எத்தியோப்பியாவில் மர்மயோகி - உலக நாயகனின் உலக உலா!

ஜுலை 13-ந் தேதி மும்பையில் நடைபெறவிருந்த 'மர்மயோகி' படத்தின் துவக்கவிழா தவிர்க்க முடிந்த(?) காரணத்தால், 25-ந் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. மிக பிரமாண்டமாக இந்த துவக்கவிழாவை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் கமல். இதற்காக மட்டும் சுமார் 50 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறாராம் அவர். உலகம் முழுவதும் தாங்களே ரிலீஸ் செய்யவிருப்பதால், தேவையில்லாத ஆர்ப்பாட்டம் எதற்கு என்று முடிவு செய்த பிரமிட் சாய்மீரா, 'துவக்க விழாவே வேண்டாம். நேரடியாக படப்பிடிப்புக்கு போய் விடலாம்' என்று கருத்து தெரிவித்ததாம். ஆனாலும், விழா நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கமல் தனது செலவில் இந்த விழாவை நடத்துவதாக கூறிவிட்டாராம். (முன்பணமாக வாங்கிய நான்கரை கோடியில் ஐம்பது லட்சத்தை செலவிடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?)

பிரமிட் சாய்மீராவோடு ராஜ்கமல் நிறுவனமும் இந்த தயாரிப்பில் இணைந்திருக்கிறது. இந்தியாவை தவிர, உலகம் முழுவதும் உள்ள முக்கியமான நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் கமல். எத்தியோப்பியா போன்ற நாடுகளும் இந்த லிஸ்டில் அடக்கம்! சுமார் 80 கோடி ரூபாயில் மர்மயோகியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

தசாவதாரத்தின் அறிக்கை சுமாராக இருந்தாலும், வருமானம் பிரமாதமாக இருப்பதால் புதிய தெம்போடு காணப்படுகிறார் கமல். குறிப்பாக சில இடங்களில் ரஜினியின் சிவாஜி கலெக்ஷனையே முறியடித்திருக்கிறதாம் தசாவதாரம்! இந்த யோகம் மர்மயோகியிலும் தொடரட்டும்!

No comments: