கொடைக்கானல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதல் கேசட்டைக் கமல் வெளியிட பாரதிராஜா பெற்றுக்கொண்டார். தசாவதாரம் பட வெளியீட்டுக்குப் பிறகு கமல் கலந்துகொள்ளும் விழா என்பதால், சற்று ஆர்வம் கூடியது ரசிகர்களிடத்தில். அப்படத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை என்றாலும் லேசாகத் தொட்டுக்கொண்டார் கமல்.
தசாவதாரம் படத்தின் வெற்றியைப் பார்த்து, மற்றவர்கள் எல்லாம் பாராட்டும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் இது போல் கடினமாக உழைத்து அதற்காகக் கிடைக்கிற பாராட்டுகள் நெகிழ வைக்கிறது. இங்கே பேசியவர்கள் ஆஸ்கார் விருது பற்றி குறிப்பிட்டார்கள். நாம் அங்கு போய் வாங்குவதை விட இங்கு வழங்கப்படும் விருதை வெள்ளைக்காரர்கள் வாங்கிக்கொண்டு போக வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. இதை என் வாழ்நாளில் பார்த்துவிட்டுதான் போவேன் என்றார் கமல்.
கொடைக்கானல் படத்தின் இயக்குனர் டி.கே. போஸும் பாரதிராஜாவும் ஆரம்ப காலங்களில் ஒரே அறையில் தங்கியிருந்தவர்களாம். பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்த பாரதிராஜா, சுமார் 40 வருடங்களுக்கு முன் டி.கே.போஸ் எழுதிய உடனடிக் கவிதை ஒன்றையும் மறக்காமல், வரி மாற்றாமல் மேடையில் வாசிக்க, அப்படியே உறைந்துபோனார் போஸ்.
படத்தின் நாயகி பூரணா, பரத்துடன் விலங்கியல் 3 ம் ஆண்டு படத்தில் நடித்து வருகிறார். முன்னதாகப் பேசிய தொகுப்பாளினி, ஸ்கேட்டிங் சக்கரத்தில் நின்றபடியே பரத நாட்டியம் ஆடுவதில் வல்லவர் என்று பூரணாவைப் பற்றி குறிப்பிட, வியப்போடு அவரை ஆசிர்வதித்தார் கமல்
No comments:
Post a Comment