4 X 100 மீற்றர் அஞ்சலோட்டம்; தகுதியிழந்தது அமெரிக்கா!

பீஜிங் ஒலிம்பிக்கின் 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தகுதியிழந்துள்ளன. 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தற்போதைய ஒலிம்பிக் மற்றும் உலக சாதனையை வைத்துள்ள அமெரிக்கா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாதது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இறுதிச் சுற்றுக்கு செல்லும் அணியை தேர்வு செய்வதற்காக 2 தகுதிச் சுற்றுகள் நடத்தப்பட்டன. இதில் முதல் தகுதிச் சுற்றில் ரோட்னி மார்டின், டிராவிஸ் பட்கெட், டார்விஸ் பேட்டன், டைசன்கே ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி பங்கேற்றது. இதில் "கோல்' மாற்றும் போது அமெரிக்க அணியினரிடையே ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக கோல் களத்தில் விழுந்ததால், அந்த அணி இறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான தகுதியை இழந்தது.

மகளிர் பிரிவிலும் ஏமாற்றம்: இதேபோல் மகளிருக்கான 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்திலும் அமெரிக்க அணி கோல் மாற்றும் பிரச்சினையால் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு தகுதி பெறத் தவறியது. இரு பிரிவுகளாக நடந்த தகுதிச் சுற்றில், முதல் தகுதிச் சுற்றில் ஏஞ்சலா வில்லியம்ஸ், மெசெலி லெவிஸ், டோரி எட்வர்ட்ஸ், லாரின் வில்லியம் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி பங்கேற்றது.

இதில் 3 ஆவது மற்றும் 4 ஆவது வீராங்கனைகளிடையே கோல் மாற்றும் போது பதற்றம் ஏற்பட்டதால், கோல் களத்தில் விழுந்தது. இதையடுத்து அமெரிக்கா இறுதிப் போட்டிக்கான தகுதியை இழந்தது. 4x100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தனி நாடாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா, ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு என இரண்டிலும் தகுதி பெறத் தவறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments: