29 ஆவது ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப வைபவத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் 400 கோடிக்கும் அதிகமான மக்களை பிரமிக்க வைத்ததன் மூலம் "எங்களால் முடியும்' என்பதை சீனா சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.
அங்குரார்ப்பண நிகழ்வுகளை "பறவைக்கூடு' தேசிய விளையாட்டரங்கில் குழுமிய 1 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கண் கொட்டாமல் பார்த்ததாக பெய்ஜிங்கிலிருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
5 ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்த செழிப்பான வரலாற்றை அதி நவீன முகத்துடன் சீனா வெளிப்படுத்தியிருக்கிறது. சீனாவின் தியானமென்சதுக்கத்தில் மக்கள் வெள்ளம் நள்ளிரவு வரை அலைமோதியது. வர்ணப்பூச்சிகளை முகங்களில் பூசியிருந்த பல்லாயிரக்கணக்கான சீனர்கள் கொடிகளை அசைத்தவாறு தாய்நாட்டுப் பற்றுடன் கோஷமெழுப்பினர்.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாணவேடிக்கைகளால் சுமார் 4 மணித்தியாலம் வானம் வர்ணஜாலம் காட்டியது. 208 ஒலிம்பிக் குழுக்களும் விளையாட்டுக்குழுக்களும் போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்திருக்கின்றன. நேற்றைய தினமே உண்மையான போட்டி ஆரம்பமானது.
"கிழக்கு ஆசியாவின் நோயாளி'யென ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்ட சீனா இப்போது "என்னால் போட்டியிட முடியும்' என்று நிரூபித்துக் காட்டியிருப்பதாக அந்நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டியானது உலகின் தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கும் சாதாரண சீனர்களின் குரல்களை கேட்பதற்கும் வழிசமைத்துக் கொடுத்திருப்பதாக அந்நாட்டு மக்கள் கூறியுள்ளனர்.
"தனது உண்மையான சொரூபத்தை உலகுக்குக் காட்ட சீனா தயார்' என்று அவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment