தசாவதாரம்' படம் பார்த்துவிட்டு, கமலஹாசனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு. மனோரமா கதறி அழுதார்
கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த `தசாவதாரம்' படத்தை, ரஜினிகாந்த் பார்த்து பாராட்டினார். நடிகை மனோரமா கமலஹாசனை கட்டிப்பிடித்து, உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
`தசாவதாரம்' படத்தை ரூ.60 கோடி செலவில், ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்துள்ளார். இதில், கமலஹாசன் 10 வேடங்களில் நடித்து இருக்கிறார்.
மிக பிரமாண்டமான முறையில் தயாராகி உள்ள இந்த படம், இன்று (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.
முன்னதாக, `தசாவதாரம்' படம் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி, கமலஹாசனின் நடிப்பை பாராட்டினார்.
முதல்-அமைச்சரை தொடர்ந்து நடிகர்-நடிகைகளுக்கு `தசாவதாரம்' படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் ப்ரேம் தியேட்டரில் நடந்த சிறப்பு காட்சிக்கு, ரஜினிகாந்த் வந்தார்.
அவரை, கமலஹாசன் வரவேற்று அழைத்து சென்று உட்கார வைத்தார்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா சரத்குமார், நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, அவருடைய மனைவி ஜோதிகா, பரத், சரத்பாபு, நாகேஷ், நடிகை மனோரமா, டைரக்டர்கள் கே.பாலசந்தர், தரணி, விஷ்ணுவர்தன் ஆகியோரும் `தசாவதாரம்' படம் பார்த்தார்கள்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் ரஜினிகாந்த், கமலஹாசனை கட்டிப்பிடித்து பாராட்டினார். படத்தில் அவர் ரசித்த காட்சிகளை விளக்கினார். சில காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன? என்று கமலஹாசனிடம் கேட்டார்.
இதேபோல் படம் பார்த்த அனைத்து நடிகர்-நடிககைளும் கமலஹாசனுடன் கை குலுக்கி பாராட்டினார்கள். நடிகை மனோரமா கமலஹாசனின் நெஞ்சில் முகம் புதைத்து, உணர்ச்சிமிகுதியால் அழ ஆரம்பித்தார். அவரை, கமலஹாசன் தேற்றினார். ``நிஜமாகவே நீ உலகநாயகன்தான்'' என்று கமலஹாசனை, மனோரமா தழுதழுத்த குரலில் பாராட்டினார்.
No comments:
Post a Comment