அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி நடால், வில்லியம்ஸ் சகோதரிகள் வெற்றி

அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டியில் நடால், வில்லியம்ஸ் சகோதரிகள் காலிறுதிக்கு முந்தைய 4 ஆவது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடந்து வருகிறது.

அமெரிக்க ஓப்பனை முதல் முறையாக வெல்லும் வேட்கையுடன் உள்ள உலகின் முதல் நிலை வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால், 71 ஆவது இடம் வகிக்கும் செர்பியாவின் விக்டோர் டிரோக்கியை எதிர்கொண்டார். இதில் வழக்கம் போல் தனது அதிரடியை வெளிப்படுத்திய நடால் 64, 63, 60 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று 4 ஆவது சுற்றுக்குள் நுழைந்தார். அடுத்து அமெரிக்காவின் சாம் கியூரியை எதிர்கொள்கிறார்.

9 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளாக், தனது நண்பர் மார்டி பிஸ்சிடம் 36, 36, 67 (47) என்ற நேர் செட்டில் தோற்றுப் போனார். பிஸ் 4 ஆவது சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். 7 ஆம் நிலை வீரரான அர்ஜென்ரீனாவின் நல்பாண்டியன், 4 ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெர்ரர், 14 ஆம் நிலை வீரர் கார்லோவிச் (குரேஷியா), 16 ஆவது இடம் வகிக்கும் ஜில்ஸ் சிமோன் (பிரான்ஸ்) ஆகியோரும் அதிர்ச்சித் தோல்வியுடன் நடையைக் கட்டினார்கள்.

3 ஆவது சுற்றில் முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 62, 61 என்ற நேர் செட்டில் ஜப்பானின் சுகியாமாவை தோற்கடித்தார். இதற்கு முன்பாக சுகியாமாவுக்கு எதிராக மோதிய 3 மோதலிலும் செரீனா ஒரு செட்டையும் இழந்ததில்லை. அந்தச் சிறப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். செரீனா அடுத்து பிரான்ஸின் சிவரினே பிரிமோடை சந்திக்கிறார்.

செரீனாவின் அக்கா வீனஸ் வில்லியம்ஸ் 62, 61 என்ற நேர் செட்டில் உக்ரைனின் அலோனா போடரென்கோவை வீழ்த்தினார். 4 ஆவது சுற்றில் வீனஸ் போலந்தின் ராத்வன்ஸ்காவை எதிர்கொள்கிறார். இதன் மூலம் வில்லியம்ஸ் சகோதரிகள் காலிறுதியில் சந்திப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

ரஷ்ய முன்னணி நட்சத்திரம் டினரா சபீனா, சுவிற்சர்லாந்தின் இளம் வீராங்கனை டிமியா பாக்சின்ஸ்கியின் சவாலை முறியடித்தார். கடுமையான போராட்டத்திற்குப் பின் 36, 75, 62 என்ற செட் கணக்கில் சபீனா வெற்றி பெற்றார். முன்னாள் நம்பர் வன் வீராங்கனை பிரான்ஸின் அமலி மவுரஸ்மோ 64, 64 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான ஜூலி காயினை விரட்டினார். ஜூலி 2 ஆவது சுற்றில் முதல் நிலை வீராங்கனை செர்பியாவின் இவானோவிச்சை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: