உலகின் முதலாவது இரட்டைக்கை மாற்று அறுவைச்சிகிச்சை - விஞ்ஞானிகளின் உலக சாதனை

6 வருடங்களுக்கு முன்பு விபத்தொன்றில் இரு கைகளையும் இழந்த விவசாயி ஒருவருக்கு, கைகள் மாற்று அறுவைச் சிகிச்சையின் மூலம் இறந்தவர் ஒருவரின் கைகளை பொருத்தி ஜேர்மனிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இரட்டை கைகள் மாற்று அறுவைச் சிகிச்சையொன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை இதுவே உலகில் முதல் தடவையாகும். முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், 54 வயதான மேற்படி விவசாயிக்கு 15 மணித்தியால அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு இக்கரங்களை பொருத்தியுள்ளனர்.

இதற்காக மேற்படி அறுவைச் சிகிச்சைக்கு சிறிது நேரத்திற்கு முன்பு உயிரிழந்த இளைஞர் ஒருவரது கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு 2003 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவில் கையின் முன்பகுதியை மட்டும் இழந்த ஒருவருக்கு கரமாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. ஆனால் தோள் பகுதிக்கு சிறிது கீழே கரங்கள் துண்டாக்கப்பட்ட ஒருவருக்கு கரமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதற்றடவையாகும். எனினும் அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டவரால் உடனடியாக கையை அசைக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

அந்நபரின் துண்டிக்கப்பட்ட கைப் பகுதிகளுக்கும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்குமிடையே தினசரி சுமார் ஒரு மில்லிமீற்றர் வரையில் நரம்புகள் வளர்ந்து இணைப்பு உறுதிப்படுத்தப்பட்ட பிற் பாடே, அவரால் கையை அசைக்கக்கூடியதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

No comments: