மின்னல் வேகத்தில் உசைன் போல்ட் உலக சாதனை

ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமேக்காவின் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மின்னல் வேகத்தில் பறந்து இவர் 9.69 விநாடிகளில் உலக சாதனையும் படைத்தார். நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் உசைன் போல்ட், அசபா பாவல், டைசன் கெய் ஆகியோரிடையே கடும் போட்டி காணப்பட்டது.

முதலில் நடந்த அரையிறுதியில் அமெரிக்காவின் டைசன் கெய் 10.05 விநாடிகளில் ஓடி ஐந்தாவது இடமே பெற முடிந்தது. இதையடுத்து உலக சாம்பியனான இவர் இறுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை பரிதாபமாக இழந்தார்.

டைசன் வெளியேறியதைத் தொடர்ந்து ஜமேக்கா வீரர்களான போல்ட் அசபா பாவல் மற்றும் அமெரிக்காவின் வோல்டர் டிக்ஸ் இடையே முதலிடம் பெறுவதில் போட்டி நிலவியது.விறுவிறுப்பான இறுதிச் சுற்றில் 21 வயதான உசைன் உட்பட 8 பேர் பங்கேற்றனர்.

உலகில் அதிகவேக வீரரை நிர்ணயிக்கும் ஓட்டம் என்பதால் " டென்சன் ' எகிறியது. ஓட்டம் தொடங்கியதும் " போட்டோ பினிஷ் ' இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் வேகத்தில் ஓடிய போல்ட், கண் இமைக்கும் நேரத்தில் 100 மீற்றர் தூரத்தை கடந்தார். இவருக்கு அருகில் கூட யாரும் வரவில்லை. போட்டித் தூரத்தை 9.69 விநாடிகளில் கடந்த இவர் தங்கப்பதக்கம் வென்றதோடு, தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.

முன்னதாக இவர், கடந்த மே மாதம் 9.72 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 0.03 விநாடிகள் வித்தியாசத்தில் தனது சாதனையை தகர்த்துள்ளார். மின்னல் வேகத்தில் ஓடிய இவர் " லைட்னிங் போல்ட் ' என்ற தனது புகழை தக்க வைத்துக் கொண்டார்.

அமெரிக்காவுக்கு"அடி' : 2 ஆவது இடத்தை பெற்ற ரினிடா டுபாய் கோவின் ரிச் சர்ட் தொம்சன் ( 9. 89 விநாடி) வெள்ளி வென்றார். அமெரிக்காவின் வோல்ட் டிக்ஸ் ( 9.89 விநாடி) வெண்கலம் பெற்றார். ஜமேக்காவின் அசபா பாவல் ( 9.95 ) 5 ஆவது இடமே பெறமுடிந்தது. முதலிரண்டு இடங்களையும் கரீபிய மண்ணைச் சேர்ந்தவர்கள் பெற்றதன் மூலம் தடகளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பலத்த "அடி' விழுந்துள்ளது.

No comments: