அசையாக்கரடி
அசையாக்கரடி தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் எல்லாமுண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். இதன் உடல் இயக்கமும் மிக மிக மெள்ளவே நடக்கும். இதன் வயிறு மிக மிக மெள்ளத் தான் இயங்கும். உண்ட உணவு செரிக்க ஒரு மாதம் கூட செல்லும். ஒரு ஆண் அசையாக்கரடி ஒரேயொரு பெண் கரடியுடன் தான் உறவாடி இருக்கும் என்பர்.
உலகில் இன்றுள்ள அசையாக்கரடிகள் இரு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 6 இனங்களாக உள்ளன. மெதுவாக நகரும் மூன்று விரல்கள் கொண்ட பிராடிபொடிடீ (Bradypodidae) குடும்பத்தை சேர்ந்த மூவிரல் அசையாக்கரடி உள்ளது ஒரு குடும்பம் ஆகும். மற்றது இருவிரல் அசையாக்கரடி உள்ள மெகலோனிசிடீ (Megalonychidae) குடும்பம் ஆகும். மூவிரல் அசையாக்கரடியைன் விட இருவிரல் அசையாக்கரடி சற்றே பெரிதாகவும், சற்றே விரைவாகவும் நகரும், ஆனால் இவ் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இல்லை. இவ்விரு வகை அசையாக்கரடிகளும் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒரே காடுகளில்தான் வாழ்கின்றன.
அண்மைக் காலம் வரை அசையாக் கரடிகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உறங்குகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கணித்து இருந்தனர். இவ்வாய்வு உயிர்க்காட்சியகங்களில் பிடித்து வைத்து வளர்க்கும் விலங்குகளை ஆய்ந்ததின் பயனாக அறியப்பட்டது. ஆனால் அண்மையில், உறக்கத்தை அளக்கும் கருவிகளைக்கொண்டு அறிவியலாளர்கள் ஆய்ந்ததில், காட்டில் வாழும் பழுப்பு கழுத்துள்ள மூவிரல் அசையாக்கரடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 9.6 மணிநேரம்தான் உறங்குகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment