பாராலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் பிரேஸில் வீரர் புதிய உலக சாதனை

பீஜிங் பாராலிம்பிக்கில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் 100 மீற்றர் ஓட்டத்தில் பிரேஸில் வீரர் லுகாஷ் ராடோ புதிய உலக சாதனை படைத்தார். சீனத் தலைநகர் பீஜிங்கில் ஊனமுற்றோருக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 100 மீற்றர் டி 11 பிரிவில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. இதில் பிரேஸிலின் லுகாஷ் ராடோ 11.03 விநாடி நேரத்தில் ஓடி தங்கம் வென்றார். இரண்டாவதாக வந்த அங்கோலாவின் ஜோஸ் அர்மன்டோ வெள்ளிப் பதக்கம் வென்றார். வெண்கல பதக்கம் பிரான்ஸ் வீரருக்கு கிடைத்தது.

டி36, டி44 பிரிவு 100 மீ, போட்டிகளில் உக்ரைன் மற்றும் தென் ஆபிரிக்க வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

பெண்களுக்கான 100 மீற்றர் டி11 பிரிவில் உக்ரைனின் ஆக்ஷனா போத்துர்சக் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலத்தை பிரிட்டன், ஸ்பெயின் வீராங்கனைகள் பெற்றனர். நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் பிரிஸ்டைல் பிரிவில் பிரேசில் வீரர் அன்ட்ரூ பிராஸில் புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். ஆண்களுக்கான 100 மீற்றர் பட்ட பிளை பிரிவில் புதிய உலக சாதனை படைத்து ஸ்பெயின் வீரர் எங்ஹமது தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

வில்வித்தை போட்டிகளில் தகுதி சுற்றுகளில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் 4 பழைய சாதனைகள் தகர்த்தப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. முதலாவதாக ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தை பிரிவில் பிரிட்டனின் ஜான் ஸ்டப்ஸ் 691 புள்ளிகள் எடுத்து உலக சாதனை படைத்தார். இந்தப் பிரிவில் இதற்கு முன் 679 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

பெண்கள் பிரிவில் பிரிட்டனின் டேனியலி பிரவுண் 676 புள்ளிகள் எடுத்து புதிய பாராலிம்பிக் சாதனை படைத்தார். கொரிய வீராங்கனை லீ வா சுக் அதிக புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். இதே பிரிவில் சீனாவின் ஜியோ ஹாங்காங் பாராலிம்பிக் சாதனை படைத்தார்.

No comments: