தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு நேற்று 90 வயது. கடந்த சில வாரங்களாக உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய மண்டேலா தென்னாபிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள கேப் மாகாணத்தில் தனது சொந்தக் கிராமத்தில் குடும்பத்தவர்களுடன் அமைதியான முறையில் பிறந்த தினத்தைக் கொண்டாடினார். 2004 ஆம் ஆண்டு தனது 85 வயதில் பொதுவாழ்வில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்ட அந்த மாமனிதரினால் உலகில் இடம்பெறுகின்ற அநீதிகளையும் கொடுமைகளையும் கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை. மனித குலத்தின் நலன்களில் மானசீகமான அக்கறை கொண்ட எவரினாலும் உண்மையில் பொதுவாழ்வில் இருந்து ஓய்வுபெற முடியாது. நேற்றைய தினத்தில் கூட தனது கிராமத்தில் வைத்து பேட்டியொன்றை அளித்த மண்டேலா உலகில் உள்ள ஏழைகளுக்கு தனவந்தர்கள் கூடுதல் உதவிகளைச் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ பிறந்த தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவிருக்கின்றன. "இப்போது எந்த அதிகாரத்தையோ அல்லது செல்வாக்கையோ கொண்டிராத ஓய்வுபெற்ற ஒரு வயோதிபரின் பிறந்த தினத்தை நீங்கள் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும்போது எமக்குப் பெரும் கௌரவமாக இருக்கிறது' என்று வானொலி மூலம் விடுத்த பிறந்த நாள் செய்தியில் அவர் தெரிவித்திருக்கிறார்.
தனது நாட்டின் முதல் கறுப்பு இன ஜனாதிபதியாகுவதற்கு முன்னர் நெல்சன் மண்டேலா தடைசெய்யப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக 27 வருடகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மண்டேலாவை விடுதலை செய்து இனஒதுக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமாதான முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக அவருடன் இணைந்து 1993 நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவரான தென்னாபிரிக்காவின் கடைசி வெள்ளையின ஜனாதிபதி எப்.டபிள்யூ.டி கிளாக் தெரிவித்திருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் மண்டேலாவை 20 ஆம் நூற்றாண்டின் மகத்தான தலைவர்களில் ஒருவர் என்று வர்ணித்திருக்கிறார். 90 வயதை அடைந்துவிட்டபோதிலும் மண்டேலா இன்னும் மிகுந்த துடிப்புடன் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நண்பர்களினால்அன்புடன் "மடிபா' என்று அழைக்கப்படும் மண்டேலா மூன்று மன்றங்களின் (ஊணிதணஞீச்tடிணிணண்) தலைவராக இருக்கிறார். உலகின் 50 முன்னணிப் பல்கலைக்கழகங்கள் கௌரவப்பட்டங்களை அவருக்கு அளித்திருக்கின்றன.
1999 இல் ஜனாதிபதிப் பதவியில் இருந்து இறங்கிய பின்னர் எயிட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரங்களை உலகம் பூராவும் முன்னெடுத்துவரும் அவர் இன்று சர்வதேச அரங்கில் தென்னாபிரிக்காவின் ஒரு நல்லெண்ணத் தூதுவராக உலா வந்து கொண்டிருக்கிறார். மண்டேலாவைக் கௌரவித்து அண்மையில் லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி உலகம் பூராவும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மண்டேலாவை சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி 1988 ஆம் ஆண்டிலும் லண்டனில் இது போன்ற நிகழ்ச்சியொன்று நடைபெற்றிருந்தது. 20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற லண்டன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் மண்டேலா எந்தளவுக்கு மதிக்கப்படுகின்றார் என்பதற்குச் சான்றாக அமைந்தது. பிரவேசிக்கும் இடங்களையெல்லாம் பிரகாசிக்க வைக்கும் சிரிப்பும் அவரது நகைச்சுவை உணர்வும் மக்களைத் தன்பக்கம் வென்றெடுப்பதில் மண்டேலாவுக்கு இருக்கின்ற அதிவிஷேடமான ஆற்றல்களாகும்.
மண்டேலாவின் தலைமைத்துவப் பண்பின் உச்சம் என்று சொல்லக் கூடியது முதல் ஐந்து வருடப் பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக இருந்து விட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற ஆசை கிஞ்சித்தும் இல்லாமல் அதிகாரத்தில் இருந்து இறங்குவதற்கு அவர் எடுத்த தீர்மானமேயாகும். அவ்வாறு செய்ததன் மூலமாக அவர் தென்னாபிரிக்காவின் ஜனநாயக மாற்றம் தனியொரு தலைவரின் ஆளுமையையோ புகழையோ மையமாகக் கொண்டதாக வளராமல் தடுத்து, ஜனநாயகக் கட்டமைப்பை ஆரோக்கியமான முறையில் நிறுவனமயப்படுத்தினார். அவரது நாட்டின் ஜனநாயக நிறுவனங்களுக்கு இருக்கின்ற உறுதிப்பாடு ஆபிரிக்காவின் ஏனைய பல நாடுகளில் காணப்பட முடியாததாகும். இதற்கு சிம்பாப்வே அரசியல் நிலைவரங்கள் எடுத்துக்காட்டாகும். மிக நீண்டகாலம் பதவியில் இருந்த பின்னரும் கூட அதிகாரத்தில் இருந்து இறங்கத் தயங்கும் சிம்பாப்வே ஜனாதிபதி றொபேர்ட் முகாபேயின் நடவடிக்கைகளினால் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்திருக்கிறது. சிம்பாப்வேயில் தலைமைத்துவம் கவலைக்குரிய வகையில் தோல்வி கண்டிருக்கிறது என்று மண்டேலா அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.
அரசியல் நிலைவரங்கள் வேண்டிநிற்பதன் பிரகாரம் தனது செயற்போக்கை மாற்றிக்கொள்வதில் மண்டேலாவுக்கு இருந்த ஆற்றல் தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். 1960 களில் இன ஒதுக்கல் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை முழுவீச்சில் கட்டவிழ்த்துவிட்டபோது மண்டேலா தனது போராட்டத்தை காந்தியின் அகிம்சை மார்க்கத்தில் இருந்து ஆயுதப் போராட்டத்துக்கு மாற்றினார். பின்னர் 1990களில் மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அமைதிவழிப் பேச்சுவார்த்தை மற்றும் நல்லிணக்கப் போக்கிற்கு அவர் மாறினார். ஆனால், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதன் பின்னரே அவர் இதைச் செய்தார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக உறுதியளித்தால் மண்டேலாவை விடுதலை செய்வதாக 1985 இல் இன ஒதுக்கல் ஆட்சியாளர்கள் விதித்த நிபந்தனையை அவர் நிராகரித்தமை இங்கு கவனிக்கத்தக்கதாகும். அப்போது மண்டேலா ஆட்சியாளர்களிடம் கூறிய வார்த்தைகள் இவைதான் சுதந்திரமான மனிதனால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும்; சிறைக் கைதிகள் ஒப்பந்தங்களில் ஈடுபட முடியாது.
நன்மையே வெல்லும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் மனித குலத்தின் நல்வாழ்வு மீதான பற்றுமே மண்டேலாவின் நீடித்த புகழுக்கும் செல்வாக்கிற்கும் காரணமாகும். உலகிற்கு ஒரு தார்மீக வழிகாட்டியாக விளங்கும் மண்டேலாவின் காலத்தில் வாழ்வதென்பது நம் எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment