றியதற்கான ஆதாரமாக புகழப்பட்டது.

அந்தாட்டிக்கா பனிப்பாறைகளின் கீழே புதையுண்ட நிலையில் பாரிய மலைத்தொடர்

அல்ப்ஸ் மலைத் தொடர் அளவான பாரிய மலைச் சிகரங்கள் அந்தாட்டிக்கா பனிப் பாறைகளின் அடியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புவியீர்ப்பு உணர்கருவிகள்,"ராடர் கருவிகள்"என்பனவற்றைப் பயன்படுத்தி மேற்படி பனிப்பாறையின் கீழுள்ள மலைத் தொடர் தொடர்பான வரைபடத்தை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.

மேற்படி ஆய்வில் பங்கேற்ற பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியல் ஆராய்ச்சியாளரான போஸ்டோ பெர்ராசியோலி இது தொடர்பில்"ரொய்ட்டர்"செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த பேட்டியில்,

"இந்த மலைத் தொடரானது அல்ப்ஸ் மலைத் தொடர் அளவில் இருந்தது மட்டுமல்லாமல்,உயர்ந்த சிகரங்களையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டுள்ளது.இந்த மலை,4-கிலோமீற்றர்(2.5-மைல்)உயரமான பனிப்பாறையின் கீழ் புதையுண்டுள்ளது"என்று கூறினார்.

சந்திரனில் விழுந்து சிதறிய சீன "சேஞ்ச் 1' விண்கலம்

சீனாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலமொன்று சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து சிதறியுள்ளது. "சேஞ்ச்1' என்ற மேற்படி விண்கலமானது சந்திரன் வரைபடத்தை உருவாக்கும் தனது 16 மாதகால செயற்பாடுகளின் முடிவில் செயலிழந்து சந்திரனின் மேற்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விண்கலமானது 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏவப்பட்டது. சீனாவானது சந்திரனில் மனிதனை தரையிறக்குவது, விண்வெளி நிலையத்தை ஸ்தாபிப்பது உள்ளடங்கலாக பல்வேறு விண்வெளி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

"சேஞ்ச்1' விண்கலமானது கிழக்கு சீனாவிலுள்ள கிங்டா மற்றும் வட மேற்கு சீனாவிலுள்ள கஷ்கார் ஆகிய இடங்களிலுள்ள இரு விண்வெளி நிலையங்களிலிருந்து தூர இயங்கும் முறையின் மூலம் செயற்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனா, எதிர்வரும் வருடம் அந்நாட்டின் முதலாவது விண்வெளி நிலையத்துக்கான இணைப்பை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சுமார் 8.5 தொன் நிறையுடைய "தியாங்கொங் 1' என்ற இந்த விண்கல இணைப்பானது சீன விஞ்ஞானிகள் பூச்சிய ஈர்ப்புத் தன்மையில் விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தளமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இரத்தக்கறை படிந்த கடிதத்தை ஒபாமாவுக்கு அனுப்பிய எய்ட்ஸ் நோயாளி

அமெரிக்காவிலுள்ள எய்ட்ஸ் நோயாளி ஒருவர் தனது இரத்தத்தை ஒரு தாளில் படியவைத்து அதனை கடிதத்துடன் இணைத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் அந்தக் கடிதத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்துமடல்,ஒரேஞ் நிறதூள், தனது புகைப்படம் ஆகியவற்றையும் சேர்த்து அனுப்பிவைத்திருந்தார். அந்த நபரை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எத்தியோப்பிய நாட்டைச்சேர்ந்த அகதி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையின் போது, தான் எயிட்ஸ் நோயால் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு உதவிட அரசின் கவனத்தை ஈர்க்கவே இதுபோன்றசெயலில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். ஒபாமாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இரத்தக்கறை படியவைக்க தனது ஒரு விரலையே பிளேற்றால் துண்டித்ததாகவும் அந்த நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் ஒபாமாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒபாமாவுக்கு ஏற்கனவே கொலைமிரட்டல் இருந்து வருகிறது. இதனால் அவருக்கு எந்த வழியிலும் அச்சுறுத்தல் வரலாம் எனக் கருதி அவருக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலையில், ஒபாமாவுக்கு வந்த கடிதத்துக்குள் இருந்த ஒரேஞ் நிறத்தூளினால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இரசாயன விஞ்ஞானிகளை வரவழைத்து அந்த தூளை சோதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.