கோழி முட்டைக்குள் பாம்பு குட்டி

ஆம்லெட் போடுவதற்காக கோழிமுட்டையை உடைத்தவர் அதற்குள் பாம்புக்குட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பீகார் மாநிலம் சமஸ்திபூருக்கு அருகே உள்ளது சம்து கிராமம். இந்த கிராமத்தைச்சேர்ந்த பகதூர் ராம் என்பவர் 2 கோழிகளை வளர்த்து வருகிறார். அந்த கோழிகள் போடும் முட்டைகளை அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வது வழக்கம்.

நேற்று பகதூர்ராமின் நண்பர் கிஷோர் குமார் என்பவர் ஆம்லெட் சாப்பிட ஆசைப்பட்டு பகதூரிடம் இருந்து ஒரு முட்டையை விலைக்கு வாங்கி வந்தார்.

அடுப்பில் தோசைக்கல்லை போட்டு கல் சூடானதும் முட்டையை உடைத்து தோசைக்கல்லில் ஊற்றினார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போட்டது. முட்டையில் இருந்து வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் விழுவதற்கு பதிலாக 5 அங்குல நீளமுள்ள குட்டி பாம்பு ஒன்று விழுந்ததுதான் அவருடைய அதிர்ச்சிக்கு காரணம்.

பாம்புக்குட்டியைப் பார்த்து வெலவெலத்துப்போன அவர் உடனே ஓடிச்சென்று நண்பர் பகதூர்ராமிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினார். முதலில் இதை நம்ப மறுத்த பகதூர் அந்த குறிப்பிட்ட கோழி போட்ட வேறு ஒரு முட்டையை உடைத்து பார்த்தார். அந்த முட்டையிலும் சுமார் 2-முதல் 3- அங்குள நீளமுள்ள பாம்பு குட்டி இருந்தது.

இந்த தகவல் காட்டுத்தீ போல கிராமம் முழுவதும் பரவியது. அடுத்த அரை அணி நேரத்தில் கிராமமே பகதூர் வீட்டு முன்பு திரண்டது. அதிசய கோழியையும் அது போட்ட பாம்பு முட்டைகளையும் அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச்சென்றனர். இது எப்படி சாத்தியம் என்று தங்களுக்குள் விவாதித்துக்கொண்டனர்.

இதற்கிடையே கால்நடை ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை டாக்டர் அஜய்குமார் தனது குழுவுடன் விரைந்து வந்து அந்த கோழியையும் அது போட்ட மற்ற முட்டைகளையும் பாம்புக்குட்டியையும் ஆய்வுக்காக எடுத்துச்சென்றார்.

அவர் கூறும்போது, "என்னால் இதை நம்பவே முடியவில்லை, அதிசயமாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.கோழி முட்டைக்குள் பாம்புக்குட்டி இருந்ததைத்தொடர்ந்து அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடைகளில் யாருமே முட்டை வாங்க வில்லை. இதனால் முட்டை விற்பனை முற்றிலும் நின்று விட்டதாக கடைக்காரர்கள் கூறினார்கள்.

No comments: