தடையை வென்றது 'தசாவதாரம்"


நடிகர் கமல் நடித்துள்ள தசாவதாரம் படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ராக்ஷண அமைப்பின் தலைவர் ஸ்வாமி கோவிந்த ராமானுஜ தாசா என்பவர் நடிகர் கமல் நடித்துள்ள தசாவதாரம் படத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தசாவதாரம் படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் மோதல் ஏற்படுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது இந்துக்களை புண்படுத்துவதாகும். எனவே இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவிற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தசாவதாரம் என்ற பெயரை படத்திற்கு பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய உயர்நீதி மன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் தணிக்கைக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல படத்தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவர்கள் தங்கள் மனுவில், ‘12-ம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று சம்பவத்தை பின்னணியாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லை. கற்பனையான குற்றச்சாட்டுக்களை மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த படத்தை தணிக்கைக்குழு பார்த்த பிறகே ‘யூ’ சான்றிதழை வழங்கி உள்ளது. மனுதாரர் படத்தை பார்க்காமலேயே வழக்கு தொடுத்துள்ளார்.

படத்தின் தலைப்புக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் படத்தை எதிர்க்கும் மனுவை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தனர்.

‘தசாவதாரம்’ தலைப்புக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. படத்தில் ஓம், பிரணவ மந்திரம், பகவத் கீதை ஆகியவற்றின் மீது கால் வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது கற்பனையானது.

ராமானுஜர் என்ற கதாபாத்திரம் படத்தில் இடம் பெறவில்லை. மனுதாரர் கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே நேரத்தில் எந்த பிரிவு மக்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் கருத்துரிமையை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

No comments: