அமெரிக்க ஓப்பன் டெனிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இவருடன் மோதிய ரபேல் நடால் தோல்வியடைந்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடாலை இவர் 62, 76, 46, 64 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த அரையிறுதிப் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு நேற்று முன்தினம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற ஆன்டி முர்ரே நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 13 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கு குறி வைத்துள்ள முன்னணி வீரர் ரோஜர் பெடரருடன் மோதினார்.
அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு தகுதி பெற்றிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் ஓப்பன், பிரெஞ் ஓப்பன் மற்றும் ஒலிம்பிக் பட்டங்களை வென்ற நடாலை வீழ்த்தியது பெருமிதமளிப்பதாகவும் முர்ரே தெரிவித்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள 3 ஆவது பிரிட்டன் வீரர் முர்ரே என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வீரரான பெடரருடன் இறுதிச் சுற்றில் மோதுவது தமக்கு கிடைத்த கௌரவம் என்றும் முர்ரே கூறியுள்ளார்.
No comments:
Post a Comment