இணையத்தில் தேடுவோர் அனைவருக்கும் தெரிந்திருக்கும் பெயர் கூகுள். தேடு பொறிகளின் அரசன் அது. அதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ தேடுபொறிகள் வந்தாலும் அத்தனையும் தடமில்லாமல் அழிந்துவிட்டன. ஏதோ யாகூவும், மைக்ரோசொப்டும் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருக்கின்றன. எனினும் அவற்றின் மொத்த வியாபாரம் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அப்படியானால் கூகுளின் எதேச்சதிகாரத்தை ஒன்றுமே செய்ய முடியாதா? முடியவே முடியாது என்கிறார்கள் கூகுளின் நிர்வாகிகள். அதற்குக் காரணமும் இருக்கிறது. வலுவான முதலீடு, நல்ல கட்டமைப்பு, ரகசியம் காக்கும் திறன், அரசுகளையே ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பம் ஆகியவைதான் கூகுளை நம்பர் 1 ஆக வைத்திருக்கிறது.
ஆனால், இந்த நம்பிக்கை கடந்த வாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அதற்குக் காரணம் கூல் என்ற புதிய தேடுபொறியின் உதயம்தான். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா பேட்டர்சன், ரஸல் பவர் தம்பதிதான் இந்தத் தேடுபொறியை உருவாக்கினர். தொடக்க நாளில் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுவரை வேறு எந்தத் தேடுபொறிக்கும் கிடைக்காத அளவுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.
கூகுள் தேடுபொறியை விட 3 மடங்கு அதிகமான இணையப் பக்கங்களை உள்ளடக்கியது. பல மடங்கு வேகமாகத் தேடித் தருவது, தேடுவதை மட்டுமல்லாமல் அவை தொடர்பான மற்ற தகவல்களையும் தருவது என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் கூறப்பட்டன. அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது எனப் பார்ப்பதற்கு தளத்துக்குள் நுழைந்தால், நம் கண்ணில்படுவது மிக எளிமையான கவர்ச்சிகரமான முதல் பக்கம். எந்த எளிமையால் கூகுள் முதலிடத்தைக் தக்கவைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த எளிமையை, அதைவிட அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறது கூல். கறுப்புப் பின்னணி, தேடும் சொற்களை உள்ளிடுவதற்கான பெட்டியின் நளினமான வடிவமைப்பு ஆகியவை முதல்பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடும்.
இவையெல்லாம் தேடுபொறிக்கு அவசியம்தான் என்றாலும், நமக்கு வேண்டிய தகவல்களை அள்ளித் தருவதைக் கொண்டுதான் அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும். ஏதாவது சொற்களை உள்ளிட்டுக் கொண்டிருக்கும்போது அது தொடர்பான வேறு சொற்களின் பட்டியல் வருகிறது. அதிலிருந்துகூட ஏதாவது ஒரு சொல் அல்லது வாசகத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியும். தேவையான தகவலின் முக்கிய வார்த்தையை உள்ளிட்டதும், தகவல்கள் வந்து கொட்டுகின்றன.
அங்கும் சில சிறப்புகளைச் செய்திருக்கிறது கூல். மற்ற தேடுபொறிகளைப் போல் வரிசையான பட்டியலாக இல்லாமல், பக்கவாட்டில் பத்திகளாக இணையப் பக்கங்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு இணையப் பக்கத்துக்கும் அது தொடர்பான படம் ஒன்றும் அருகிலேயே இருக்கிறது. இது தவிர, வலது ஓரத்தில் இருக்கும் ஒரு பட்டியலில் நாம் தேடிய தகவல்களை ஒத்த மற்ற தகவல்களின் பட்டியலும் கிடைக்கிறது. கூகுளுடன் ஒப்பிட்டால் வேகம் கொஞ்சம் அதிகம்தான். முதல்நாளிலேயே, 5 கோடி பேர் கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியிருப்பதாக பேட்டர்சன் கூறுகிறார். மற்ற தேடுபொறிகளுக்கு கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் இது மிக அதிகம். ஆயிரக்கணக்கான சர்வர்களை கூகுள் பயன்படுத்தி வரும் நிலையில், வெறும் 120 சர்வர்களைக் கொண்டு இத்தனை வசதிகளையும் வழங்கும் கூல் தேடுபொறியின் சாதனை வரவேற்கத் தக்கதே.
ஆனால், கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியவர்கள் யாரும் அது கூகுளை விட சிறந்த தேடுபொறி என்றோ, சரியான போட்டியாக இருக்கும் என்றோ இதுவரை கூறவில்லை. கூல் தேடுபொறியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய வசதிகளை வரவேற்கும் அதே நேரத்தில், பொருத்தமான தகவல்களைத் தேடித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இலட்சக்கணக்கான பக்கங்களைத் தேடித் தருவதை விட பொருத்தமான சில பக்கங்களைத் தேடித் தருவதே பயனுள்ளதாக இருக்கும். இந்த விடயத்தில் கூல் வெற்றிபெறவில்லை.
அதேபோல், விக்கிபீடியா போன்ற முக்கிய இணைய தளங்களைக் கூட முதல் பக்கத்தில் காட்டுவதில்லை என்றும் பலர் கூறுகின்றனர். தேடித் தரும் இணைய தளங்களுக்கு அருகிலேயே அது தொடர்பான படங்கள் வருவது வசதியாக இருந்தாலும், அதில் சில ஆபாச படங்களாக இருப்பது முகம்சுளிக்க வைக்கிறது. கூல் நிறுவனத்தினர் கூறுவது போல் கூகுளைவிட அதிக இணையப் பக்கங்களை உள்ளடங்கியது எனக் கூறுவதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.
மிடியாவால்தான் இத்தனை பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பலர் குறை கூறுகின்றனர். உண்மையில் நல்ல விடயங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் நம்மை வந்தடைய வேண்டும். மீடியா வழியாக அல்ல. கோலியாத்தை தாவீது வீழ்த்தியது போன்று அதிசயம் எதுவும் நடந்தாலொழிய கூகுளுக்கு எந்த அச்சுறுத்தலும் இப்போதைக்கு இல்லை.
No comments:
Post a Comment