அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் 11 ஆவது தங்கப்பதக்கத்தை வென்று ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிக தங்கப்பதக்கங்களை வென்ற வீரர் எனும் சிறப்பைப் பெற்று புதிய வரலாற்றை படைத்திருக்கிறார். நேற்று அவர் 200 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 200 மீற்றர் பிரி ஸ்டைல் அஞ்சலோட்டம் ஆகிய 2 பிரிவுகளிலும் தங்கத்தை வென்று பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 5 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதுவரை அவர் வென்றுள்ள 5 தங்கப்பதக்கங்களுமே உலக சாதனை மூலம் பெறப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதனை நீச்சல் வீரராக கருதப்படும் அமெரிக்காவின் மைக்கெல் பெல்ப்ஸ் 8 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டுமெனும் இலக்கோடு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கியிருக்கிறார்.
நேற்றுவரை 5 தங்கப் பதக்கங்களையும் அவர் உலக சாதனையை முறிடியத்து வென்றுள்ளார். ஏற்கனவே கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 6 தங்கப்பதக்கங்களை வென்ற பெல்ப்ஸ் நேற்று முன்தினம் 3 பதக்கங்களை வென்றதன் மூலம் 9 பதக்கங்களை வென்று இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 9 பதக்கங்களை வென்றுள்ள கார்ல் லூயிஸ், பாவோ நுர்மி, மார்க் ஸ்பிட்ஸ் மற்றும் லாட்நினா ஆகிய சாதனையாளர்கள் பட்டியலில் சேர்ந்தார்.
இந்நிலையில் நேற்றுக் காலை அவர் 200 மீற்றர் பட்டர்பிளை பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று ஒலிம்பிக் வரலாற்றிலேயே 10 ஆவது தங்கப்பதக்கத்தை வெல்லும் வீரர் எனும் சிறப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக தங்கப்பதக்கங்களை வென்ற தனிநபராக அவர் உருவாகியுள்ளார். 200 மீற்றர் பட்டர்பிளை பிரிவில் அவர் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் நடைபெற்ற200 மீற்றர் பிரிஸ்டைல் அஞ்சலோட்டப் போட்டியில் அவர் அமெரிக்க அணியில் பங்கேற்றார்.
இந்தப் போட்டியில் அமெரிக்க அணி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம் பெல்ப்ஸ் தன்னுடைய 11 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இது பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வென்றுள்ள 5 ஆவது தங்கமாகும்.
அவர் திட்டமிட்டபடி எஞ்சிய 3 போட்டிகளிலும் தங்கத்தை வென்றால் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்சின் சாதனையை முறியடித்து மற்றுமொரு வரலாற்று சாதனையை நிகழ்த்துவார்.
No comments:
Post a Comment