8 தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார் பெல்ப்ஸ்

ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் புதிய சாதனை படைத்திருக்கிறார். பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற 400 மீற்றர் மெட்லி அஞ்சலோட்ட நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து 8 ஆவது தங்கப் பதக்கத்தை பெல்ப்ஸ் வென்றார்.

இதற்கு முன் ஒரு ஒலிம்பிக் போட்டியில் 7 தங்கப் பதக்கங்கள் பெற்று மார்க்ஸ் ஸ்பிட்ஸ் படைத்திருந்த சாதனையை பெல்ப்ஸ் நேற்று முறியடித்தார்.

அமெரிக்க வீரர்களான ஆரோன் பியர்ஸ்சோல், பிரண்டன் ஹான்சன், பெல்ப்ஸ் மற்றும் ஜேசன் லேசக் ஆகியோர் 400 மீற்றர் அஞ்சலோட்ட நீச்சல் போட்டியில் தங்களது இலக்கை 3.29.34 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய நீச்சல் அணி 2 ஆவது இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் ஜப்பான் அணி 3 ஆவது இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

ஒரே ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தனக்கு தற்போது ஏற்படும் உணர்வை வெளிப்படுத்த தெரியவில்லை என்றும், உற்சாகத்தின் காரணமாக தான் உணர்ச்சிவசப் பட்டிருப்பதாகவும் கூறிய பெல்ப்ஸ், தனது தாயை உடனடியாக சந்திக்க விரும்புவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தங்கம் வென்ற அணியில் தான் இடம் பெற்றது தனக்கு மிகுந்த பெருமிதம் அளிப்பதாக மற்றொரு வீரர் பியர்ஸ்சோல் கூறினார். பெல்ப்ஸ் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 14 தங்கப் பதக்கம் வென்று அசைக்க முடியாத இடத்திற்கு உயர்ந்துள்ளார்

No comments: