மனித குலத்தைத் துன்பங்களிலிருந்து விடுவிப்பதற்காகவே மண்ணில் வலம் வந்தவர் புத்தபெருமான். "ஏழைகளுக்குச் செய்யும் உதவிகள் எனக்குச் செய்யப்படுபவை' என்று இதயம் திறந்தவர் இயேசுநாதர். ஓர் அநாதை அழும்பொழுது அவன் விழிகளிலிருந்து வழியும் கண்ணீர் ஆண்டவன் கைகளில் படுகிறது என்றார் நபிகள் பெருமான்.
"காக்கைக் குருவி எங்கள் ஜாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம்'என்று பிரபஞ்சத்தைப் பாரதியின் பாதையில் பேதமின்றி முழுமையாகத் தழுவிக்கொள்பவரே உண்மையான சமயத் தொண்டன். இத்துடன் சத்தியம், ஞானம், அனர்த்தம் என்னும் மூன்றின் கலைவையாகக் காட்சிதரும் கடவுளைத் தேடுதல் மட்டுமே சமயமில்லை. கதியற்றவர்களுக்குத் தொண்டு செய்வதே உயர்ந்த சமயப் பணி இத்துடன் மனிதன் பிறருக்குத் தொண்டு செய்வதற்காக பிறந்தவன் என்பது மகாவீரரின் வாக்கு.
மேலே கூறப்பட்ட வாக்கியப்படி நம் மத்தியில் வாழ்ந்து அண்மையிலே நம்மை எல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு பிறப்பறுத்துச் சென்றுவிட்ட தமிழ் கூறும் நல்லுலகில் மதிப்புடனும் மாட்சியுடனும் பிரகாசித்த தெய்வத் திருமகள், சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியாவார்.
மேலும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் நிர்வாகப் பணிகளுக்குப் பொறுப்பாகவிருந்து இவ்வாலயத்தின் முன்னேற்றத்திற்காக இவர் மகத்தான சேவையாற்றியுள்ளார். இத்துடன் இவர் சமயப் பணி, சமூகப்பணி, கல்விப்பணி, அறப்பணி, கலைப்பணி யாவற்றையும் மக்கள் யாவரும் வியக்கும் வண்ணம் செய்து மக்களின் மனதிலே ஓர் உதயசூரியனாக விளங்கினார். இவர் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பன்னிரண்டு பிள்ளைகளோடு தொடங்கி இவ்வில்லம் உயர்ச்சியும் செழுமையும் அடைவதற்காக முன்னின்று உழைத்தார். மேலும், இவ்வில்ல வளர்ச்சிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சைவத்தமிழ் மக்கள் நிதியுதவி, மதியுதவி, சரீரவுதவி யாவற்றையும் "மாரி பொய்ப்பினும் பாரியுள்ளவரை வாரி வழங்குவான் என்ற வாக்குக்கு அமைய சகல உதவிகளையும் செய்து அன்னையார் இவ்வில்லத்தை பிள்ளைகளுக்கு யாதொரு குறைவுமின்றி பராமரிப்பதற்காக வழிவகுத்தார்கள்.
இவ் துர்க்காபுரம் மகளிர் இல்லம் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வரும் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழலினாலும் கொந்தளிப்பினாலும் செல் தாக்குதல்களினாலும் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. ஆயினும், அம்மையார் அவர்கள் தமது தளராத அஞ்சாமையினாலும் நிர்வாகத் திறமையினாலும் ஆளுமையினாலும் இறையருளினாலும் மதியூகத்தாலும் எப்பக்கமும் கோணாது இவ்வில்லத்தில் வாழுகின்ற பிள்ளைகளின் நலனையே கருத்தில் கொண்டு மகளிர் இல்லத்தை நன்கு நடத்திக் குழந்தைகளைக் காப்பாற்றினார்.
உண்மையிலேயே கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் ஓர் தூய தியாகியாகவும் சிறந்த சிந்தனைச் சிற்பியாகவும் பிறர் துன்பத்திற்கு இரங்கும் கனிவும் தன்னுயிரைத் தியாகம் செய்து பிறர் துயரைத் துடைக்கத் துணியும் செயலாண்மையும்மிக்கவராக நம்மத்தியில் வாழ்ந்த ஒரு பெருமகள்! மேலும், தமிழகத்தில் வாழுகின்ற மக்களின் நாவிலே "காவேரி' ஆற்றின் நாமம் நிலைத்து நிற்பதுபோல யாழ். குடாநாட்டில் வாழுகின்ற சைவத் தமிழ் மக்களின் மனதிலும் கொழும்பு வாழ் சகல சமூக மக்களின் மனதிலும் இவரின் தங்கம்மா நாமம் என்றும் நிலைத்து நிற்கின்றது.
உலகிலே தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வோர் ஒரு சிலரே. இத்தகையோராலேயே உலகம் நிலை பெற்றுள்ளது என ஆன்றறிந்த அறிவினையுடையோர் கூறுவர். பண்புடையோர் பட்டுண்டுலகம் அது விண்மேல் மாண்புக்கு மாய்வது மண் என்ற குறளுக்கு அமைய தன்னுடைய கஷ்ட, துன்பங்களைப் பாராது தன்னை நாடிவந்த மக்களின் துன்பங்கள், துயரங்கள் யாவற்றையும் நீக்கி வள்ளலார் கூறியது போல "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்' நான் வாடினேன் என்ற வாக்கு அமைய வாழ்ந்து காட்டினார் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள்.
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் "யான் எல்லாம் வல்லேன்' என்றெண்ணிய தாயுமில்லை, சொல்லியதாயுமில்லை.'ஆனால், அவைகள் யாவும் அவருடைய துணிந்த நடையாலும் பணிந்த மொழியாலும் பிரதிபலிக்கக்கூடியதாக அமைந்திருந்தது. மேலும், இறையியல் மேதை "உவில்லியம்' கூறியது போல "இறைவனிடமிருந்து உன்னதமானவற்றை எதிர்பார், இறைவனுக்காக உன்னதமானவற்றை' எத்தணி' என்ற கருத்திற்கு அமைய தம் வாழ்க்கை ஓட்டத்தை திறம்பட ஓடி முடித்தார்.
மேலும், தெய்வத்திருமகள், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நால்வகை நெறியில் நயம்படவாழ்ந்து நல்லோர் போற்ற விளங்கினார். "அன்புடையார் என்பு உரியர் பிறர்க்கும்' என்ற குறள் நெறிக்கு அமைய எல்லோர்க்கும் இனியவளாய், வல்லவளாய், வளம் நலமிக்கவளாக எம்மத்தியில் வாழ்ந்த தெய்வப் பெருமகள் தான் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள். உண்மையிலேயே கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு சைவ உலகிற்கு மாபெரும் இழப்பாகும். சமயத்தையும் சமூகத்தையும் நல்வழியில் இட்டுச்செல்வதே இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம் என்பதை தனது செயலால் நிரூபித்துக்காட்டியவர் அம்மையார் என்பதை உலக சைவப் பேரவை (இலங்கைக் கிளை) நன்கு அறியும்.
இத்துடன், அம்மையாரின் ஆலோசனைகளை உலக சைவ பேரவை (இலங்கைக்கிளை) நன்கு மதித்து ஆக்கபூர்வமான பல பணிகளைத் திறம்படச் செய்துள்ளது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். மேலும், வடபுலத்தில் இன்றைய பல்வேறு நெருக்கடிகள் மத்தியில் சற்றும் சளைக்காது தனது இறுதி காலம் வரை மனம், வாக்கு, காயம் என்ற திரிகரண சுத்தியுடன் தொண்டுசெய்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சேவைகள் காலத்தால் அழியாதனவாக உயர்ந்த இலட்சியங்களையும் சிந்தனைத் தெளிவையும் செயலாற்றும் திறனையும் பெற்றிருந்த அன்னையார் தன் வாழ்க்கையில் சந்தித்த இடர்கள், பிரச்சினைகள் பல அவற்றையெல்லாம் புன்னகையுடன் எதிர்கொண்டு வெற்றி கண்டாரெனில் அதன் இரகசியம் அவர் தம் வாழ்வில் கைகொண்ட அமைதி நிறைந்த தூய்மையான இறை பக்தியேயாகும்."கருமம் செய், பலனை பகவானுக்கே விட்டுவிடு' என்று கர்மயோகத் தத்துவமே அவர் வாழ்வு அவர் வெற்றி.
அன்னையாரின் சைவப் பண்புக்கும் தகைமைக்கும் என்னிடம் அவர் காட்டிய அன்புக்கும் அவரின் மறைவை ஒட்டி பின்வரும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தவுள்ளேன்.
"அகம் நிறைந்து எழுந்திடும் அன்பினாலே முகம் மலர்ந்து ஒளிர்ந்திடும் தெய்வத் திருமகள் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களே, நாம் இனிச் செய்வதை அறியோம், இல்லை என்கிற சொல்லை அறியாப் பொன்மனச் செல்வியே, எங்கு நீ போயினை! உமது பிரிவை எங்ஙனம் ஆற்றுவோம்' என சைவத் தமிழ் உலகு ஏங்குகிறது.
No comments:
Post a Comment