பெனாசிரின் இறுதிக் கவிதையின் சில வரிகள்.................




உலகமே பிறந்திராதொரு பொழுதில்
ஆதாமும் உருப்பெறாதொரு காலத்தில்
ஆரம்பமானது எனது உறவு

ஆண்டவனின் குரலைக்கேட்டபோது
இனிமையான தெளிவான அதன் அழைப்புக்கு
நிறைந்த இதயத்தோடு "ஆம்" என்றேன்
அன்புக்குரிய என் மண்ணோடு என்னைப் பிணைத்துக் கொண்டேன்

நாமெல்லாம் ஒன்றாயிருந்த நாளில்
துவங்கியது அந்த உறவு

காத்திருக்கிறேன் செய்திகளுக்காக கனவுகளில் பொழுதுகளில்
காத்திருக்கிறேன் தூதர்களுக்காக கனவுகளில் பொழுதுகளில்
எப்பொதும் வரும் அந்தச் செய்தி
இங்கிருந்து அங்கே என்னை எப்போது கொண்டுபோய்ச் சேர்க்கும் ?

என் இதயத்துக்குத் தெரிந்தாக வேண்டும்
ஆண்டவனின் சோதனையில் நான் தேர்ச்சிபெற வேண்டும்

நரைகளைக் காட்டுகிறது என் கேசம்
சோகத்தில் உலர்ந்து கிடக்கிறதென் வதனம்

மக்களிடம் சொல்ல விளைகிறதென் நெஞ்சம்
ஒவ்வொரு நாளும் நான் உலகத்துக்காக
எனது குழந்தைகளுக்காக எனக்காக புன்னகைக்கிறேன்
அவர்கள் கேட்கிறார்கள், எப்பொது நாம் நாடு திரும்புவோம் ?
நான் அவர்களுக்குச் சொல்கிறேன்
மனிதர்களின் இதயங்களிலிருந்து விடுபட்டு
மிருகங்களின் மார்புகளுக்குள் தஞ்சமடைந்துவிட்ட
நீதியின் கதையை

ஏழைமக்கள்
இராணுவக்கொடுங்கோலர்களின் பூட்சுகளின் கீழ்
மிதிபடுவதை விடவும்
நல்லகதி அவர்களுக்கு வாய்ந்திருக்கலாம்.
நல்ல நிலம் வறண்டு கிடக்கிறது
தண்ணீருக்காகத் தொழுகிறார்கள் மக்கள்
பயிர்கள் அழிகின்றன
கால்நடைகள் மடிகின்றன
குளிர்ந்து கிடக்கின்றன அடுப்புகள்

அழாதீர்கள்
கொடுங்கோலர்களின் காலம் விரைவில் முடியும்
முன்னர் முடிந்தது போல

ஒருத்தரிடம் அதிகாரம் இருக்கிறது
இன்னொருத்தரிடம் நியாயம் இருக்கிறது
ஒருத்தர் கையில் வாள் இருக்கிறது
இன்னொருத்தர் கையில் எழுதுகோல் இருக்கிறது
துப்பாக்கிகள் துருப்பிடித்து உடைந்து விழும்
சிந்தனைகளோ நிலைத்து வாழும்

விதியின் கரங்கள்
எழுதிச் செல்கின்றன
வெற்றிகளின் கதைகளை துயரங்களின் கதைகளை
போர்களை அமைதியை
வெடிகுண்டுகளால் தகர்ந்த வீடுகளை
மரணத்தின் துர்நாற்றத்தை மீறி
மீண்டும் துவங்குகிறது வாழ்க்கை
துயர அலை புரள்கிறது
காத்திருக்கிறது சந்தோஷ சமுத்திரம்
பொறுமையோடு கூடிய வேண்டுதல், தவம்
பிரிந்தவர் கூடுகின்றனர்
கைதிகள் விடுதலை பெறுகின்றனர்
அவர்களின் இடங்களில் புதியவர்கள்
அடைக்கப்படுகிறார்கள் அல்லது தப்பித்து ஓடுகிறார்கள்
விதியின் கரங்கள் எழுதிச் செல்கின்றன.

எனது நேசத்துக்குரியவர்களே
உங்களுக்குச் சொல்கிறேன்
கலங்காதீர்கள்
கண்ணீர் விடாதீர்கள்
கவலை கொள்ளாதீர்கள்
இந்த நாட்கள் கழியும்
இரவு முடிந்து காலை புலரும்
இடர்கள் முடிந்து மகிழ்ச்சி மலரும்


பாலைவனங்களின் புதல்விகள் அறிவார்கள்
சுதந்திரமான மக்களின் கனவுகளை
எந்த விதியும் தலையிடமுடியாது
காற்றைக் கேளுங்கள்
அது சுமந்துவரும் செய்திகளைக் கேளுங்கள்
வரலாற்றில் வந்து சென்ற சர்வாதிகாரிகளின் கதைகளை
கால மணலில் கலந்துவிட்ட கொடுங்கோலர்களின் செய்திகளை
எத்தனை சேனைகள் வந்தன சென்றன
எவ்வளவு ரத்தம் சிந்தப்பட்டது
பிரகடனப்படுத்தப்பட்ட வெற்றிகள்
தோற்று விழுந்த ராஜ்ஜியங்கள்
பாலை மணல் பேசும்
பாலைவனக்காற்று குசுகுசுக்கும்
உண்மைவெல்லும்
பாலைவனத்தாதி திரும்பி வருவாள்

கவனியுங்கள் காற்றை
அது சுமந்து வருகிறது
பாய்ந்து சென்ற குதிரைகளின் குளம்பொலிகளை
வந்து சேர்ந்த பல்லக்குகளின் ஆரவாரத்தை
டாங்கிகளின் உறுமலை
விமானங்களின் இரைச்சலை

காலச்சுடருக்கு முன்னால்
போய் விட்டன எல்லாம்

ஆடுகிறது வரலாற்றின் ஊசல்
அழைக்கிறது பாலைவனக் காற்று
அழைக்கிறது மேவி
காலத்தின் அழைப்பு
பாலைவனக்காற்று சுமந்து வரும் அழைப்பு

No comments: