ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டப் போட்டி ஜமேக்காவின் போல்ட் உலக சாதனை

பீஜிங் ஒலிம்பிக் தொடரில் உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரை அறிமுகப்படுத்தும் 100 மீற்றர் இறுதிப் போட்டியில், ஜமேக்கா வீரர் உசைன் போல்ட் பந்தயத் தூரத்தை 9.69 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நேற்றிரவு நடந்த இப்போட்டியில் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசாபா பாவல் 5 ஆவது இடத்தையே பிடித்தார். 100 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் உசைன் போல்ட், மற்றொரு ஜமேக்கா வீரர் அசாபா பாவல் உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். அமெரிக்காவின் டைசன் கே தகுதிச்சுற்றில் பந்தயத்தூரத்தை 10.05 நொடிகளில் கடந்ததால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

போட்டி தொடங்கிய 3 நொடிகளுக்குள்ளாகவே போல்ட் முன்னிலை பெற்றார். 6 ஆவது, 7 ஆவது நொடியில் மற்ற வீரர்களை விட போல்ட் வெகு தூரம் முன்னேறினார். தங்கத்தை வெல்வது உறுதி என்று தெரிந்தவுடன், போட்டி முடிவதற்கு முன்பாகவே தனது நெஞ்சில் கையைத் தட்டி இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

முடிவில் 9.69 நொடிகளில் பந்தயத் தூரத்தைக் கடந்து உசைன் போல்ட் தங்கப் பதக்கத்தை வென்றார். ரினியாட் ருபாகோ நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் தொம்ஸன் (9.89 விநாடி) வெள்ளிப்பதக்கத்தையும், அமெரிக்க வீரர் வோல்டர் டிக்ஸ் (9.91 விநாடி) வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.

இப்போட்டியில் போல்ட்க்கு பெரும் சவாலாக விளங்குவாரென எதிர்பார்க்கப்பட்ட அசாபா பாவல் பந்தயத் தூரத்தை 9.95 நொடிகளில் கடந்து 5 ஆவது இடத்தையே பிடித்தார்.

No comments: