ஏசி இயங்குவதால் கரன்ட் பில் எகிறுவது பற்றி கவலைப்படுகிறீர்களா...? விட்டுத் தள்ளுங்க, விரைவில் சூரிய சக்தியில் இயங்கும் ஏசி அறிமுகமாக உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கிரீன்கோர் நிறுவனம் இதைத் தயாரித்துள்ளது. 170 வாட் திறன் கொண்ட, சூரிய சக்தியை கிரகித்து மின்சாரமாக மாற்றும் அமைப்பு இதில் உள்ளது. இப்போது ஸ்பிளிட் ஏசியில் வீட்டுக்கு வெளியே கருவியை வைப்பதுபோல, இந்த சோலார் பேனலை பொருத்தி விட வேண்டியதுதான்.
அதில் விழும் சூரிய ஒளியை கிரகித்து நேர்மின்சாரமாக்கி ஏசி இயந்திரம் இயங்கும். இந்த ஏசி மூலம் 600 சதுர அடி பரப்புக்கு குளிர்சாதன வசதி செய்யலாம். மின் சிக்கனம் தவிர, சுற்றுச்சூழலுக்கு ஆதரவான இந்த ஏசியை அமெரிக்க உணவு நிறுவனமான மெக்டொனால்டு மற்றும் கடற்படை ஆகியவை சோதனை அடிப்படையில் பொருத்தியுள்ளன.
சூரிய சக்தி நேரடியாக கிடைக்காத நேரங்களிலும் ஏசி செயல்படும் விதத்தில் பாட்டரி வசதியும் உண்டு. சூரிய சக்தி கிடைக்கும்போது அதில் ஒரு பகுதி, பாட்டரியில் சேமிக்கப்பட்டு, சூரியன் இல்லாத நேரங்களில் ஏசியை தொடர்ந்து இயங்கச் செய்யும்.
இந்த சோலார் ஏசியை கிரீன்கோர் நிறுவனம் 2 மாடல்களில் வெளியிடவுள்ளது. ஒரே இடத்தில் பொருத்துவது, சக்கரங்கள் மூலம் எங்கும் நகர்த்திச் செல்வது போல அவை விற்பனைக்கு வர உள்ளன.
No comments:
Post a Comment