நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்து அந்நாடு ஜனநாயக குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு இந்த தேர்தலில் மாவோயிஸ்ட்கள் அமோக வெற்றி பெற்றனர்.
மன்னராட்சியை எதிர்த்து போராடி வந்த மாவோயிஸ்ட்கள் வெற்றி பெற்றதை அடுத்து, நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
தலைநகர் காட்மாண்டுவில் உள்ள பீரேந்திரா சர்வதேச மாநாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 572 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதில் நேபாளத்தில் மன்னராட்சியை ரத்து செய்து விட்டு குடியரசாக பிரகடனம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து நேபாளம் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு கூட்டமைப்பாக அறிவிக்கப்பட்டது.
மன்னர் ஞானேந்திரா அரண்மனையிலிருந்து வெளியேற 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்ட மே 28-ந் தேதி ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் புதிய அதிபர் மற்றும் பிரதமர் பொறுப்பேற்க உள்ளனர். மந்திரி சபையும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment