விளையாட்டுத் துறையில் கிடைக்கும் பரிசுத் தொகையைக் கொண்டு உலகளவில் முதல் பில்லியனராக (1 பில்லியன் = 100 கோடி) மாறிய விளையாட்டு வீரர் என்ற பெருமையை கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் பெறவுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற இதழான "போர்ப்ஸ்' அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டைகர் வூட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் மட்டும் இவர் விளையாட்டின் மூலம் பெற்ற தொகை 115 மில்லியன் டொலர்.
இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் (65 மில்லியன் டொலர்) இடம் பெற்றுள்ளார்.
டைகர் வூட்ஸ் விளையாட்டுத் துறையில் கால்பதித்த பின்னர், விளம்பரங்களில் நடித்ததன் மூலம் மட்டும் 750 மில்லியன் டொலர் ஈட்டியுள்ளார். தற்போது 32 வயதாகும் டைகர் வூட்ஸ், இதுவரை 50 கோல்ப் தொடர்களில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் அதிக போட்டித் தொடர்களில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதேபோல் சாம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றுவதிலும் விரைவில் அவர் உலக சாதனை படைக்கவுள்ளார். இதுவரை 14 சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்றுள்ள வூட்ஸ், ஜேக் நிக்கோலாஸ் சாதனையை (18 பட்டங்கள்) நிச்சயம் முறியடிப்பார் என கோல்ப் பார்வையாளர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
உலகளவில் மிகவும் ரசிக்கப்படும் நபரான வூட்ஸ், கோல்ப் போட்டிகளில் விளையாடும் போது அதை ஒளிபரப்பும் ரி.வி. நிறுவனத்தின் புகழ் 3 மடங்கு உயர்கிறது. சமீபத்தில் சான்டியாகோவில் நடந்த யு.எஸ்.ஓப்பன் கோல்ப் சாம்பியன்ஷிப் பட்டத்தை வூட்ஸ் கைப்பற்றிய போது உலகெங்கிலும் பலர் அதை ரி.வி.யில் பார்த்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து புகழ்பெற்று வரும் வூட்ஸ், 2010 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகிவிடுவார் என்று "போர்ப்ஸ்' இதழ் கணித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு மட்டும் 1479 கோடி ரூபா வருவாய் ஈட்டியுள்ளார் வூட்ஸ். விளம்பரங்களில் நாயகனாகப் பார்க்கப்படும் டைகர் வூட்ஸ், அதனால் மட்டும் இதுவரை 9350 கோடி ரூபாவை வருவாயாகப் பெற்றுள்ளார். அவர் பங்கேற்கும் விளம்பரத்தால் கம்பனிகளும் கோடிக்கணக்கில் இலாபமடைந்து வருகின்றன. அவரை ஒப்பந்தம் செய்துள்ள நைக் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 7560 கோடி ரூபாவுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment