நிஜ வில்லனான எம் ஆர் ராதா


1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர். தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.[1] பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான[2][3] ராதா, காமராஜரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சியில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர்.[4] ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதி மன்றத்தில் இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.

தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின் இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மு.க.முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

No comments: