"பிரதேசவாதம் வந்துவிட்டது" என இன்று பலரும் பலவாறு பேசி வருகின்றனர். இந்தப் பிரதேசவாதம் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் அரசியல் வாதிகளால் பயன்படுத்தப்பட்டுவந்தன. தேர்தலில் வெற்றி பெருவதற்காக இந்த வாதங்களை அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் பயன்படுத்தி வந்தனர். இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். தமிழர் பிரதேசங்களில் மட்டுமல்ல வெளி மாவட்டங்களிலும் இந்த பிரதேசவாதம் பரவியுள்ளது.
மட்டக்களப்புத் தொகுதி 1960ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இருந்து இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. அதாவது இத்தொகுதியில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 1960 ஆம் ஆண்டு மார்ச், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும், 1965 ஆம் 1970 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் செல்லையா இராசதுரை அவர்களே முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகத்தெரிவானார். இராசதுரை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்தது மட்டுமல்ல கட்சியின் போராட்டங்களிலும் ஈடுபட்டு கட்சியை வளர்க்கப் பாடுபட்டார். அதனால் அவருக்கு கட்சியிலும், மட்டக்களப்பிலும் செல்வாக்கு இருந்தது.
ஆனால் 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இராஜன் செல்வநாயகம் என்பவர் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இது தமிழரசுக்கட்சிக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. அவர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவருக்கு செல்வாக்கு இருந்தது. இறுதி நேரத்தில் தமிழரசுக்கட்சியினர் இராஜன் செல்வநாயகம் - யாழ்ப்பாணத்தான் என்று பிரசாரம் செய்தனர். அவர் வடமராட்சியைச் சேர்ந்தவர். இறுதியில் அவர் 23,082 வாக்குகளைப் பெற்று 2வது பாரளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். சுதந்திரக் கட்சி ஆட்சியில் மட்டக்களப்பு அரசியல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மட்டக்களப்பில் இருந்த வடபகுதி வாக்காளர்கள் அவருக்கே வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல யாழ்ப்பாணத் தொகுதியிலும் மதவாதம் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டது. ஜீ. ஜீ. பொன்னம்பலம் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக 1947, 1952, 1965 தேர்தல்களில் வெற்றிபெற்றார். அவர் கைத்தொழில், மீன்பிடித்துறை அமைச்சராக இருந்ததால் யாழ். கரையோர பிரதேசங்களான கொழும்புத்துறை, பாஷையூர், குருநகர், நாவாந்துறை கத்தோலிக்க மக்களுக்கு கடற்தொழில் அபிவிருத்திக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தார். அதனால் இப்பிரதேச மக்களுக்கு ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது.
1960 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை தேர்தல்களில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் சுயேட்சையாக போட்டியிட்ட யாழ். மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் தோல்வியடைந்தார். எனினும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. 1965 ஆம் ஆண்டுத் தேர்தல் வந்தது. ஜீ. ஜீ. பொன்னம்பலம் போட்டியிட்டார். அல்பிரட் துரையப்பாவும் போட்டியிட்டார். தமிழரசுக் கட்சியினர் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சீ. எக்ஸ். மாட்டீன் அவர்களைத் தமது கட்சி வேட்பாளராக நியமித்தனர். சீ. எக்ஸ். மாட்டீன் ஒரு கத்தோலிக்கர். அவர் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் ஜீ. ஜீ. பொன்னம்பலமே வெற்றி பெற்றார். கத்தோலிக்க மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு தமிழரசுக்கட்சியினர் தீவிர பிரசுரங்களை மேற்கொண்டனர். இந்துக்கள் அதிகமாக வாழுகின்ற காங்கேசன்துறைத் தொகுதியில் கிறீஸ்தவரான எஸ். ஜே. வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதேபோல இந்துக்க்ள் அதிகமாக வாழும் நல்லூர் தொகுதியில் டாக்டர். ஈ. எம். வி. நாகநாதன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். எனவே, " ஏன் யாழ்ப்பாணத்திலும் ஒரு கிறீஸ்தவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படக்கூடாது? " என்று தமிழரசுக்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
ஜீ. ஜீ பொன்னம்பலத்தை எப்படியும் தோல்வியடையச் செய்யவேண்டுமென்று தமிழரசுக்கட்சியினர் கத்தோலிக்க மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் பிரசாரம் செய்தனர். ஒரு கத்தோலிக்கருக்கு கத்தோலிக்க மக்கள் வாக்களிக்க வேண்டுமெனக் கூறினார்கள். 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சீ. எக்ஸ். மாட்டீன் வெற்றி பெற்றார். ஆனால் சில காலத்தால் தமிழரசுக்கட்சியினர் சில நடவடிக்கையால் அவர் கட்சியை விட்டு விலகினார். சுயேட்சையாக இருந்து யாழ்ப்பாணத்தொகுதிக்கு பலவற்றைச் செய்தார்.
இதேபோல மன்னார் தொகுதியை எடுத்துக்கொண்டால், வீ. ஏ. அழகக்கோன் 1956 ஆம் ஆண்டு முதல் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். அவர் ஒரு கத்தோலிக்கர். மன்னார் தொகுதியில் கத்தோலிக்கர்களே பெருமளவு வாழுகின்றனர். அதனால் அவர் 1956 முதல் 1970 வரையுமான தேர்தல்களில் வெற்றிபெற்று வந்தார். 1974 இல் அவர் திடீரென மரணமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அன்றைய அரசியல் யாப்பின்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மரணமானால், அல்லது ராஜினாமாச்செய்தால் உடனே இடைத்தேர்தல் நடத்தப்படும்.தற்போதுள்ளதைப் போல இன்னொருவர் நியமிக்கப்படுவதில்லை.
மன்னார் தொகுதியில் கத்தோலிக்கர்கள் அதிகமாக வாழுவதால் ஜோண் மார்க் என்பவரைத் தமிழரசுக்கட்சி இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியது. மன்னார் நகரசபைத் தலைவரான எஸ். ஏ. ரகீமை ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளரக நிறுத்தியது. நகரசபைத்தலைவர் ரகீமுக்கு மன்னாரில் சகல இன மக்களிடமும் செல்வாக்கு இருந்தது. ஆனால் தமிழரசுக்கட்சியினர் ஜோண் மார்க் கத்தோலிக்கரெனப் பிரசாரம் செய்தனர். எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ரகீம் 1974 பெப்ரவரி 25 ஆம் திகதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டுமல்ல ஏனைய தேர்தல்களிலும் பிரதேசவாதம், மதவாதம் என்பவற்றை பிரசாரங்களில் மேற்கொண்டனர். கொழும்பு மாவட்டத்தில் தமிழர்களின் வாக்கெடுப்பைப் பெறுவதற்கு பிரதேசவாதம் பயன்படுத்தப்ப்ட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல ஏனைய பகுதிகளிலும் தேர்தல் காலங்களில் பிரதேசவதம், மதவாதம் பேசி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவது வழமையாகிவிட்டது.
No comments:
Post a Comment