நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்கன் ஓப்பன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் மகளிர் டெனிஸ் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம் பெற்றுள்ளார்.
நியூயோர்க்கில் அமெரிக்கன் ஓப்பன் டெனிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும் செர்பியாவின் ஜெலினா ஜங்கோவிக்கும் மோதிக் கொண்டனர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜங்கோவிக்கை 64, 75 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை மூன்றாவது முறையாக செரீனா வில்லியம்ஸ் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் ஜங்கோவிக்குடன் கடுமையான மோதலை செரீனா வில்லியம்ஸ் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டியின் முதல் செட்டில் செரீனா ஆக்ரோஷமாக விளையாடி 4 நேரடி வெற்றிகளைப் பெற்று 52 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். பின்னர் ஜங்கோவிக் அதிரடியாக விளையாடி செரீனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதிலும், சமாளித்து ஆடிய செரீனா இறுதியில் ஜங்கோவிக்கை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.
டெனிஸ் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜெலினா ஜங்கோவிக் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று செரீனாவுடன் மோதினார். ஆனால் செரீனாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தில் அவர் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். 2002 ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவின் ஓப்பன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் 3 ஆவது முறையாக இந்தப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் மகளிர் டெனிஸ் தர வரிசையில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தைப் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment