ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் நீச்சல் போட்டியில் 7 வது தங்கப்பதக்கத்தை வென்று ஒரே ஒலிம்பிக்கில் 7 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.
100 மீற்றர் பட்டபிளை பிரிவில் பெல்ப்ஸ் 0.01 விநாடி வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார். ஏற்கனவே, கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள மைக்கெல் பெல்ப்ஸ் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கவேட்டைநடத்தி வருகிறார்.
400 மீற்றர் மெட்லி பிரிவில் தங்கத்தை வென்று தனது வேட்டையை தொடங்கிய பெல்ப்ஸ், நேற்று முன்தினம் 6 வது தங்கப்பதக்கத்தை வென்றார். இந்நிலையில் நேற்று 100 மீற்றர் பட்டர்பிளை போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அவர் 7 வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் போட்டிகளில் 7 தங்கப்பதக்கத்தை வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்சன் சாதனையை இவர் சமன் செய்துள்ளார். மார்க் ஸ்பிட்ஸ் 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியில் 7 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இன்று நடைபெறும் 400 மீற்றர் மெட்லி அஞ்சலோட்டப் போட்டியில் பெல்ப்ஸ் பங்கேற்கிறார். இதில் வெற்றிபெற்றால் அவர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை வென்று புதிய சாதனை படைப்பார்.
ஏற்கனவே ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 9 தங்கப்பதக்கங்களை வென்றிருந்த காரல் லூயிஸ்,மார்க் ஸ்பிட்ஸ், பாவே நூர்மி மற்றும் லாட்நினா ஆகியோரின் சாதனையை இவர் முறியடித்து, இதுவரை மொத்தம் 13 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
நேற்றைய போட்டியில் பெல்ப்ஸ் 0.01 விநாடிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. செர்பிய வீரர் மிலோராட் கவிக் இவருக்கு பெரும் சவாலாக விளங்கினார். கடைசிக் கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்ச முயற்சித்து கடும் போட்டியில் ஈடுபட்டனர். ஒரு விநாடிக்கும் மிகக் குறைவான வித்தியாசத்தில் பெல்ப்ஸ் வெற்றி பெற்றார்.
No comments:
Post a Comment