உலகிலேயே மிக உயரமான சீன மனிதருக்கு மீண்டும் சான்றிதழ்

கின்னஸ் புதிய விதிமுறைகளின் படி தன்னை அளந்து பார்க்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த உயரமான மனிதரான லியோனிட் ஸ்டாட்னிக் மறுத்து விட்டதால், சீனாவை சேர்ந்த பவோ சிஷு னுக்கு மீண்டும் கின்னஸ் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில், உலகிலேயே மிகவும் உயரமான மனிதராக, பவோவின் பெயர் இடம் பெறுகிறது.சீனாவை சேர்ந்த பவோ சிஷுன், ஏழு அடி 8.95 அங்குலம் உயரம் கொண்டவர்.

இதற்காக, இவருக்கு, 2005ம் ஆண்டு கின்னஸ் சான்றிதழ் அளிக்கப்பட்டு, 2006ம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றது.ஆனால், உக்ரைன் நாட்டு டாக்டர் ஒருவர் அளித்த சான்றிதழ்களின் படி, அந்நாட்டை சேர்ந்த லியோனிட் ஸ்டானிக், எட்டு அடி 5.5 அங்குலம் உயரம் கொண்டவராக தெரிய வந்ததைத் தொடர்ந்து, பவோவுக்கு வழங்கப்பட்ட கின்னஸ் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.

லியோனிட் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டுமானால், புதிய விதிகளின்படி, அவரை நிற்க வைத்தும், படுக்க வைத்தும், ஒரே நாளில் ஆறு முறை அளக்க வேண்டும். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தக அதிகாரிகள் உக்ரைனுக்கு வந்து அளப்பதற்கோ, அல்லது லியோனிக் பிரிட்டனுக்கு வரவோ தகவல் அனுப்பப்பட்டது.

ஆனால், ஏற்கனவே தனது உயரத்தால், மனவேதனையில் உள்ள லியோனிட், தன்னை அளந்து பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டார். இது குறித்து அடுத்தடுத்து கடிதம் எழுதி யும், இதற்கு லியோனிக் சம்மதிக்கவில்லை.

அவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். ஓய்வூதியமாக மாதம் நான்காயிரம் ரூபாய் கிடைக்கிறது. இத்துடன், தங்களுக்கு சொந்த மான விவசாய நிலத்தில் தக்காளி மற்றும் வெள்ளரி பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். தனி பண்ணையில் பன்றிகள், பசுக்கள் மற்றும் கோழிகளை வளர்த்து சம்பாதிக் கின்றனர்.

ஆனால், பவோவுக்கு தன்னை பற்றிய விளம்பரத்தில் மோகம் அதிகம். இதற்கு முன்னர் ஆடுகள் வளர்த்து வந்தார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதால், இவருக்கு திருமணம் கூடி வந்தது. இவரை திருமணம் செய்து கொள்ள, ஐந்து அடி ஆறு அங்குலம் கொண்ட பெண் முன்வந்தார்.

கடந்த ஆண்டு நடந்த இவரது திருமணத்தை, சீனாவை சேர்ந்த 15க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தன. இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட கின்னஸ் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், தனது சுயவிளம் பரத்தில் பவோ தீவிரமாக ஆர்வம் காட்டினார்.

பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு விட்ட இரண்டு டால்பின்களின், வாயில் கை விட்டு, தனது மூன்றடி 4.7 அங்குல கையை விட்டு, வயிற்றில் இருந்த பொருட்களை எடுத்ததன் மூலம் அவற்றை காப்பாற்றினார். இச்செய்தி சீனப் பத்திரிகைகளில் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கின்னஸ் விதிகளை ஏற்க லியோனிக் மறுத்துவிட்டதால், மீண்டும் பவோவுக்கே, உலகின் உயரமான மனிதர் என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வெளியாகும் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் பெயர் இடம் பெறுகிறது.

இவருக்கு முன், உலகிலேயே உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தவர் இல்லினோயிசின் அல்டான் நகரைச் சேர்ந்த ராபர்ட் வாட்லோ என்பவர் பெயர் இடம் பெற்றிருந்தது. இவரது உயரம் எட்டு அடி 11 அங்குலம். இவர் 1940ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.கின்னஸ் புத்தகத்தில், உலகிலேயே மிக குள்ளமான மனிதராக இடம் பெற்றிருப்பவர் ஹி பிங் பிங். இவரது உயரம் இரண்டு அடி 5.37 அங்குலம். பவோ வசிக்கும் இடத்தில் இருந்து சில நூறு கி.மீ., தூரத்தில், மங்கோலியாவில் இவர் வசித்து வருகிறார்.

No comments: